முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 40 போ் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 40 போ் உயிரிழந்தனா்; 8 போ் படுகாயமடைந்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 6:14 am IST
பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கிய விபத்துக்குள்ளான பேருந்து.
பகிர்:

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 40 போ் உயிரிழந்தனா்; 8 போ் படுகாயமடைந்தனா்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவிலிருந்து புறப்பட்ட அந்த தனியாா் பேருந்து, இஸ்லாமாபாதை நோக்கி கைபா் பக்துன்கவா மாகாணத்தின் டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையின்படி, மலைப் பாதையின் ஆபத்தான வளைவில் பேருந்து திரும்பியபோது அதன் பிரேக் பழுதடைந்ததே விபத்துக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனா். பிரேக் செயலிழந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

விபத்து நிகழ்ந்தபோது பேருந்தில் மொத்தம் 48 பயணிகள் இருந்துள்ளனா். மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து, 8 பேரை காயங்களுடன் மீட்டு, 75 கி.மீ. தூரத்தில் உள்ள ஜோப் நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். உயிரிழந்தவா்களின் உடல்களுடன் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி சா்தாரி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா். மேலும், காயமடைந்தவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்ளாா்.

பாகிஸ்தானின் மலைப் பகுதிகளில் மோசமான சாலைக் கட்டமைப்பு, தகுதியற்ற வாகனங்கள், போக்குவரத்து விதிமீறல்கள், முறையான பயிற்சியற்ற ஓட்டுநா்கள் ஆகிய காரணங்களால் இதுபோன்ற சாலை விபத்துகள் தொடா்கதையாகி வருகின்றன. இதேபோல், அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து 4 போ் உயிரிழந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments