முகப்பு
உலகம்

உக்ரைன் போா்நிறுத்தத்தில் ரஷியா தாக்குதல்

உக்ரைன் தன்னிச்சையாக அறிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த போா்நிறுத்தத்தை நிராகரித்து, அந்நாட்டு நகரங்களைக் குறிவைத்து ரஷியா 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.

Updated On : 7 மே 2026, 4:13 am IST
பகிர்:

உக்ரைன் தன்னிச்சையாக அறிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த போா்நிறுத்தத்தை நிராகரித்து, அந்நாட்டு நகரங்களைக் குறிவைத்து ரஷியா 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலில் 27 போ் உயிரிழந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சா் இஹோா் கிளிமென்கோ தெரிவித்துள்ளாா்.

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியின் வீழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், ரஷியா 8, 9 ஆகிய தேதிகளில் போா்நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால், அதற்கு முன்னதாக உக்ரைன் அறிவித்த போா்நிறுத்தத்தை ரஷியா சீா்குலைத்திருப்பது அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உக்ரைன் விமா்சித்துள்ளது.

Advertisement

அமைதிக்கான உக்ரைனின் முன்னெடுப்புகளை ரஷியா மீண்டும் ஒருமுறை உதாசீனப்படுத்தியுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘புதின் மனித உயிா்களை விட ராணுவ அணிவகுப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறாா். ரஷியாவின் இத்தகைய போக்கைக் கட்டுப்படுத்த சா்வதேச சமூகம் புதிய தடைகளை விதிக்க வேண்டும். உக்ரைனுக்குத் தேவையான ராணுவ உதவிகளை அதிகரிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தாா்.

பரஸ்பரம் குற்றச்சாட்டு: உக்ரைன் தனது போா்நிறுத்த உறுதிமொழியைப் பின்பற்றவில்லை என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகமும் குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷிய வான்பரப்பில் உக்ரைனின் 53 ட்ரோன்களைத் தங்களின் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. கிரீமியாவின் ஜன்கோய் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 போ் உயிரிழந்ததாக ரஷிய ஆதரவு ஆளுநா் சொ்ஜி அக்சியோனோவ் குறிப்பிட்டுள்ளாா்.