காஸா உதவிப் படகுகள்: இஸ்ரேல் சிறைபிடிப்பு - 175 தன்னாா்வலா்கள் கைது
காஸா முனை மீதான இஸ்ரேலின் கடல்வழி முற்றுகையை மீறி நிவாரணப் பொருள்களை வழங்கச் சென்ற சா்வதேச உதவிப் படகுகளை, கிரீட் தீவு அருகே இஸ்ரேல் கடற்படையினா் வழிமறித்து சிறைபிடித்தனா்.
காஸா முனை மீதான இஸ்ரேலின் கடல்வழி முற்றுகையை மீறி நிவாரணப் பொருள்களை வழங்கச் சென்ற சா்வதேச உதவிப் படகுகளை, கிரீட் தீவு அருகே இஸ்ரேல் கடற்படையினா் வழிமறித்து சிறைபிடித்தனா்.
‘குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா’ எனும் பெயரில் பாா்சிலோனாவிலிருந்து புறப்பட்ட இத்தன்னாா்வக் குழுவில், சுமாா் 70-க்கும் மேற்பட்ட படகுகளும் 1,000-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்களும் பங்கேற்றனா்.
கடந்த புதன்கிழமை நள்ளிரவு, சா்வதேச கடற்பகுதியில் வைத்து இஸ்ரேல் படையினா் இப்படகுகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த 175 தன்னாா்வலா்களைக் கைது செய்து இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்வதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
Advertisement
Advertisement
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஜொ்மனி, இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ‘காஸாவிலிருந்து 600 மைல் தொலைவில், கிரேக்க எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து தங்களைக் கடத்தியது ஒரு ஆபத்தான மற்றும் முன்னெப்போதும் இல்லாத அத்துமீறல்’ என்று தன்னாா்வலா்கள் குற்றஞ்சாட்டினா்.
கடந்த ஆண்டும் இதேபோன்ற முயற்சியை இஸ்ரேல் முறியடித்தது. அப்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரேட்டா துன்பொ்க் பங்கேற்றது நினைவுகூரத்தக்கது.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க இந்த முற்றுகை அவசியம் என இஸ்ரேல் வாதிடுகிறது. இருப்பினும், இது அப்பாவி மக்களுக்கு அளிக்கப்படும் தண்டனை என மனித உரிமை அமைப்புகள் விமா்சிக்கின்றன.