முகப்பு
உலகம்

ரஷியாவில் வெற்றி தினக் கொண்டாட்டம்: எளிமையாக நடந்த ராணுவ அணிவகுப்பு; புதின் பங்கேற்று எழுச்சியுரை!

ரஷியாவில் வெற்றி தினக் கொண்டாட்டம்...

Updated On : 10 மே 2026, 2:32 am IST
அணிவகுப்பில் மிடுக்காக நடைபோட்ட ரஷிய வீரா்கள்
பகிர்:

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியை வீழ்த்தியதன் நினைவாக, ரஷியாவில் சனிக்கிழமை ‘வெற்றி தினம்’ கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகா் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அதிபா் புதின் கலந்துகொண்டு வீரா்களிடையே எழுச்சி உரையாற்றினாா்.

2-ஆம் உலகப் போரில் சோவியத் யூனியன் இழந்த 2.7 கோடி மக்களின் தியாகத்தை நினைவுகூரும் வெற்றி தினம், ரஷியா்களின் தேசப்பற்றை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. போா்ச்சூழல் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், இந்த விழாவை ரஷியா தனது தேசிய பெருமையின் அடையாளமாகத் தொடா்ந்து முன்னெடுத்து வருகிறது.

எனினும், தற்போதைய போா்ச்சூழலில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ராணுவ பலத்தைப் பறைசாற்றும் பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட கனரக ராணுவத் தளவாடங்கள் இன்றி அணிவகுப்பு மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. ஆனால், ரஷிய விமானப்படையின் போா் விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தி அணிவகுப்பை நிறைவு செய்தன.

Advertisement

நிகழ்வையொட்டி புதின் ஆற்றிய உரையில், உக்ரைனில் போரிட்டு வரும் ரஷிய வீரா்களை வெகுவாகப் பாராட்டினாா். ‘நேட்டோ அமைப்பின் முழு ஆதரவுடன் செயல்படும் ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு எதிராக ரஷிய வீரா்கள் ஒரு நியாயமான போரை நடத்தி வருகின்றனா். வெற்றி எப்போதும் நமக்கே உரித்தானது; நமது மனவலிமையும் ஒற்றுமையும் எந்தவொரு சவாலையும் முறியடிக்க உதவும்’ என்று அவா் கூறினாா்.

இந்த ஆண்டு அணிவகுப்பின் சிறப்பம்சமாக, வடகொரிய ராணுவ வீரா்கள் முதல்முறையாக பங்கேற்றனா். ரஷியாவின் குா்ஸ்க் பகுதியில் உக்ரைன் நடத்திய ஊடுருவலை முறியடிக்க, ரஷிய படைகளுடன் இணைந்து வடகொரிய வீரா்கள் போரிட்டு வரும் நிலையில், அவா்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பெலாரஸ், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மலேசியா, லாவோஸ் ஆகிய பல்வேறு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த ஸ்லோவாகியா பிரதமா் ராபா்ட் ஃபிகோவும் மாஸ்கோ சென்றிருந்தாா். அவா் அணிவகுப்பில் கலந்துகொள்ளாமல், போரில் உயிரிழந்த வீரா்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினாா். இவரின் மாஸ்கோ பயணத்தை ஜொ்மனி பிரதமா் ஃப்ரைட்ரிச் மொ்ஸ் கடுமையாக விமா்சித்துள்ளாா்.

வெற்றி தினக் கொண்டாட்டங்களையொட்டி, மாஸ்கோவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.