Enable Javscript for better performance
மத அரசியல்-37: ஆசீவகம் - காட்சியியல்- Dinamani

சுடச்சுட

  
  atom

   

  ஆசீவகக் காட்சியியல் (Philosophy of Aseevagam)

  ஆசீவர்கள் பழங்காலத்தில் “அறிவர்’ என்றழைக்கப்பட்டனர். அவர்கள் பின்னாளில் சித்தர்கள் என்றாயினர். மேலும் இவர்கள் ஆரம்பத்தில் விண்ணாராய்ச்சியில் இருந்ததால் விஞ்ஞானி என்றும் அழைக்கப்பட்டனர். சிவனும் விண்ணாராய்ச்சியில் இருந்தவரே.

  விண் + ஞானி = விஞ்ஞானி
           (ஆகாயம்) (அறிவர்) (ஆகாயம் அறிந்தவர்)

  பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப்படும் முன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு கொடுத்தவர்கள் ஆசீவர்கள். 

  இவர்கள் சைனப்படுக்கைகள் உருவாவதற்கு முன்னமே கற்படுக்கைகளமைத்து அங்கிருந்து மக்களுக்கான காலநிலை மாற்றங்கள், கணியம், வானியல், மழைப்பொழிவு, வேளாண் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், இன்னோரன்ன பிற செய்திகளிலும் அன்றாட வாழ்வியல், வணிகம் முதலானவற்றிலும் அளவு, நிறை போன்ற வணிக வரைகளையும், வரையறுத்து வாழ்வியலை வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய அறிவன் கூடங்கள் பலப்பல. அவை கால வெள்ளத்தாற் சிதைந்தும், பிற மதத்தினரால் கவரப்பட்டும், பெயர் மாற்றம் பெற்றும் இன்று மக்களால் மறக்கப்பட்டு விட்டன.

   

  ஆசீவகக் கோட்பாடுகள் (Theories of Aseevagam)

  ஆசீவகம் ஒருமையியம், அண்டவியல் கோட்பாடு, தற்செயல் கோட்பாடு, அணு கோட்பாடு, ஊழ்க் கோட்பாடு, சிதைவுக் கோட்பாடு மற்றும் அபிசாதிக் கோட்பாடு போன்ற கொள்கைகளை உள்ளடக்கியது ஆசிவக நெறியாகும். 

   

  ஒருமையியம் (Singularity/ oneness)

  ‘ஒன்றாய், வேறாய், உடனாய்’ என்ற ஒருமையிய கோட்பாட்டை ஆசீவகம் கடைபிடித்தது.

   

  தற்செயல் கோட்பாடு (Coincidence theory)

  சீவர்களுக்கு ஆதியும் கிடையாது, அந்தமும் கிடையாது. நன்மையும் கிடையாது தீமையும் கிடையாது. எல்லாம் தானே ஏற்றுக் கொள்வதால் தற்செயல் என்றே கொள்கிறார்கள். ஒரு மனிதன் செய்யும் நல்ல செயல்கள் அவனை மோட்சத்திற்கு இட்டுச் செல்ல வல்லன என்ற கருமக் கோட்பாட்டை ஆசிவர்கள் ஏற்கவில்லை.

   

  அண்டவியல் கோட்பாடு (Big Bang Theory)

  தமிழரின் அண்டவியல் கோட்பாடு கருந்துளையில் தொடங்கும். இது பக்குடுக்கையாரின் ‘இன்மை’யோடு தொடர்பு கொண்டது.

   

  (ஊழிகளின் தோற்றம்)

  தொல் முறை இயற்கையின் மதிய
  ... ..... ... மரபிற்று ஆக,
  பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
  விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,
  கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5

  உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
  உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;
  செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு
  தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
  உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10

  மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
  உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
  நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
  மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
  செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15

  பாடியவர்: கீரந்தையார்
  இசையமைத்தவர்: நன்னாகனார்
  பண்: பாலையாழ்

  நமது  அண்டத்திற்கு மா வெடிப்பு, ஒரு காலத்தொடக்கம் இருந்திருக்க வேண்டும் என்று ரோஜர் பென்ரோஸ் 1965-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். ஆனால் மேற்கண்ட பெரிபாடல் கருந்துளையும் (Black Hole), மா வெடிப்பையும் (Big Bang) இணைத்து அண்டத்தின் தோற்றத்தை அன்றே விளக்கியுள்ளது.

   

  அணுக் கோட்பாடு அல்லது அணுவியல் கொள்கை (Atomic theory)

  லியூசிபஸ்

  அணுக் கோட்பாடு அல்லது அணுவியல் கொள்கை (Atomic theory) என்பது பொருள்களின் இயல்பை விளக்கும் ஓர் அறிவியல் கொள்கை ஆகும். எல்லாப் பொருள்களையும் தொடர்ந்து சிறிய சிறிய கூறுகளாகப் பிரித்துக் கொண்டே இருக்க முடியும் என்று முன்னர் நிலவி வந்த கருத்துருவாக்கத்திற்கு எதிராக, பொருள்கள் அணு என்னும் தனித்தனி அலகுகளால் ஆனவை என்னும் கருத்தை அணுவியல் கொள்கை முன்வைக்கிறது. 

  கி.மு. 5-ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்க அறிஞர் லியூசிபஸ் (Leucippus) ஒவ்வொரு பொருளும் அழிக்கமுடியாத பிரிக்கமுடியாத ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒன்று அது “அணு” என்று விளக்கினார். ஆனால், ஜான் டால்டன் (John Dalton) 1800 களில் அணு எனும் கருத்துப் படிமத்தை வேதித் தனிமங்கள் ஏன் குறிப்பிட்ட சிற்றெண் விகிதங்களில் வினைபுரிகின்றன என்பதை விளக்கப் பயன்படுத்தினார் 

   

  ஜான் டால்டனின் அணுக் கோட்பாடு

  1.ஒவ்வொரு பருப்பொருளும் மிகச் சிறிய பிரிக்கமுடியாத துகள்களான அணுக்களால் உண்டாக்கப்பட்டது.
  2.அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
  3.ஒருதனிமத்தின் அணுக்கள் யாவும் எல்லாவகையிலும் ஒரேமாதிரியாக இருக்கும்.
  4.வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எல்லாவகையிலும் வெவ்வேறாக இருக்கும்.
  5.மாறுபட்ட தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட, எளிய மற்றம் முழு எண் விகிதத்தில் இணைந்து சேர்ம அணுக்களை உருவாக்கும்.
  6.வேதிவினைகளில் ஈடுபடும் மிகச் சிறிய துகள் அணுவாகும்.

  ஆசிவர், ஐம்பூதக் கோட்பாடு, அணுக்கோட்பாடு என்றும் இயல்புக் கோட்பாடு என்றும் அழைக்கப்படும் அண்டத்தின் தோற்றம், அணுக்களின் இயல்பு, பெரு வெடிப்பு இ=உயிர்களின் தோற்றம் என முற்றான அறிவியல் வளர்ந்த இக்கோட்பாட்டினை எண்ணியம் என்பர். இக்கோட்பாடினை உருவாக்கியவர் தொல்கபிலர் ஆவார். அணுக்கோட்பாட்டின் விரிவே “சிறப்பியம்’ எனும் வைசேடிகம் ஆகும். இதனை உருவாக்கியவர் கணியாதன் (கணி+ஆதன்) என்பார்.

  ஆசீவக அணுவியம் (Atomic nature of the bodies) மூல அணுவை அழிக்க  முடியாது என்கிறது. விளைவணு நீரணுவும், நிலவணுவும், வளியணுக்களின் வெவ்வேறு விழுக்காட்டுச் சேர்க்கையினால் விளைவன, எனவே இயங்கணு எனவும் மூல அணுவால் விளைவிக்கப்படுதலின் ‘விளைவணு’ எனவும் வழங்கப்படுகிறது, நீரணு நிலவணு ஆகியவை அவ்வப் பூதங்களுக்கு அடிப்படை அலகாம். ஆனால் ‘தீ’ என்கிற பூதமோ அணுவிலாப் பூதம் என்று வழங்கப்படும். ‘தீ’ என்பது மூல அணுக்களிலிருந்து விளைவணுவை உருவாக்கவும், மீண்டும் விளைவணுவிலிருந்து மூல அணுவைப் பகுக்கவும் பயன்படும் ஆற்றலேயன்றி அதற்கு அடிப்படை அணுக்கள் கிடையாது.

  அணுவிய நிகழ்வுகள் (புணர்தலும், புரிதலும்) வெப்பத்தின் முன்னிலையில் மட்டுமே நிகழும். இரு அணுக்கள் புணர்தல் நிகழும் போதுள்ள வெப்ப ஈர்ப்பு அந்த அணுக்கள் பகுக்கப்படும் போது வெளிப்படும். அவ்வாறே இரு அணுக்கள் புணரும் போது வெப்பம் வெளிப்பட்டால் அவை பகுபடும் போது அதே அளவு வெப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். வெப்பம் ஏற்றுக் கொள்ளுதலும், உமிழப்படுவதுமாகிய வெப்ப விளைவு, நிகழ்வுகளின் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கும். பிற நேரங்களில் வெப்பம் இயல் நிலை அளவிலேயே இருக்கும். இது ஒரு ஆற்றல் வெளிப்பாடே. ஆனால் பூதங்களில் இத்தீயாற்றலும் ஒன்றாகவே கொள்ளப்படும். மூல அணுவான வளியணுவுடன் ‘தீ’ சேர்ந்தே ஏனைய அணுக்களை விளைவிக்கும். ‘தீ’ பூதம் ‘அணுவிலி பூதம்’ எனவும் வழங்கப்படும்.

  நிலவணு படுசீரும் (அ) வீழ்சீரும்
  நீரணு பாய்சீரும்
  வளியணு கிடைச்சீரும்
  தீயாற்றல் மேற்சீரும் கொண்டவை.
  சீர்களின் தன்மைக்கேற்ப இயக்கம் நிகழும்.

  ஒரு பொருளில் எந்தப் பூதத்தின் கூறு அதிகமாக உள்ளதோ அந்த பூதத்தின் சீரிலேயே இயக்கம் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட பூதியம் குறிப்பிடத் தக்க அளவில் இருப்பின் அவற்றின் தொகுபயனுக்கேற்ப சீர் விளைவும் இயக்கமுமிருக்கும்.

  ஏனைய மூன்றணுக்களுக்கும் (நில, நீர், வளி) பரும அளவு உண்டு. தீ எனும் பூதம் இம்மூன்றிலும் உள்ளுரைவதால் தனி அணுவோ பரும அளவோ கிடையாது. ஒரு ஆற்றல் வலப்புலையில் காற்று கூடுதலாகவும், இடப்புலையில் குறைவாகவும் இயக்கம் நிகழுமாயின் இது வலநாடியாகப் பிங்கலை நாடி என்றும் ஆண்நாடி என்றும் சூரிய கலை என்றும் சொல்லப்படும் அணு உலகைப் பற்றிய புதிய அறிவை உண்டாக்கியது. அறிவியலின் இயல்புத் தன்மை என்பதை, கடுமையான முடிவுகளை மேற்கொள்ளும் தன்மையை சார்ந்திருப்பதிலிருந்து விடுவித்தது. தமிழரின் அணுவியம், கிரேக்க அணுவியத்தைவிட மிகவும் முந்தையது. மணிமேகலை, நீலகேசி முதலான நூல்களில் காணப்படும் தமிழரின் அணுக் கோட்பாடு, கிரேக்க அணுக்கோட்பாட்டைவிடச் செறிவானது, செம்மையானது, மேம்பட்டது. 

  மற்கலி என்பாரின் அணுக்கோட்பாட்டைத் தழுவிக் கணி ஆதன் (கணாதன்) என்பார் வடித்த தனி மெய்யியல் பள்ளியே சிறப்பியமாகும். அம்மற்கலி, ஒன்பதாம் கதிர் என்னும் நூலை இயற்றினார். அந்நூலின் திருட்டு வடிவமே கணி ஆதன் சங்கதத்தில் (சமற்கிருதத்தில்) இயற்றிய வைசேடிக சூத்திரம் என்ற நூல்.

   

  ஊழ்க்கோட்பாடு (Destiny theory)

  ஊழ்

  "விழு" என்பது ‘வீழ்’ என குறிப்பிடப்படுவது போல் உழு எனும் சொல் “ஊழ்” எனும் சொல்லாக கிளர்ந்தது. ‘உழு’ என்ற சொல் நிலத்தை உழுதல் என்ற பொருளிலும் குறிக்கப்படும். இது ஊழ்கம் அதாவது யோகம் என்ற சொல்லுக்கு எவ்வாறு தொடர்பு படுகிறது என்று திரு. ஆதி சங்கரன் அவர்கள் தனது ஆதி தமிழர் மெய்யியல் எனும் புத்தகத்தில் கூறுவது மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

  நிலத்தில் பஞ்ச பூதங்களை சேமிக்கும் ஒரு அற்புதமான செயலே உழுதலாகக் கொள்ளலாம். நிலத்தை முதலில் புரட்டி விடுதல் என்று சொல்லும் பொழுது மண்ணோடு (பிருத்வி) காற்று (வளி) சேர்வதும், மேலும் பின்னர் நீர் (ஜலம்) சேர்ந்து ஒளி (நெருப்பு, தேயு) உமிழும் கதிரவன் பார்வையில் கிளர்ந்து விடப்படும் பொழுது மண்ணின் நுண் உள்ளறைகளில் (அணுவில்) உயிர்காற்று (வாயு, வளி) அதாவது உயிர்சத்து சேமிக்கப் படுகிறது. இந்த மண்ணின் நீர் சத்து குறைந்ததும் அந்த வெற்றிடங்களில் ஆகாயச் சத்து வந்து நிறைகிறது.

  இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்படுதல் உழு எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த உழு, ஊழ் எனும் சொல்லின் அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும் பயிற்சி மாந்தர் உடலின் (நுண்ணிய) கண்ணறைகள் தோறும் உயிர்வளி சேமிக்கப் பயன்படுகிறது. இந்த உயிர்வளியினை அதிகம் பெறும் இயற்கைச் சூழல் அமைந்த சோலைகளிலும், மலைக் குகைகளிலுமே பெரும்பாலும் ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன.

  இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு இயற்கையில் நிகழும் அணுவியல் மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே ஆசீவக விளக்கமாகும். இயற்கை நிகழ்வுகளின் ஒழுங்கு என்பது விதிப்படியே நிகழும் ஆதலால் அணுவியம் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

  இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் அதாவது அணுக்கள் எஞ்சி, மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது என்கிறது ஆசீவகக் கோட்பாடு. அவை எதுவெனக் கண்டால்.

  1. கடைமிடறு, 2. இறுதிப்பாடல், 3. இறுதி ஆடல், 4. இறுதி வரவேற்பு, 5. காரிருள், 6. நிறையா வழிகை அமிழ்தூற்று, 7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு, 8. ஐயன் நிலை அடைதல்.

  மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இறப்பு என்னும் பெரும் புதிரின் நடுவே இன்பதுன்பங்கள் ஏன் வருகின்றன என அறியாமல் மாறிமாறி உழன்று, முடிந்து போகின்ற வாழ்வு பற்றிய அச்சுறுத்தலில் இருந்து நாம் பெறமுடியும்.

  வைதிக சமயங்கள்  அதைத் தெய்வசித்தம் என்கின்றன. உலகாயதம் நீங்கிய சமண பௌத்த சமயங்கள் அதை வினைப்பயன் அல்லது கருமம் என்கின்றன. ஆசீவகம் அதனை ஊழ் என்கின்றது. அனைத்திற்கும் காரணம், தெய்வச்செயல் என்பவரை விட்டுவிடுவோம்.

  வினைப்பயன் அல்லது வினைக்கொள்கை என்பது ஒருவர் அடைகின்ற நன்மை தீமைகளுக்குக் காரணம், அவர்கள் சென்ற பிறவியிலோ அல்லது இந்தப் பிறவியிலோ செய்த செயல்கள்தான் என்று சொல்வது. வடமொழியில் இது கர்மா ( கருமம் ) எனப்பட்டது.

