படிவம் 16-ல் வரி இல்லை என்றால்.. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய அவசியமில்லையா?
படிவம் 16-ல் வரி பூஜ்யம் என்றால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய அவசியமில்லையா என்பது குறித்து..
ஒரு அலுவலகத்தில் பணியாற்றி மாத ஊதியம் பெறுவோர், தற்போது தங்களது நிறுவனத்திடமிருந்து படிவம் 16-ஐ பெற்றிருப்பார்கள். ஒருவேளை, அதில் வரி ஏதுமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை என்று அர்த்தமாகுமா என சந்தேகம் எழும்.
ஆனால் பலரும் வரி செலுத்துவதையும், வருமானக் கணக்கை தாக்கல் செய்வதையும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்றே கூறப்படுகிறது.
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம், அது பல வகைகளில், பயனருக்கு பேருதவியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
அதாவது, வருமாக வரிக் கணக்குத்தாக்கல் பிரிவு 87A-ன் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகையைப் பெறுவோர், வரி செலுத்துவதிலிருந்துதான் சலுகை பெற வேண்டுமே தவிர, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதிலிருந்தே சலுகைப் பெறக் கூடாது.
நாட்டில், குறிப்பிட்ட வருமான வரம்பிற்குள் ஆண்டு வருமானம் கொண்ட, தனிநபருக்கு பிரிவு 87ஏ வரிச் சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையானது செலுத்த வேண்டிய வரியைக் குறைத்து, வரி செலுத்துவோரின் இறுதி வரித் தொகையை பூஜ்ஜியம் ஆக்குகிறது. இதுதான் பிரிவு 87ஏ அளிக்கும் சலுகை.
இந்த பிரிவு 87ஏ-இன் கீழ், தகுதியுள்ள வரி செலுத்துவோர் பழைய வரி முறையின்படி ஆண்டு வருவாய் ரூ. 7 லட்சம் வரையிலும், புதிய வரி முறையின்படி ரூ. 12 லட்சம் வரையிலும் (சம்பளம் பெறுவோரைப் பொறுத்தவரை, ரூ. 75,000 நிலையான கழிவைக் கணக்கில் கொண்டால் ரூ.12.75 லட்சம் வரை) உள்ள வருமானத்திற்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கலாம்.
வருமான வரி கணக்குத் தாக்கல் (ITR) செய்வது என்பது, வருமான அளவு மட்டுமல்லாமல் சில நிபந்தனைகளுக்கும் உள்பட்டது. எனவே, பிரிவு 87ஏ-ன்படி வரிச் சலுகையைப் பெற்ற ஒருவரின் படிவம் 16-ல் வரி ஏதுமில்லை என்று காட்டப்பட்டாலும், அவர்களின் வருமானம் அடிப்படை வரி விலக்கு வரம்பை மீறினாலோ அல்லது கட்டாயமாக வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய வேறு சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு இருந்தாலோ, கட்டாயம் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
சம்பளம் பெறுவோருக்கு மட்டுமே பிரிவு 87ஏ-ன் கீழ் வரிச் சலுகை வழங்கப்படும், ஆனால், ஒருவர் மூலதன ஆதாயம் மற்றும் சொத்துகள் போன்ற வகைகளில் வருவாய் பெற்றால், அதற்கான வரிக்கு பொருந்தாது.
ஒருவருக்கு வரி செலுத்தும் தேவை இல்லாவிட்டாலும் ஏன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், இந்த ஐடிஆர் கணக்கு என்பது வெறுமனே வருமான வரி விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு மட்டுமல்ல. அதையும் தாண்டி, விசா விண்ணப்பங்கள், கடன் நடைமுறைகள் மற்றும் பிற நிதிசார் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான வருமானச் சான்றை உறுதிப்படுத்தவும் உதவுகிறது என்பதாலேதான்.
படிவம் -16ல் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த வருமான வரிக் கணக்குத் தாக்கல் அமைகிறது. டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் போன்று ஏற்கனவே செலுத்திய தொகையைத் திரும்பப் பெறவும் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆண்டு தகவல் அறிக்கையில் சில பரிவர்த்தனைகளைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்து வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், நோட்டீஸ் வரும் அபாயமும் உள்ளது.
எனவே, படிவம் 16-ன்படி, வரி பூஜ்ஜியம் என்றாலும் சில நிபந்தனைகளின் பேரில், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். பயனுள்ளதும்கூட.
Regarding whether it is necessary to file an income tax return if the tax liability shown in Form 16 is zero...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.