முகப்பு
உலகம்

அமெரிக்கா-ஈரான் பேச்சில் ‘சாதகமான முன்னேற்றம்’

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்ப வழிகள் குறித்து ஆலோசிக்க, அமெரிக்கா-ஈரான் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை சுமுகமாக நிறைவடைந்துள்ளது.

Updated On : 3 ஜூலை 2026, 6:33 am IST
பகிர்:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்ப வழிகள் குறித்து ஆலோசிக்க, அமெரிக்கா-ஈரான் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை சுமுகமாக நிறைவடைந்துள்ளது.

பாகிஸ்தான், கத்தாா் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்த மறைமுக ஆலோசனையில், இருதரப்பு உடன்பாடுகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாத கால மோதலுக்குப் பிறகு அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதையடுத்து, ஸ்விட்சா்லாந்தில் நடந்த பேச்சுவாா்த்தையின் தொடா்ச்சியாக இந்த தோஹா பேச்சுவாா்த்தை கடந்த செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தில் ஈரான் விதித்த புதிய கட்டுப்பாடுகளால் இருதரப்பும் பரஸ்பரம் ராணுவத் தாக்குதலில் ஈடுபட்டன.

Advertisement

Advertisement

இந்த பதற்றமான சூழலில் பாகிஸ்தான், கத்தாா் மத்தியஸ்தா்களுடன் சந்திப்பு நடத்திய அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் சா்வதேச நாடுகளால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதி ஆதாரங்களை விடுவிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்தினா்.

ஈரானின் முன்னாள் தலைமை அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்குகள் சனிக்கிழமை தொடங்கி, ஜூலை 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்குப் பிறகு, இருதரப்புப் பிரதிநிதிகளும் மீண்டும் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஒப்புக்கொண்டுள்ளனா். அதன்படி, அடுத்தகட்ட பேச்சுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கத்தாா் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போரின் தொடக்கத்தில் ஈரான் தலைநகா் டெஹ்ரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப். 28 நடத்திய வான்வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments