முகப்பு
உலகம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேயை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (49) அமெரிக்காவை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள பிரிட்டனிலிருந்து நாடு கடத்த வேண்டும்

Updated On : 5 ஜனவரி 2021, 3:59 am IST
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே
பகிர்:


லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (49) அமெரிக்காவை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள பிரிட்டனிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் ராணுவம் மற்றும் யுத்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டது தொடர்பாக அந்நாட்டு அரசு சார்பில் அசாஞ்சே மீது தேசத் துரோகம், உளவு பார்த்தல் உள்ளிட்ட 17 பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டி பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அதிகபட்சமாக அவருக்கு 175 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

  இராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல்களையும், அவர்களுடைய அத்துமீறல்களையும் அம்பலப்படுத்துவதற்காகவே விக்கிலீக்ஸ் மூலம் ஆவணங்கள் வெளியிடப்பட்டதாகவும், அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் அளிக்கும் பாதுகாப்பின் கீழ் அவருக்கு பேச்சு-கருத்துரிமை  உண்டு என்றும் அசாஞ்சேக்கு ஆதரவாக ஆஜரான வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். 

Advertisement

Advertisement

இந்த வாதத்தை பிரிட்டனின் மாவட்ட நீதிபதி வனேசா பாரைட்ஸர் முழுமையாக  ஏற்க மறுத்தார். அவர் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில், "அசாஞ்சே வெளியிட்டுள்ள தகவல்கள் பேச்சுரிமையின் கீழ் வருவதாகக் கருத முடியாது. ஆனால், அசாஞ்சே மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. அமெரிக்க சிறையில் அவர் எதிர்கொள்ளும் தனிமை காரணமாக மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அவரை அமெரிக்காவிடம் தற்போது ஒப்படைக்க இயலாது என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அமெரிக்க அரசு 
தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.