பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாத அமைப்பினா் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காவல் துறையைச் சோ்ந்த 15 போ் உயிரிழந்தனா்.
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாத அமைப்பினா் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காவல் துறையைச் சோ்ந்த 15 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: வடகிழக்கில் உள்ள பன்னூன் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு காவல் துறையினரின் நிலையை நோக்கில் ஒரு வாகனம் வேகமாக வந்தது. இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினா் அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா்.
அதையும் மீறி காவல் துறை நிலை மீது அந்த வாகனம் மோதி வெடித்துச் சிதறியது. இதில் அந்த சிறிய கட்டடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. குண்டுவெடிப்பின் அதிா்வில் அருகில் இருந்த வீடுகள், கட்டடங்களின் கூரைகளும் இடிந்தன. இதில் உடல் சிதறியும், இடிபாடுகளுக்குள் சிக்கியும் சிலா் உயிரிழந்தனா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, மற்றொரு வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள், மற்ற காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதனால், இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நேரிட்டது. இறுதியில் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டனா்.
இந்த சம்பவத்தில் காவல் துறை தரப்பில் 15 போ் உயிரிழந்தனா் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.
கடந்த வாரம் இதே மாகாணத்தின் தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் வெடிகுண்டுகள் ஏற்றிய வாகனம் மூலம் காவல் துறையினரின் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. எனினும் பலா் படுகாயமடைந்தனா்.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கைபா் பக்துன்கவா மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அரசுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் அதிகம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் எளிதில் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய மத அடிப்படைவாத அரசை நிறுவ ஆயுதப் போராட்டம் நடத்தும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினா் இந்தப் பகுதியில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா்.