  ஆசீவகம் சொல்வது, நாம் ஒரு செயலைச் செய்யும் முன்னரே அது எப்படி நிகழவேண்டும் என்பதை வரையறுத்து வைத்திருக்கும் ஆற்றல் ஒன்று உள்ளது. அதனுடைய திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. அதனைத் தமிழில் ஊழ், என்றும்  முறை என்றும் ஏன் அந்த ஆற்றல்தான் தெய்வம் என்றும் கூட வழங்கினர். வடமொழியில் இதனை நியதி என்றனர்.

  வினைக்கொள்கைக்கும் ஊழ் என்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை நாம் முதலில் மனதிருத்த வேண்டும்.

  ஏனெனில், இவை இரண்டும் ஒன்றெனக் கருதி விளக்கப்படுதலும் விளங்கிக் கொள்ளுதலும் பலநூறாண்டுகளாகத் தமிழில் நிகழ்ந்து வந்துள்ளது. ஊழ் என்பதுடன் வினை என்பதையும் சேர்த்து ஊழ்வினை என்று இன்று நாம் இயல்பாக வழங்குகிறோம். ஆனால் ஊழ் என்பதும் வினை என்பதும் வேறுவேறானவை.

  ஏழையால் பிறந்துவிட்ட ஒருவன் செல்வனாவதற்கும், படிப்பறிவற்ற பின்புலத்தில் இருந்து வந்த ஒருவன் கல்வியறிவில் சிறந்து விளங்குவதற்கும் முயற்சி ஒன்று போதாதா? முயன்றால் முடியாதது உண்டோ? என்று ஆசீவகரைக் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில், அப்படிச் செல்வனாகவோ, கல்வியறிவுள்ளவனாகவோ அவனுக்கு ஊழ் இருந்தால் ஒழிய அவன் என்ன முயன்றாலும் அவனால் அந்த நிலையை அடைய முடியாது. எனவே ஊழே வலிது. 

  “அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி 
  எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த 
  உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் 
  பருவத்தால் அன்றிப் பழா”

  “வருந்தி அழைத்தாலும் வாரத வாரா
  பொருந்துவன போமினென்றால் போகா”

  இந்தப் பாடலின் வரிகளையும் இதைப்போன்று நம்மிடையே உள்ள பாடல்கள் மற்றும் பழமொழிகளையும் நினைவு படுத்திப்பாருங்கள். இறந்து போன ஆசீவகக் கோட்பாட்டைத் தெரிந்தோ தெரியாமலோ இப்பாடல்கள் உட்பொதிந்து வைத்திருக்கின்றன.

  நம் சமூகத்தில் விதி என்றும் தலையெழுத்தென்றும் இன்றும்  நடந்து முடிந்த ஒன்றை ஆற்றுப்படுத்த  நாம் சொல்லும் சமாதானங்கள் யாவும் ஆசீவகத்தின் கொட்பாடுகளே! வினைக்கொள்கையின் படி, இவை ஒருவன் செய்த செயல்களைச் சார்ந்து அமைபவை. அது முற்பிறப்போ இப்பிறப்போ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், நடந்து முடிந்தனவே இனி நடப்பவற்றைத் தீர்மானிக்கும் என்று வினைக்கொள்கை சொல்ல, நடப்பதனைத்துமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான் என ஆசீவகரின் ஊழ்க்கோட்பாடு சொல்கிறது.

  இங்கு, ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்ட அந்தத் திட்டத்தை அறிந்து கொள்ளும் ஊழும் சிலருக்கு அமைகிறது என்பதையும் அவர்களே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு எதிர்காலத்தில் நிகழ்வதைக் கணித்து அறியும் வல்லமை பெறுகிறார்கள் என்றும் ஆசீவகம் நம்புகிறது. 

  சாணன், கலந்தன், கணியாரன், அச்சித்தன், அக்கிவேசாயனன், கோமாயபுத்தன் ஆகிய ஆறு ஆசீவகத்துறவிகளும், மற்கலியிடம் இருந்து பெற்ற, இன்பம், துன்பம், பேறு, பேறின்மை, பிறப்பு, இறப்பு ஆகிய கோட்பாடுகளைத் தொகுத்து எட்டுப் பகுதிகள் உடைய நூலை அமைத்தனர். இந்த மகாநிமித்தங்கள் எனப்படும் எட்டும், ஆசீவகக் கோட்பாட்டின்படி, வரையறுக்கப்பட்டுவிட்ட இவ்வுலகின் எதிர்காலத்தைக் கணித்து உரைக்கும் பகுதிகளாக விளங்கின. இன்றைய சோதிட நூல்களனைத்திற்கும் ஆதிநூல் என மகாநிமித்தத்தை நாம் துணிந்து கூறலாம். நகைமுரண் என்னவென்றால், இப்படித் தொகுக்கப்பட்ட ஆசீவகரின் நூலொன்று இருந்தது. அதில் இந்த ஆறுபேரும் எட்டு நிமித்தகங்களை இன்னின்னவாறு தொகுத்துரைத்துள்ளனர் என்று நாம் இன்று தெரிந்துகொள்ளத் துணைபுரிவன இந்தச் சமண நூல்கள் தாம்.

  இந்த நேரத்தில் இரு முக்கியமான விடயத்தையும் நாம் மனதிருத்த வேண்டும்.

  1.வினைக்கொள்கையும், ஊழ் கோட்பாடும் ஆரியர் வருகைக்கு முன்பே தொல் தமிழ்க் குடிகளிடையே வழக்கில் இருந்த கோட்பாடுகள். 
  2.ஆசீவகம் என்னும் சமயமும் அவர்தம் கொள்கைகளும் இந்தியப்பெருநிலத்தில் இருந்து முற்றிலும் அழிந்திருந்தாலும் அவர் பற்றிய செய்திகளையும், கொள்கைகளையும் நாம் அறிந்து கொள்ள உதவுவன சமண, பௌத்த நூல்கள் மற்றும் அவற்றிற்கு எழுதப்பட்ட உரைகள்தாம். இன்னொருபுறம், வேறெந்த இந்திய இலக்கியங்களிலும் காணக்கிடைக்காத அளவிற்கு ஆசீவகருடைய கோட்பாடுகளைத் தொகுத்துச் சொல்லும் இலக்கியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன.

   

  சிதைவுக் கோட்பாடு (Theory of Atomic Disintegration)

  ஃபிரெட்ரிக் சோடி 

  இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஃபிரெட்ரிக் சோடி (Frederick Soddy) 1902-ல் அணுக்கரு சிதைவுக் கோட்பாட்டை (Theory of Atomic Disintegration) நிறுவினர். இவர் நோபல் பரிசு பெற்றவர்.

  பக்குடுக்கை நன்கணியார் அணுவியலில், நிலம், நீர், தீ, வளி என நால்வகை அணுக்கள் கூடுவதை ஆகூழ் என்றும் அவ்வாறு கூடியவை பிரிவதை போகூழ் என்றும் கூறுகிறது. இதையே மணிமேகலையின், முன்னுள் வூழே பின்னுமுறுவிப்பது என்ற வரிகள் புலப்படுத்தும் ஆசீவகர்கள் இன்று இருந்திருந்தால் அனைத்து நோபல்பரிசுகளும் ஆண்டுதோறும் அவர்களுக்கே என்பது திண்ணம்.

  அபிசாதிக் கோட்பாடு (Abisadik Theory)

  உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப நிறத்தின் அடிப்படையில் அவற்றின் பிறப்பை வகைப்படுத்தும் ஆசீவகக் கொள்கைக்கு அபிசாதிக் கோட்பாடு என்று பெயர். ஆசீவகம் போதித்தவர்களுள் ஒருவரான பூரண காசியபர் என்பாரது கோட்பாடு இது. மணிமேகலையில் இது

                          
  கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்
  பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
  பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்…

  (மணி 27:150-153)

  என்று கூறப்பட்டுள்ளது. பாலி நூல்களில் இவை பின்வருமாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

  • கரும்ம் பிறப்பு - கொலைஞர், வேட்டுவர், வலைஞர், கள்வர், சூதர் முதலானோர்
  • கருநீலப் பிறப்பு - தீயொழுக்கம் கொண்ட துறவியர்
  • பசும்ம் பிறப்பு - ஆசீவகத்தின் இல்வாழ்வினர்
  • செம்ம் பிறப்பு - சமணத் துறவியர்
  • வெண்ண் பிறப்பு - ஆசீவகத் துறவியர்
  • கழிவெண் பிறப்பு - நந்தவச்சர், இச சங்கிச்சர், மற்கலி கோசாலர்

  செய்கை அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தும் கோட்பாடாக இது உள்ளது.

