முகப்பு
இணையம் ஸ்பெஷல்

2026-ல் பணி ஓய்வுபெறுபவரா? ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன்பு அறிய வேண்டியது!

2026-ல் பணி ஓய்வுபெறுபவராக இருந்தால் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன்பு அறிய வேண்டிய தகவல்கள்.

Updated On : 5 ஜூன் 2026, 3:30 pm IST
வருமான வரிக் கணக்கு - IANS
பகிர்:

நடப்பாண்டில் பணி ஓய்வு பெறவிருப்பவர்கள், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பு, எந்த அளவுக்கு வரி விலக்குடன் கூடிய விடுப்புப் பணமாக்கலைக் கோரலாம் என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

விடுப்புகளை பணமாக்கும் விதி

ஊழியர்கள், ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தங்களுக்கான விடுப்புகளை பயன்படுத்தாமல், அதனை ஒப்படைத்து பணமாக்கிக் கொள்ள விதிமுறை உள்ளது.

Advertisement

Advertisement

இருப்பினும், அதற்கான வரி விதிப்பு, அந்தப் பணம் எப்போது பெறப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் அமைகிறது. பணியில் இருக்கும்போதே விடுப்புப் பணமாக்கல் பெறப்பட்டால், முழு சம்பளமாகக் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும். ஆனால், ஓய்வு பெறும்போதோ அல்லது பணியிலிருந்து விலகும்போதோ அது பெறப்பட்டால், வரிச் சலுகைகள் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பணியாற்றுவோர் விடுப்புப் பணமாக்கலுக்கு வரி

ஆமாம். ஒருவர் பணியில் இருக்கும்போது பெறப்படும் விடுப்புப் பணமாக்கல், பொதுவாக வருமானமாகக் கருதப்பட்டு ஆண்டு வருவாய்க்கான வரி விதிக்கப்படும். இந்த விதி அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்கள் இருவருக்கும் பொருந்தும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் சிறப்பு வரி விலக்குகள், பொதுவாக ஓய்வு, ராஜிநாமா அல்லது பணி நீக்கத்தின் போது விடுப்புப் பணமாக்கல் வழங்கப்படும்போது மட்டுமே பொருந்தும்.

விடுப்புப் பணமாக்கலுக்கு முழு வரி விலக்கு உண்டா?

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பல வரிச் சலுகைகளைப் பெறுகிறார்கள். ஓய்வுபெறும் நேரத்தில் பெறப்படும் விடுப்புப் பணமாக்கலுக்கு, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (10 AA) (i) -இன் கீழ் வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் பொருள், விடுப்புப் பணமாக்கலாகப் பெறப்பட்ட முழுத் தொகையையும் ஓய்வுபெற்றவுடன் வரி இல்லாத வருமானமாகக் கோரலாம்.

இது தனியார், பொதுத்துறை ஊழியர்களுக்குப் பொருந்துமா?

தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, ஓய்வுபெறும்போது பெறப்படும் விடுப்புப் பணமாக்கலுக்கு குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. அந்த வரம்புக்கு அதிகமாக வரும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். இந்த வரி விலக்கு பிரிவு 10(10AA)(ii)-இன் கீழ் கிடைக்கிறது. ஒருவர் பெரும் வருவாய், ஈட்டிய விடுப்பு கையிருப்பு, ஈட்டிய விடுப்பை அளித்து பெறும் தொகை இவற்றைப் பொருத்து அமையும்.

இந்த வரி விலக்கு கணக்கிடப்படும் முறை?

அரசு சாரா ஊழியர்களுக்குக் கிடைக்கும் விலக்கு, குறிப்பிட்ட நான்கு தொகைகளில் எது மிகக் குறைந்த தொகையோ அதுவாகு:

1. பெறப்பட்ட விடுப்புச் சம்பளம், 2. பத்து மாத சராசரி சம்பளம், 3. அறிவிக்கப்பட்ட வரம்பான ரூ. 25 லட்சம், 4. தகுதியான ஈட்டிய விடுப்பின் மதிப்பு. இவற்றைக் கணக்கிட்டு இதில் எது குறைவானதோ அது கிடைக்கும்.

இது பற்றி கணக்கிட வேண்டும் என்றால், ஓய்வு பெறுபவர்கள் தங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்தத் தொகைகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

ரூ. 25 லட்சம் விடுப்புப் பணமாக்கல் வரி விலக்கு வரம்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட ஒரு அறிவிப்பின் மூலம், அரசு சாரா ஊழியர்களுக்கான வரி விலக்கு வரம்பை ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக அரசு உயர்த்தியது. இது, ஓய்வுபெறும் நேரத்தில் விடுப்புப் பணமாக்கலைப் பெறும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் வரிச் சலுகையை கணிசமாக அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடிஆர்-ல் விடுப்புப் பணமாக்கலை பதிவு செய்யும் முறை

ஒருவர் ஓய்வுபெறும்போது, விடுப்புப் பணமாக்கலை, வருமான வரிக் கணக்கில் 'சம்பளத்திலிருந்து வரும் வருமானம்' என்ற பிரிவின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

பிரிவு 10 (10 AA)-இன் கீழ் தகுதிபெறும் விலக்கு அளிக்கப்பட்ட பகுதியை, விலக்கு அளிக்கப்பட்ட வருமானமாகத் தனியாக வெளிப்படுத்த வேண்டும்.

மீதமுள்ள தொகையை வரிக்குட்பட்ட சம்பளமாகப் பதிவு செய்ய வேண்டும்.

வரி செலுத்துவோர் படிவம் 16 விவரங்களுடன் ஒத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Retiring in 2026? What you need to know before filing ITR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.