ஹோர்முஸ் திறப்பு, அணு ஆயுதங்கள் இல்லை... ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம் பற்றி...
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா ஈரானுக்கு அனுப்பியுள்ளது.
அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்களால் ஆடிப்போன ஈரானின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, பல 40-க்கும் மேற்பட்ட ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஈரானுக்கும் அமெரிக்கா - இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டைக்கு நேற்று (மார்ச் 23) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அடுத்த ஐந்து நாள்கள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது நாட்டின் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்து புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள 15 அம்சத் திட்டங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்தப் போரை முடித்து வைத்து மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்துள்ளது. அதேவேளையில், ஏற்கனெவே ஈரானைச் சுற்றி நிலை நிறுத்தப்பட்டுள்ள 50,000 வீரர்களுடன் கூடுதலாக 1,000 விமானப்படை வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர 15 அம்சத் திட்டங்களை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. அவற்றில், குறிப்பிடத்தக்க 12 திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா முன்மொழிந்த திட்டங்கள்
• ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கைவிட வேண்டும்.
• ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
• ஈரானிய எல்லைக்குள் யுரேனியம் செறிவூட்டல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
• கையிருப்பில் உள்ள சுமார் 460 கிலோ யுரேனியத்தில் 60 சதவிகிதம் சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க வேண்டும்.
• நடான்ஸ், இஸ்ஃபஹான், ஃபோர்டோவில் உள்ள அணுசக்தி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும்.
• சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஈரானுக்குள் செயல்படும் வகையில் அனுமதி வழங்க வேண்டும்.
• ஈரான் தனது மறைமுக நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
• பயங்கரவாத போராட்டக் குழுகளுக்கான ஆதரவைத் திரும்ப பெற வேண்டும்.
• ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய வர்த்தகத்திற்காக மீண்டும் திறக்கப்பட வேண்டும்.
• ஈரானிடம் இருக்கும் ஏவுகணைகளுக்கான தாக்குதல் தூரம் வரையறை செய்யப்பட வேண்டும்.
• எதிர்காலத்தில் ஈரானின் ஏவுகணைகள் தயாரிப்பு பாதுகாப்புக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தப் போரில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள ஈரான், “அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருவதாகவும், அமெரிக்கா தனது உள்நாட்டுக் குழப்பத்தின் உச்சத்தில் இருப்பதாகவும்” தெரிவித்திருப்பது மீண்டும் உலகளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.