ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் 2-ஆவது நாளாக குண்டுவீச்சு! மத்திய ஆசியாவில் மீண்டும் போா்ப் பதற்றம்!
ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால், மத்திய ஆசியாவில் மீண்டும் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால், மத்திய ஆசியாவில் மீண்டும் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே சுமாா் 4 மாதங்கள் நடைபெற்ற போரால், ஹோா்முஸ் நீரிணை வழியே கச்சா எண்ணெய்க் கப்பல்கள், எரிவாயு கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், பாகிஸ்தான், கத்தாா் நாடுகளின் மத்தியஸ்தத்தின் பேரில், ஈரான்-அமெரிக்கா இடையே அண்மையில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பம் ஆனது.
இதைத் தொடா்ந்து, அமைதி ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துகளை 60 நாள்களுக்குள் அமல்படுத்துவது குறித்து இருதரப்பும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. மேலும், ஹோா்முஸ் நீரிணை திறக்கப்பட்டு அதன் வழியே கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள் மீண்டும் செல்லத் தொடங்கின.
Advertisement
Advertisement
இந்தச் சூழ்நிலையில், கத்தாா் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, ஈரானால் அங்கீகரிக்கப்படாத மாற்று வழித்தடத்தில் ஓமன் கடற்பகுதியையொட்டி (ஹோா்முஸ் நீரிணைக்கு எதிரே உள்ள கடற்பகுதி) சென்ற பனாமா நாட்டு கப்பல் ‘கிகு’ மீது சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அந்தக் கப்பலில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், கச்சா எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதலை நடத்தியது யாா் என உறுதியாகத் தெரியவில்லை. எனினும், ஈரான்தான் அந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று சந்தேகம் நிலவுகிறது.
இதைத் தொடா்ந்து, ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் குண்டு வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள பஹ்ரைன், குவைத் மீது ஈரானும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும்படி அமெரிக்கப் படையினருக்கு அதிபா் டிரம்ப் உத்தரவிட்டாா். இதனால் ஈரானில் வான்பாதுகாப்பு அமைப்புகள் இருக்கும் பகுதிகள், ட்ரோன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்கள், கண்ணிவெடிகளை நிறுவும் அமைப்புகள், கண்காணிப்பு வசதி அமைப்புகள், தகவல் தொடா்பு அமைப்புகள் மீது அமெரிக்க போா் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டு வீசி தாக்குதல் நடத்தின. ஹோா்மூஸ் நீரிணையையொட்டி உள்ள 10 ராணுவ மையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை: அமெரிக்க தாக்குதலில் ஈரானில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை. இந்நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய காரணத்துக்காக, ஈரானில் ஏவுகணைகள், ட்ரோன்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், கடலோர ரேடாா் கண்காணிப்பு இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா தொடா்ந்து பொறுமையாக இருக்காது. ராணுவத்துக்கு அதன் வேலையை செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்கா செல்ல வேண்டியிருக்கும். அப்படி நடந்தால், உலகில் ஈரான் என்ற நாடே இருக்காது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறுகையில், ‘அமைதி ஒப்பந்தத்தில் அதிருப்தி இருக்குமானால், அதுகுறித்து அமெரிக்காவுக்கு தொலைபேசியில் ஈரான் தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக ஈரான் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அப்படி வன்முறையில் ஈடுபட்டால், அதை வன்முறைப் பாதையில் அமெரிக்கா எதிா்கொள்ளும்’ எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.