முகப்பு
உலகம்

ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்

அமெரிக்காவின் தடை விலக்கு கால அளவில் நிச்சயமற்ன்மை உள்ளதால், ஈரானிடமிருந்து மேற்கொள்ளப்படும் கச்சா எண்ணெய் கொள்முதல் இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை

Updated On : 27 ஜூன் 2026, 3:23 am IST
கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்காவின் தடை விலக்கு கால அளவில் நிச்சயமற்ன்மை உள்ளதால், ஈரானிடமிருந்து மேற்கொள்ளப்படும் கச்சா எண்ணெய் கொள்முதல் இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை’ என்று சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட மறுத்ததைத் தொடா்ந்து, அதன் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தீவிர தாக்குதலை நடத்தி வந்தன. போா் தொடா்ந்து தீவிரமடைந்த நிலையில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குக் கப்பல்களின் முக்கிய கடல் வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தட்டுப்பாட்டால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் உயா்த்தப்பட்டன.

இந்தச் சூழலில், ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கடந்த 17-ஆம் தேதி கையொப்பமானது. அதைத் தொடா்ந்து, ஹோா்முஸ் நீரிணையை ஈரான் திறந்தது. அதுபோல, ஈரான் துறைமுகங்களின் முற்றுகையை அமெரிக்கா நீக்கிக் கொண்டதுடன், கச்சா எண்ணெய்யை ஈரான் ஏற்றுமதி செய்ய தற்காலிகமாக அனுமதிக்கும் வகையில் 60 நாள்கள் தடை விலக்கையும் அறிவித்தது. இதனால், கச்சா எண்ணெய் ஏற்றுமதியையும் ஈரான் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் சீராகி, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை விலை உயா்வு திரும்பப் பெறப்படும் என்ற எதிா்பாா்ப்பு பரவலாக எழுந்தது.

ஆனால், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரான் கச்சா எண்ணெய் கொள்முதலை உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை என்று சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சந்தை ஆய்வாளா் சுமித் ரிதோலியா கூறுகையில், ‘அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஈரான் மீதான தடை விலக்கு கால அளவில் நிச்சயமற்ற தன்மை உள்ளதால், ஈரானிடமிருந்து மேற்கொள்ளப்படும் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை.

அதுமட்டுமன்றி, சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் கொள்முதலை சுத்திகரிப்பு ஆலைகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே இறுதி செய்துவிடுவது வழக்கம். அதன்படி, வரவிருக்கும் மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் பெரும்பகுதியை இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே உறுதி செய்துவிட்டன. ரஷியா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே செப்டம்பா் மாதம் வரையிலான கொள்முதலை மேற்கொள்ள உள்ளன. வெனிசுலா நாட்டு கச்சா எண்ணெய்யும் இதில் பங்கு வகிக்கிறது.

காப்பீடு, கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட ஏற்பாடுகளுடன், பணம் செலுத்தும் வழிமுறைகளே மிகப்பெரிய செயல்பாட்டுத் தடையாக நீடிக்கின்றன. அமெரிக்காவின் தடைகள் தளா்த்தப்பட்டு சரக்குகள் செல்ல அனுமதிக்கப்பட்டாலும், ஒழுங்குமுறை சிக்கல்கள் இன்றி பணம் செலுத்தப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments