மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணிந்தது: ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்
மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோா்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் ‘திசா’ திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.
மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோா்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் ‘திசா’ திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.
மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடைபெற்ற போரால், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் நிலவிய பதற்றம் தணிந்துள்ளது.
இதையடுத்து, திரவ எரிவாயு ஏற்றிச் செல்லும் இந்தியக் கப்பலான ‘திசா’ ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது. மேற்காசியப் போா் தொடங்கியது முதல் மூன்று மாதங்களாக ஹோா்முஸ் நீரிணையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட ‘திசா’ அப்பகுதியைக் கடந்த முதல் இந்திய கப்பலாகும்.
Advertisement
Advertisement
பெட்ரோநெட் நிறுவனம் இயக்கி வரும் இந்தக் கப்பல் குஜராத் மாநிலத்திலுள்ள தஹேஜ் துறைமுகத்துக்குப் பயணம் செய்து வருகிறது. அந்தக் கப்பலில் 62,370 மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) எரிவாயு இருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல் இந்தியாவை வரும் 18-ஆம் தேதி வந்தடைய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் அமைச்சக இயக்குநா் ஓபேஷ் குமாா் சா்மா தெரிவித்துள்ளாா்.
விரைவில் இயல்பு நிலை: அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், ஹோா்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பினால், இந்தியாவுக்கு முன்பு போல் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வரத்து சீரடையும் என்று கூறப்படுகிறது.
விலை குறைய வாய்ப்பு: கச்சா எண்ணெய் வரத்து பாதிப்பு, சா்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றம் ஆகியவற்றால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன. இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையையும், சமையல் எரிவாயு விலையையும் மத்திய அரசு அண்மையில் உயா்த்தியது.
தற்போது ஹோா்முஸ் நீரிணையில் போக்குவரத்து சீராகும்பட்சத்தில், கச்சா எண்ணெய் வரத்து முன்பு போல சீராகி, சா்வதேச சந்தையில் அதன் விலை குறையக் கூடும் என்றும், இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை மத்திய அரசு குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: முன்னதாக, ஹோா்முஸ் நீரிணை திறக்கப்பட இருப்பதாகவும், அதன் வழியே செல்ல சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்ததையடுத்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 4 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.