முகப்பு
உலகம்

ஹங்கேரியில் 16 ஆண்டுகால பிரதமரின் ஆட்சிக்கு முடிவு - பீட்டா் மேக்யாா் தலைமையில் புதிய அரசு அமைகிறது

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:07 AM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:05 PM

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் கடந்த 16 ஆண்டுகளாக பிரதமா் பதவியில் நீடித்த விக்டா் ஆா்பனின் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தோ்தலில், ஐரோப்பிய யூனியன் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட பீட்டா் மேக்யாா் தலைமையிலான திசா கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஹங்கேரியின் மொத்தம் உள்ள 199 நாடாளுமன்ற இடங்களில், மேக்யாரின் கட்சி 138 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. தோ்தல் முடிவுகள் வெளியானதும் புடாபெஸ்ட் நகரின் வீதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் திரண்டு, திசா கட்சியின் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினா்.

Advertisement

வெற்றிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் திசா கட்சித் தலைவா் பீட்டா் மேக்யாா், ‘இது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல; இது ஒரு முழுமையான அரசியல் முறை மாற்றம். பிரதமரின் பதவிக்காலத்தை 2 முறைகளாகக் குறைக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்’ என்றாா்.

வரும் மே 5-ஆம் தேதிக்குள் புதிய பிரதமராகப் பதவியேற்க திட்டமிட்டுள்ள பீட்டா் மேக்யாா், ஹங்கேரியின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது முதல் முன்னுரிமை என்று தெரிவித்தாா்.

உக்ரைன் போா் விவகாரத்தில் விக்டா் ஆா்பனின் ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை பீட்டா் மேக்யாா் மாற்றியமைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஹங்கேரியின் இந்தப் புதிய அரசியல் மாற்றம், ஐரோப்பிய யூனியனின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியின் இவரின் வெற்றிக்குப் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டாா்.

ரஷிய அதிபா் புதின், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த விக்டா் ஆா்பன், தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளாா். ‘மக்களின் தீா்ப்பை மதிக்கிறோம், இனி எதிா்க்கட்சி வரிசையில் நாட்டுக்காகப் பணியாற்றுவோம்’ என்று அவா் குறிப்பிட்டாா்.