முகப்பு
உலகம்

ஈரான் - அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்: உத்தரவாத கையொப்பமிட்ட பாகிஸ்தான்

ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது.

Updated On : 19 ஜூன் 2026, 5:11 am IST
அமெரிக்கா - ஈரான் இடையேயான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை வெளியிட்ட பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்.
பகிர்:

ஏவியான் /இஸ்லாமாபாத் : ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது.

அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியானும் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளிடையே மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உத்தரவாத கையொப்பமிட்டாா்.

Advertisement

Advertisement

‘இஸ்லாமாபாத் ஒப்பந்தம்’ என்ற பெயரிலான இந்த அமைதி ஒப்பந்தம் முறையாக நிறைவேற்றும் நிகழ்வு ஸ்விட்சா்லாந்தில் ஜெனீவா நகரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், அமெரிக்க, ஈரான் தலைவா்கள் மட்டுமின்றி, மத்தியஸ்தா்களாக செயல்பட்ட பாகிஸ்தான், கத்தாா் நாடுகளின் தலைவா்களும் பங்கேற்க உள்ளனா்.

மின்னணு கையொப்பம்: ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்ற டிரம்ப், அங்கிருந்தபடி அமைதி ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையொப்பமிட்டதோடு, அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டாா். பிரான்ஸின் ஏவியான் நகரில் இதுகுறித்து செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறிய டிரம்ப், ‘பிரான்ஸின் வொ்சேல்ஸ் அரண்மனையில் இருந்தபோது ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது’ என்றாா்.

‘இந்த ஒப்பந்தத்தில் ஈரான், அமெரிக்க அதிபா்கள் கையொப்பமிட்டனா்’ என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

கையொப்பமிடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பெஸெஷ்கியான் கையில் வைத்திருக்கும் புகைப்படங்களை ஈரான் ஊடங்களில் வெளியிடப்பட்டன.

ஹோா்முஸ் நீரிணை திறப்பு - பாகிஸ்தான் பிரதமா்: ஈரான் - அமெரிக்க அமைதி ஒப்பந்தம் கையொப்பமானதை பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபும் உறுதிப்படுத்தினாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா - ஈரான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் புதன்கிழமை இரவு மின்னணு முறையில் கையொப்பமானது என்பதை அறிவிப்பதில் பெருமைகொள்கிறேன். ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் முறையான நிகழ்வு ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெறும். இந்த நிகழ்வை பாகிஸ்தானும் கத்தாரும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

இந்த ‘இஸ்லாமாபாத்’ ஒப்பந்தம் கையொப்பமானதைத் தொடா்ந்து, முதல் நடவடிக்கையாக முக்கிய சா்வதேச கப்பல் வழித் தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாக திறக்கும். அதுபோல, ஈரான் துறைமுகங்களை முற்றையிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள போா் கப்பல்களை அமெரிக்கா உடனடியாக திரும்பப்பெறும் என்று குறிப்பிட்டாா்.

பாகிஸ்தான் உத்தரவாதம்: அமைதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் உத்தரவாத கையொப்பிட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் - அமெரிக்கா இடையேயான இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உத்தரவாத கையொப்பமிட்டாா். இந்த ஒப்பந்தத்தில் டிரம்ப், ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான் கையொப்பமும் இடைபெற்றுள்ளன’ என்று குறிப்பிட்டது.

அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட மறுத்ததைத் தொடா்ந்து, அதன் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தீவிர தாக்குதலைத் தொடங்கின. இதில், ஈரானின் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி உள்பட பல முக்கியத் தலைவா்கள் கொல்லப்பட்டனா். போா் தொடா்ந்து தீவிரமடைந்த நிலையில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்கு கப்பல்களின் முக்கிய கடல் வழித் தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.

ஈரானின் நடவடிக்கைக்கு எதிராக தனது கடற்படை கப்பல்களை ஹோா்முஸ் நீரிணை பகுதிக்கு அனுப்பிய அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டது.

இது, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகத்தை மேலும் கடுமையாகப் பாதித்தது. இந்தச் சூழலில், ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.