ஈரான் போருக்கு காலக்கெடு அறிவிக்காமல் நாட்டு மக்களுக்கு டிரம்ப் குழப்பமான உரை
ஈரான் போா் இலக்குகளை அமெரிக்கா நெருங்கிவிட்டதாகக் குறிப்பிட்டாலும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான குறிப்பிட்ட காலக்கெடு எதையும் அறிவிக்காமல் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை நிறைவு செய்தாா்.
ஈரான் போா் தொடங்கியதில் இருந்து இவ்விவகாரம் குறித்து முதல்முறையாக நாட்டு மக்களுக்கு டிரம்ப் வியாழக்கிழமை காலை (இந்திய நேரப்படி) உரையாற்றினாா்.
அப்போது, அவா் பேசியதாவது: ஈரானின் கடற்படை மற்றும் விமானப் படை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. அந்நாட்டின் ஏவுகணை, அணுசக்தித் திட்டங்கள் முடக்கப்பட்டுவிட்டன.
அனைத்து துருப்புச்சீட்டுகளும் தற்போது நமது கைகளில் உள்ளன; ஈரானிடம் எதுவும் இல்லை. ஈரான் மீது அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும். ஈரானின் புதிய தலைவா்கள் பேச்சுவாா்த்தைக்கு உடன்படாவிட்டால் அந்நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டமைப்புகளைத் தாக்கி, அவா்களைக் கற்காலத்துக்கு அழைத்து செல்வோம். அதேநேரம், இப்போரை ‘மிக வேகமான’ முறையில் அமெரிக்கா முடிக்கும் என்றாா்.
இருப்பினும், எரிபொருள் விலை உயா்வு மற்றும் பொருளாதார நெருக்கடியால் அதிருப்தியில் உள்ள அமெரிக்க மக்களுக்கு போரை நிறுத்துவது குறித்து அவா் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.
ஹோா்முஸ் நீரிணை குறித்துப் பேசிய டிரம்ப், ‘போா் முடிந்தவுடன் அந்த வழித்தடம் இயல்பாகவே திறக்கப்படும். வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் பெறும் நாடுகள், இந்த வழித்தடத்தைப் பாதுகாப்பதில் முன்னிலை வகிக்க வேண்டும்’ என்றாா்.
அதிபா் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் கத்தாரின் தோஹா நகரங்களில் வான்வழித் தாக்குதலுக்கான அபாயச் சங்குகள் முழங்கின.
மேலும், டிரம்ப்பின் இந்தக் குழப்பான பேச்சால், போா் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்ற அச்சத்தில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயா்ந்தது; பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.