  முக்குணக் கோட்பாடு: ஆத்ம குணங்கள் பற்றிய வைதிகத்தின் கோட்பாடு இதுவாகும். ஆத்மாவின் குணங்கள் மூன்று. அவை சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம். இவற்றை சத்துவம், ராஜசம், தாமசம் எனவும் வழங்குவர். சத்துவ குணத்தவர்கள் தேவத்தன்மை உடையவர்கள். ரஜோ குணத்தவர்கள் வீரத் தன்மையும் தமோ குணத்தவர்கள் விலங்குத் தன்மையும் உடையவர்கள். அதாவது அந்தணரும் தேவர்களும் சத்துவ குணம் உடையவர்கள் (மனு 12:48). சத்திரியரும் போர் வீரர்களும் ரஜோ குணம் உடையவர்கள் (மனு 12:45,46). மற்றவர்கள் தமோ குணம் உடையவர்கள்.

  இலேசியைக் கோட்பாடு: ஆசீவகரின் அபிசாதிக் கோட்பாட்டுடன் ஒப்புமை உடைய சமணக் கோட்பாடு இதுவாகும். உயிருக்கு வண்ணம் கூறும் சமணக் கொள்கை லேசியை ஆகும். லேசியை ஆறு வகைப்படும். கிருட்டிண லேசியை, நீல லேசியை, கபோத லேசியை, பீத லேசியை, பதும லேசியை, சுக்கில லேசியை ஆகியனவே அவை. இவற்றுள் முதல் மூன்றும் தீய குணத்தால் ஆவன. பிந்தைய மூன்றும் நற்குணத்தால் ஆவன. பழங்கள் நிறைந்த ஒரு மரத்தை எடுத்துக்காட்டி இவற்றை விளக்குகிறார் முனைவர் சு. சுனந்தாதேவி.

  • கிருட்டிண லேசியை (கறுப்பு) -   மரத்தையே வெட்டி பழங்களை உண்ண நினைப்பது
  • நீல லேசியை (நீலம்) -     பெரிய கிளையை வெட்டி பழங்களை உண்ண நினைப்பது
  • கபோத லேசியை (பச்சை) - சிறிய கிளையை வெட்டி பழங்களை உண்ண நினைப்பது
  • பீத லேசியை (மஞ்சள் அல்லது பொன்) – நான்கைந்து பழக் கொத்துக்களை உடைய கொம்பினைப் பறித்து பழங்களை உண்ண நினைப்பது
  • பதும லேசியை (சிவப்பு) - ஒரேயொரு பழக் கொத்தை மட்டும் எடுத்து பழங்களை உண்ண நினைப்பது   
  • சுக்கில லேசியை (வெள்ளை) - கீழே உதிர்ந்து கிடக்கும் பழங்களை மட்டும் உண்ண நினைப்பது

  இவற்றிலிருந்து லேசியை என்பது மனத்தில் உருவாகும் எண்ணங்களை வகைப்படுத்தும் நிறக் கோட்பாடு என்பது தெளிவாகிறது. ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியின் நான்காவது செய்யுளுக்கு விளக்கம் தரும் நீலகேசி உரையாசிரியர் சமய திவாகரவாமன முனிவர் லேசியை பற்றித் தனது அஷ்ட பதார்த்த சாரம் பகுதியில்  விளக்குகிறார்.

   

  References:
  1. தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும் by முனைவர் க. நெடுஞ்செழியன்
  2.    நீலகேசி  1984,  தமிழ்ப் பல்கலைக் கழகம்  தஞ்சாவூர்.
  3.    நீலகேசியில் சமயக் கோட்பாடுகள்  2002, பீ.மூ. மன்சூர், தி பார்க்கர்
  4.    சமணக் காப்பியங்கள்  1988, சு. சுனந்தாதேவி
  5.    செப்படு வித்தை: சீர் மேவும் நுண்மொழி By மானெக்ஷா
  6.    வள்ளுவத்தின் வீழ்ச்சி by குணா

   

  தொடரும்...

  C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai