Enable Javscript for better performance
மத அரசியல்-39: ஆசிவர்கள் வானியல்- Dinamani

சுடச்சுட

  

  மத அரசியல்-40: ஆசிவர்கள் வானியல் 

  By C.P.சரவணன்  |   Published on : 24th December 2018 04:37 PM  |   அ+அ அ-   |    |  

  vaniyal

   

  ஆசிவர்கள் வானியல் (Astronomy and Aseevagam)

  தொழில்நுட்பமும் அறிவியலும் பாரிய வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த நூற்றாண்டில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உலகம் உருண்டை என்பதையே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த 16ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடித்தனர். ஆனால் சங்க காலத் தமிழர்கள் விண்ணையும் அதிலிருக்கும் கிரகங்களையும், காற்று மண்டலத்தையும் அவற்றின் இயக்கங்களையும், கால அளவுகளையும் அதனை அளவிடும் வானியல் அறிவியலையும் அறிந்து அதை இலக்கியங்களிலும், ஆவணங்களிலும் பதிவு செய்துள்ளனர். 7 கிரகங்கள் வரை அறிந்திருந்தனர். இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்கத்திய நாடுகள் அறிவதற்கு முன்பே நம்முடைய மூதாதையர்கள் அறிந்திருந்தனர். தேசத்தின் வடக்கே வாழ்ந்தவர்களுக்கு ஐம்பூதங்களில் சதுர்ப்புதமாகிய நான்கு கூறுகளை மட்டுமே தெரியும். காற்றை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் காற்றையே கணக்கச்சிதமாக கணித்து வைத்திருந்தார்கள் நம் தமிழர்கள்.

   

  வானியல் நூல்கள்

  பண்டைய அறிவர்களிடம் ஐந்திரம் (Aintiram), கோள்நூல் கடைக்கழகக் காலத்திலும் பிற்காலத்திலுமிருந்தவை, இதில் கோள்நூல் இப்போதில்லை என்கிறார் தேவநேய பாவாணர். ஐந்திரம் மட்டும் கணபதி ஸ்தபதி அவர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்கலி வகுத்த “நவகதிர்’ இத்தகைய வான்நூல்-கோள்நூல் பற்றியது. 

   

  கோள்கள் பற்றிய அறிவரின் கருத்து

  செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என அழைத்தனர். இன்றைய அறிவியல் வல்லுனர்கள் செவ்வாய் கோளில், மண் சிவப்புநிறமாய் இருப்பதனை அறிவியல் ஆய்வு மூலம் புலப்படுத்தியுள்ளனர். வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என அழைத்தனர்.வெள்ளிக்கோளில் வெள்ளித்தாது இருப்பதனை இன்று அறிவியல்ஆய்வு புலப்படுத்தியுள்ளது. ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதனால் இதனை விடிவெள்ளி என்றனர். புதிதாகக் கண்டறிந்த கோளைப் புதன் என அழைத்தனர். புதிதாகஅறிந்ததனால் அதற்கு  ‘அறிவன்’ எனவும் பெயருண்டு.வியா என்றால் பெரிய, நிறைய எனப் பொருள்படும். வானில் பெரிய கோளாக வலம் வருவதனையே  வியாழன்  என்றனர். சனிக்கோளைக் காரிக்கோள் என அழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக இன்றைய அறிவியல் ஆய்வு கூறுகிறது. ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது.

  செஞ்ஞாயிற்றுச் செலவும்,
  அந்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் 
  சூழ்ந்த மண்டிலமும்

  தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை நாள்மீன் எனவும்,ஞாயிற்றிடமிருந்து ஒளிப்பெற்று ஒளி விடக்கூடியவற்றைக் கோள்மீன் எனவும் பண்டைத்தமிழர் குறிப்பிட்டுள்ளனர். தமிழரின் வானியல் அறிவு இரு கூறுகளைக் கொண்டது. ஒன்று வான் இயற்பியல் (Astro Physics) மற்றது கணியத்தோடு கூடிய பிறப்பியம் (Astrology). இந்த வான் இயற்பியலை மற்கலியின் முன்னோர்கள் செழுமைப் படுத்தியுள்ளனர். இத்தகைய அறிஞர்கள்களை தொல்காப்பியர் “அறிவர்” எனப் பாராட்டுவார். அறிவர்களே கணியர்கள்,

  பனியும் வெயிலுங் கூதிரும் யாவும்
  துனியில் கொள்கையொடு நோன்மை யெய்திய
  தனிவுற் றறிந்த கணிவன் முல்லை

  அறிவன் என்றது கணிவனை. மூவகைக் காலமும் நெறியினாலாற்று தலாவது `பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் மூவகைக் காலமும் `நெறியின் ஆற்றிய அறிவன்’ என்றார். உதாரணம்:

  புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
  பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
  விண்ணில் வுலகம் விளைவிக்கும் விளைவெல்லாங்
  கண்ணி யுரைப்பான் கணி.

