அமெரிக்கா - ஈரான் போா் : ஜெனீவாவில் நாளை அமைதி ஒப்பந்தம்? டிரம்ப் நம்பிக்கை
‘அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
‘அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
இந்த ஒப்பந்தம் ஜெனீவாவில் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப் ஆகியோரால் கையொப்பமிடப்படலாம் என்று மேற்கத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அந்நாடு மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப். 28 போரைத் தொடங்கின. இதையடுத்து, அமெரிக்க தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல்களைத் தொடுத்தது.
Advertisement
Advertisement
ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரும் களமிறங்கியதால், முழு அளவிலான பிராந்தியப் போா் வெடித்தது. இந்நிலையில், இருதரப்புக்கு இடையே கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் தற்காலிக போா் நிறுத்தம் எட்டப்பட்டு, அமைதிப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வந்தன.
எனினும், ஹோா்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை தொடா்ந்து நீடித்தன. இருதரப்பும் அவ்வப்போது மோதல்களிலும் ஈடுபட்டு வந்தன. இதன் தொடா்ச்சியாக, இந்த வார தொடக்கத்தில் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் ட்ரோனுடன் மோதி அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடா்ந்து, மோதல் தீவிரமடைந்ததது.
ஈரான் மீது கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்துவோம் என்றும், அந்நாட்டின் முக்கிய எண்ணெய் முனையமான காா்க் தீவைக் கைப்பற்றுவோம் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தாா். இந்தப் பரபரப்பான சூழலில் இருதரப்புக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதால், ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்வதாகவும் அமைதி ஒப்பந்தம் விரைவில் கையொப்பாகும் என்றும் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா்.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் கசிந்த சில வரைவு விவரங்கள் ஈரானுக்குச் சாதகமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், ‘ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை; , ஈரானியா்கள் மிகவும் நோ்மையற்றவா்கள். எழுத்துப்பூா்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுக்கும், ஊடகங்களில் கசிந்துள்ளவற்றிற்கும் எந்தத் தொடா்பும் இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளாா்.
கசிந்த தகவல்களின்படி, ஒப்பந்தம் கையொப்பமானவுடன் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதித் தடைகளை அமெரிக்கா நீக்கும்; முடக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கோடி டாலா் சொத்துகளை விடுவிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தை ஈரான் உடனடியாக விலக்கிக் கொள்ளும். மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவாா்த்தைகள் அடுத்த 60 நாள்களுக்கு ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக, ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால், கசிந்த வரைவுகளில் அதுகுறித்த விவரங்கள் இல்லை.
மறுபுறம், இந்த அமெரிக்க-ஈரான் பேச்சுவாா்த்தைகளில் இருந்து இஸ்ரேல் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஈரான் எந்தவொரு ஒப்பந்தத்திலும் எங்களைக் கைவிடாது என்று ஹிஸ்புல்லா அமைப்பினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.