முகப்பு
தலையங்கம்

சோதனைகளுக்கு நடுவில் சாதனை!

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும், பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியரிடத்திலும் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணிக்க முடியாது.

Updated On : 12 ஜூன் 2026, 6:55 am IST
பகிர்:

இனிவரும் காலங்களில் இந்தியாவின் வரலாறு எழுதப்படும்போது அசோகருக்கு முன் அசோகருக்குப் பின்; இஸ்லாமியப் படையெடுப்புக்கு முன், படையெடுப்புக்கு பின்; பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்துக்கு முன், அதற்குப் பின்; பண்டித ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்திர இந்தியா அமைந்ததற்கு முன், அதற்குப் பின் என்பதுபோல நரேந்திர தாமோதரதாஸ் மோடிக்கு முன், மோடிக்குப் பின் என்றுதான் எழுதப்படும். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும், பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியரிடத்திலும் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணிக்க முடியாது.

2014-இல் பள்ளியில் அடியெடுத்து வைத்த சின்னஞ்சிறு சிறுவன், இப்போது 12-ஆம் வகுப்பை முடித்து உயர்கல்விக்கு தயாராகும் காலகட்டம். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் ஒரு தலைமுறை உருவாகி இருக்கிறது.

இந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வியத்தகு மாற்றங்களுக்கு அவரது தலைமைதான் காரணம் என்பதை 12 ஆண்டுகளுக்கு முன்பு நாம் வாழ்ந்த இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும்.

Advertisement

Advertisement

12 ஆண்டுகளைக் கடந்தும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மூன்று பொதுத் தேர்தல்களை எதிர்கொண்டு ஒரு பிரதமரால் ஆட்சியில் தொடர முடிகிறது என்றால், எந்த அளவுக்கு அந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது. அதற்குப் பின்னால், ஒரு தனி மனிதனின் ஓய்வறியா உழைப்பும், சலிப்பே இல்லாத மன உறுதியும் இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. 2014 மே மாதம் 26-ஆம் தேதி பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து, இன்று வரையில் அதே சுறுசுறுப்பும், அதே உற்சாகமும், அதே போராட்ட குணமும், அதே தலைமைத்துவமுமாக பயணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

ஜூன் 10 -ஆம் தேதி, தொடர்ந்து 4,399 நாள்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெருமைக்குரியவராகி இருக்கிறார் நரேந்திர மோடி. இன்னமும் மூன்று ஆண்டுகள் பதவியில் தொடர்ந்து 2029-இல் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சுதந்திர இந்தியாவில் அதிக காலம் பிரதமராக இருந்தவர் என்கிற சாதனைக்கும் அவர் உரித்தாகக் கூடும்.

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு, 1947-இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்தியா குடியரசாகி 1952-இல் நடந்த பொதுத்தேர்தல் வெற்றியில் இருந்து கணக்கிட்டால், பண்டித ஜவாஹர்லால் நேருவின் பதவிக்காலத்தைக் கடந்திருக்கிறது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலம். வேறு எந்தப் பிரதமரும் இதுபோலத் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததில்லை.

1952-இல் முதலாவது தேர்தல் நடந்தபோது, 53 கட்சிகள்தான் களத்தில் இருந்தன. இப்போது 2024-இல் பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொண்டது 2,593 அரசியல் கட்சிகளை. பண்டித நேருவின் காலத்தில் வெறும் 17 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2014-இல் 83 கோடி. 1952-இல் இந்தியாவின் மக்கள்தொகை 34 கோடி என்றால், இப்போது 146 கோடிக்கும் அதிகம். இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை எத்தகையது என்பதை நாம் எடை போட வேண்டும்.

2014-க்கு முன்பு இருந்த ரயில்கள், ரயில் நிலையங்களின் நிலைமையுடன் இப்போதுள்ள நிலைமையை ஒப்பிட்டுப் பாருங்கள்; அன்று அண்ணாந்து பார்த்த விமானத்தில் இன்று சாமானியன் சர்வ சாதாரணமாகப் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்; இன்று இரு சக்கர வாகனம் இல்லாத, கைப்பேசி இல்லாத, தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத, வங்கிக் கணக்கு இல்லாத வீடே இல்லை என்கிற நிலையை ஏற்படுத்தி இருக்கும் நரேந்திர மோடி அரசின் சாதனையை, மனசாட்சி உள்ளவர்கள் மறுதலித்துவிட முடியாது.

"சப்கா சாத், சப்கா விகாஸ்' (அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி) என்கிற நரேந்திர மோடியின் கோஷத்தின் பின்னால் ஜாதி, மத வித்தியாசம் இல்லை என்பதைப் பயனாளிகள் உணர்வதன் வெளிப்பாடுதான் அவரது தொடர் வெற்றியின் ரகசியம். 12 கோடி வீடுகளில் "ஸ்வச் பாரத்' திட்டத்தால் கழிப்பறை வசதி; ஜன்தன் திட்டத்தால் 57 கோடி வங்கிக் கணக்குகள்; 4 கோடிக்கும் அதிகமான வீடுகள்-இவை எதிலுமே ஜாதியோ, மதமோ பார்க்கவில்லை எனும்போது, நரேந்திர மோடியின் "ஹிந்துத்துவ' அரசை எப்படி மதவாத அரசு என்று விமர்சிக்க முடியும்?

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்ட சவால்கள்தான் எத்தனை? அவை ஒவ்வொன்றையும் எதிர்கொண்டது மட்டுமல்ல, இன்று உலகமே மிகப் பெரிய எரிசக்தி நெருக்கடியிலும், பொருளாதாரப் பின்னடைவிலும் சிக்கித் தவிக்கும் நிலையிலும்கூட இந்தியாவை சாதுர்யமாக வழிநடத்திச் செல்ல அவரால் முடிகிறது என்பதுதான், ஒட்டுமொத்த உலகத்தையும் நரேந்திர மோடியை வியந்து பார்க்க வைத்திருக்கிறது.

1950 செப்டம்பர் 17-ஆம் தேதி தாமோதரதாஸுக்கு மூன்றாவது மகன் பிறந்தபோது, அந்தக் குழந்தைக்கு நரேந்திரன் என்று சுவாமி விவேகானந்தரின் பெயரைச் சூட்டினார்கள்.

அதனால்தானோ என்னவோ, அவரும் சுவாமி விவேகானந்தரின் "எழு, விழி, இலக்கை எட்டும் வரை நிற்காதே' என்கிற அறைகூவலைத் தனது தாரக மந்திரமாக்கி இருக்கிறார் போலும்...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.