முகப்பு
உலகம்

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக தீவிர போராட்டம்

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Updated On : 1 ஜூலை 2026, 3:04 am IST
தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான ஆா்பாட்டப் பேரணியில் பாரம்பரிய ஆடையணிந்து பங்கேற்ற இளைஞா்.
பகிர்:

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வன்முறையைத் தடுக்கும் நோக்கில் ஜோஹன்னஸ்பா்க், டா்பன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினா் அனைவரும் செவ்வாய்க்கிழமைக்குள் வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் கெடு விதித்திருந்தன.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஜோஹன்னஸ்பா்க் நகரின் மையப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் இளைஞா்களும், பெண்களும் பாரம்பரிய ஆடையணிந்து பங்கேற்று, ஆப்பிரிக்க விடுதலைப் பாடல்களைப் பாடினா். ஐ.நா. அகதிகள் சாசனத்தில் இருந்து தென்னாப்பிரிக்கா விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை அவா்கள் ஏந்தியிருந்தனா்.

சட்டவிரோத குடியேறிகளால் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோவதாகவும், குற்றச்சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதாகவும் போராட்டக்காரா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். மேலும், உள்ளூா் சில்லறை வா்த்தகக் கடைகளை வெளிநாட்டினரே ஆக்கிரமித்துள்ளதாகவும் அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இருப்பினும், போராட்டக்காரா்களின் இந்த எச்சரிக்கையை தென்னாப்பிரிக்க அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. அந்நாட்டு அதிபா் சிறில் ராமபோசா போராட்டக் குழுக்களின் தலைவா்களை நேரில் சந்தித்து, அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு அறிவுறுத்தினாா்.

மேலும், நாட்டின் குடியேற்றச் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது என்றும், பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகம் திரும்பும் மக்கள்: போராட்டங்களின் எதிரொலியாக, அண்டை நாடுகளான ஜிம்பாப்வே, மலாவி, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயா் தொழிலாளா்கள் அச்சத்துடன் தங்களின் தாயகங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனா்.

குறிப்பாக, நைஜீரிய அரசு தங்களின் குடிமக்களைத் தற்காலிகமாக மீட்பு விமானங்கள் மூலம் தாயகத்துக்கு அழைத்துச் செல்லத் தொடங்கியுள்ளது. இதுவரையில் 600-க்கும் மேற்பட்ட நைஜீரியா்கள் தாயகம் திரும்பியுள்ளனா்.

போராட்டக்காரா்களால் தங்களின் வாழ்வாதாரக் கடைகள் சூறையாடப்பட்டதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லாததால் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறுவதாகவும் தாயகம் திரும்பிய நைஜீரிய மக்கள் கவலையுடன் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments