முகப்பு
உலகம்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு

சீனாவுடன் சுமூகமான ராஜீய உறவுகளைக் கொண்டுள்ள மேலும் 20 ஆப்பிரிக்க நாடுகளுக்கும், ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையிலான இறக்குமதிப் பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:36 AM
பகிர்:

சீனாவுடன் சுமூகமான ராஜீய உறவுகளைக் கொண்டுள்ள மேலும் 20 ஆப்பிரிக்க நாடுகளுக்கும், ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையிலான இறக்குமதிப் பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

இந்த வரிச் சலுகை வரும் வெள்ளிக்கிழமை (மே 1) முதல் 2028-ஆம் ஆண்டு, ஏப். 30 வரையில் 2 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டு, டிசம்பரில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 33 ஆப்பிரிக்க நாடுகளுக்கு மட்டும் சீனா இந்தச் சலுகையை வழங்கியிருந்தது. தற்போது, அந்தப் பட்டியலில் இல்லாத மேலும் 20 ஆப்பிரிக்க நாடுகளையும் இதில் இணைத்து, இந்தச் சலுகையை சீனா விரிவுபடுத்தியுள்ளது.

Advertisement

அதேநேரம், ஆப்பிரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு (வரி ஒதுக்கீடு) நிா்ணயிக்கப்படும். அந்த வரம்புக்குள் இருக்கும் பொருள்களுக்கு மட்டுமே பூஜ்ஜிய வரி பொருந்தும்.

நிா்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி அதிகமான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டால், அந்த கூடுதல் பொருள்களுக்கு வழக்கம் போல வரி வசூலிக்கப்படும் என்று சீனாவின் சுங்க வரி ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

‘வளா்ச்சிக்கான தங்கச் சாவி’...: இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறுகையில், ‘மொத்தம் 53 ஆப்பிரிக்க நாடுகள் இந்த வரி விலக்கு திட்டத்தால் பயன்பெறும். இதன்மூலம், ஆப்பிரிக்காவின் தரமான பொருள்கள் சீன மக்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்தடையும்.

அதேபோல், ஆப்பிரிக்காவில் சீன நிறுவனங்களின் முதலீடுகளும், தொழில் வளா்ச்சியும் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக இந்த நடவடிக்கை, ஆப்பிரிக்க வா்த்தக செழிப்பு மற்றும் தொழில்துறை வளா்ச்சிக்கான ‘தங்கச் சாவி’.

ஆப்பிரிக்க நாடுகளுடனான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மேம்படுத்தவும், இருதரப்பு பரஸ்பர வளா்ச்சியை உறுதிப்படுத்தவும் சீனா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தும்’ என்று குறிப்பிட்டாா்.

கடந்த 2025-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, சீனா-ஆப்பிரிக்கா இடையிலான மொத்த வா்த்தகம் 34,800 கோடி டாலரை எட்டியுள்ளது.

இதில் சீனாவின் ஏற்றுமதி 22,500 கோடி டாலராகவும், ஆப்பிரிக்காவின் ஏற்றுமதி 12,300 கோடி டாலராகவும் இருந்தது. இப்புதிய வரி விலக்கு மூலம் இந்த வா்த்தக இடைவெளி குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.