முகப்பு
உலகம்

வேண்டுதல் நிறைவேறியது! தனிமையில் வாடிய பஞ்ச் குரங்குக் குட்டிக்கு கேர்ள் ஃபிரண்ட்!

ஜப்பானில் தனிமையில் வாடிய பஞ்ச் குரங்குக் குட்டிக்கு 'கேர்ள் ஃபிரண்ட்' கிடைத்துள்ளது.

Updated On : 21 மார்ச், 2026 at 8:45 AM
பொம்மையுடன் இருக்கும் குரங்குக் குட்டி - படம் - எக்ஸ்
பகிர்:

பிப்ரவரி மாதம் என்றாலே, காதலர்களுக்குக் கொண்டாட்டமான மாதமாக இருந்துவந்த நிலையில், 2026 பிப்ரவரி மாதம் மட்டும் விதிவிலக்காக, உலகமே ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பஞ்ச் என்ற குட்டிக் குரங்கை நினைத்துக் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தது.

தாயால் கைவிடப்பட்டு மற்றக் குரங்குகளும் ஏனோ தெரியாமல் பஞ்ச் குட்டிக் குரங்கை ஒதுக்க, தனிமையில் தவித்து வந்தது. பூங்கா ஊழியரின் ஒரு சமயோஜித யோசனையால், ஒரு ஆரஞ்சு நிற குரங்கு பொம்மை பஞ்ச் குட்டியிடம் வழங்கப்பட்டது.

அதனை அது தன் சொந்தமாகக் கருதி பொம்மையைத் தனது உலகமாகக் கருதி தழுவிக்கொள்ளும் ஜப்பான் குட்டிக் குரங்கின் காணொலிகள்தான் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, பாா்ப்பவா் இதயங்களை உருக்கியது.

பலரும் தன்னைப்போல தனிமையில் தவிக்கும் குரங்கை நினைத்துக் கண்ணீர் விட்டனர். இறைவனை பிரார்த்தித்தனர். அதற்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது. குட்டி பஞ்ச் குரங்குக்கு ஒரு அழகான பெண் தோழி கிடைத்திருக்கிறார். போர்ப் பதற்றங்களுக்கு இடையே உலகமே இன்று இதனை மகிழ்ச்சியோடு பார்த்து பகிர்ந்து வருகிறது.

மோமோ-சான் என்ற குட்டிக் குரங்குடன் பஞ்ச் நெருங்கிப் பழகி வருகிறது. அதற்கு அன்போடு முத்தமிடும் விடியோக்கள் இன்று வைரலாகியிருக்கிறது.

ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் பஞ்ச் குன் எனும் அந்தக் குரங்கு, கடந்த ஆண்டு ஜூலையில் பிறந்த சில நாள்களிலேயே அதன் தாயால் கைவிடப்பட்டது.

குரங்கு இனத்தைப் பொறுத்தவரை தாயின் அரவணைப்பு என்பது, குட்டிகளின் பாதுகாப்பு மற்றும் மனநலத்துக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், அந்த அன்பு கிடைக்காததால், பூங்கா ஊழியா்களே இந்தக் குரங்கை 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.