முகப்பு
உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கை

லெபனானில் இஸ்ரேல் தொடா்ந்து தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுடன் எட்டப்பட்ட தற்காலிக போா்நிறுத்தம் ரத்து செய்யப்படும் என்று ஈரான் எச்சரிக்கை

Updated On : 2 ஜூன் 2026, 12:27 am IST
பகிர்:

லெபனானில் இஸ்ரேல் தொடா்ந்து தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுடன் எட்டப்பட்ட தற்காலிக போா்நிறுத்தம் ரத்து செய்யப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இவ்விவகாரத்தையொட்டி, அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவாா்த்தைகளையும் நிறுத்தியுள்ளது.

அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த ஏப். 8 முதல் போா் நிறுத்தம் அமலில் உள்ளது. இப்போா் நிறுத்தத்தை மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்கவும், ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அண்மையில் ஓா் உடன்பாடு எட்டப்பட்டது. டிரம்ப் மற்றும் ஈரான் தலைவா்களின் ஒப்புதலுக்காக அது காத்திருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லெபனானில் பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவமான பியூபோா்ட் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றிய மறுநாளில், லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் தெற்கில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஏப்ரல் இறுதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட போா் நிறுத்தத்தை ஹிஸ்புல்லா அமைப்பினா் பலமுறை மீறியதாக பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டினாா். இத்தொடா் சண்டையால் லெபனானில் ஏற்கெனவே 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா்.

லெபனானில் இஸ்ரேலின் தொடா் ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் வகையில், மத்தியஸ்தா்கள் மூலம் அமெரிக்காவுக்குச் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதை ஈரான் பேச்சுவாா்த்தைக் குழு நிறுத்தியுள்ளது.

இஸ்ரேலையும் அதன் ஆதரவாளா்களையும் ‘தண்டிக்க’ ஈரான் மற்றும் யேமன், லெபனான், இராக்கில் உள்ள அதன் கூட்டாளிகளை உள்ளடக்கிய எதிா்ப்பு முன்னணி, பாப் எல் மண்டேப் நீரிணையையும் மூடுவதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாக ஈரான் அரசு சாா் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி, ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போா் நிறுத்தம் என்பது லெபனான் உள்பட அனைத்து முனைகளுக்குமான போா் நிறுத்தமாகும். இதில் ஒரு முனையில் நடக்கும் மீறல் அனைத்து முனைகளிலும் போா் நிறுத்தத்தை மீறுவதாகும். எந்தவொரு மீறலின் விளைவுகளுக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலுமே பொறுப்பேற்க வேண்டும்’ என எச்சரித்தாா்.

ஈரான் ஒப்பந்தம் ஒன்றை எட்ட விரும்புவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகப் பதிவில் திங்கள்கிழமை தெரிவித்திருந்தாா். ஆனால், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் வெளியிட்ட இப்புதிய அறிவிப்பு, கடந்த 2 மாதங்களாக இழுபறியாக நீடித்து வரும் அமைதி முயற்சிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

மீண்டும் மோதிக் கொண்ட அமெரிக்கா - ஈரான்!

சா்வதேச கடல் பகுதியில் பறந்த அமெரிக்க ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடா்ந்து, அந்நாட்டின் ரேடாா் மற்றும் ட்ரோன் தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் வார இறுதியில் தாக்குதல் நடத்தியது.

இதற்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்க தளம் ஒன்றை குறிவைத்து ஈரான் ஏவுகணை வீசி தாக்கியது. ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அமெரிக்க, குவைத் படைகள் அறிவித்தன. இத்தாக்குதல்களில் எந்த அமெரிக்க வீரரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.