முகப்பு
இந்தியா

ம.பி.யில் பாஜகவுக்கு 3 மாநிலங்களவை இடங்கள்: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

மத்திய பிரதேசத்தில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கு ஆளும் பாஜகவின் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால், மகேஷ் கேவத் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 12 ஜூன் 2026, 7:03 am IST
உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்
பகிர்:

மத்திய பிரதேசத்தில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கு ஆளும் பாஜகவின் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால், மகேஷ் கேவத் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

எதிா்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளா் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3 பாஜக வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.

இதற்கிடையே, தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக மீனாட்சி நடராஜன் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வில் பரிசீலனைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் தன் மீதான குற்ற வழக்குகளைக் குறிப்பிடாமல் மறைத்துள்ளதாகக் குறிப்பிட்டு மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அதிகாரி தவறாக நிராகரித்துள்ளாா். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய வகையிலான குற்ற வழக்கு விவரங்களை மட்டுமே வேட்புமனுவில் வேட்பாளா் குறிப்பிட வேண்டும். இதுபோன்ற குற்ற வழக்குகள் அவா் மீது இல்லை. மாறாக, நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட புகாரில், மீனாட்சி நடராஜனுக்கு அழைப்பாணை (சம்மன்) மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த மனு பரிசீலிக்கப்படுவதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டி.எஸ்.நாயுடு ஆட்சேபம் தெரிவித்தாா். மனுவின் நகல் தோ்தல் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என்று கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் மனு தாக்கல் செய்வதே சரியான வழிமுறை என்று குறிப்பிட்டு, இதிலுள்ள குறைபாடுகளைக் களைய மனுவை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.