  இவ்வாறு இளம்பூரண அடிகள் அறிவன் என்பதற்குக் கணிவன் என்று பொருள் கூறுகிறார். ஏறத்தாழ கி.மு.14 ஆம் நூற்றாண்டினர் எனக் கருதப்படும் தொல்காப்பியர், தம் இலக்கண நூலில் வானியல் குறிப்புகளைத் தெளிவாக குறித்திருக்கிறார்.இனி, சூத்திரம்:

  ‘அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,
  ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
  இரு-மூன்று மரபின் ஏனோர் பக்கமும்,
  மறு இல் செய்தி மூவகைக் காலமும்,
  நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்,
  நால்-இரு வழக்கின் தாபதப் பக்கமும்,
  பால் அறி மரபின் பொருநர்கண்ணும்,
  அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
  தொகை நிலைபெற்றது’ என்மனார் புலவர். 

  – தொ.கா, பொருளதிகாரம், புறத்திணையியல், 74

  இதன் ஒவ்வொரு வரிக்கும் நீண்ட விளக்கங்களை உரையாசிரியர்கள் எழுதியுள்ளார்கள். இதில் விரிவானதும், மிகச்சிறப்பானதும் நச்சினார்க்கினியரின் உரை. முழு உரையையும்  காணலாம். அறிவன் என்பதற்கு கணியன் (சோதிடன்) என்று இளம்பூரணர் பொருள் கொள்கிறார். இது ஞானியைக் குறிக்கவில்லை, மூவகைக் காலம் என்பது மழையும் பனியும் வெயிலும் என்கிறார். நடைமுறை சார்ந்த அவரது யதார்த்தவாதம் இதில் வெளிப்படுகிறது.

  “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” – குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்.

  இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ வெனின், அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிரு படலத்துள், “பனியும் வெயிலுங் கூதிரும் யாவும், துனியில் கொள்கையொடு நோன்மை எய்திய தணிவுற்று அறிந்த கணிவன் முல்லை” எனவும் ஓதுதலின் மேலதே பொருளாகக் கொள்க. அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் ‘மூவகைக் காலமும் நெறியின் ஆற்றின் அறிவன்’ என்றார்.

  தமிழரது அறுபது ஆண்டுகள் என்ற ஆண்டுக் கணிப்பும், கதிரவன், திங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழர் வகுத்துள்ளனர். 12 ஆண்டுகளை ஒரு மாமாங்கம் எனக் கணிக்கும் தமிழர் வழக்கம் தமிழரிடம் இருந்துள்ளது. தமிழர் கண்டறிந்து வழக்கிற் கொண்ட வானியல் செய்திகளை உலகப் பேரறிஞர் பலர் ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர். சிலேட்டர் என்னும் “அறிஞர் தமிழரின் வானவியல் கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணித முறைகளிலும் நிதானமானது” எனக் கூறியுள்ளதாக முனைவர் அ.தட்சணாமூர்த்தி தமிழர் நாகரிகமும் பண்பாடும் (பக்: 166) என்ற நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

  தமிழர், வானியலை நன்கறிற்தோரைக் ‘கணியர்’என குறிப்பிட்டிருக்கின்றனர். வானில் வலம் வரும் கோளின் அசைவுகளைக் கொண்டு காலத்தைக் கணித்து நன்மை தீமைகளைக் கூறுபவராகக் கணியர் திகழ்ந்துள்ளனர். கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் என்ற அறிவர்களின் பெயர்கள் இக் கூற்றுக்குச் சான்றாகின்றன. அரசர் அவையில் பெருங்கணிகன் என்ற வானியல் அறிஞன் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றது.

   

  விசும்பு (Space)

  ஆங்கிலத்தில் “space” என அழைக்கப்படுகின்ற விண்வெளியைத் தமிழர் விசும்பு எனக் குறிப்பிட்டனர். விண்ணுக்கும் (sky) விசும்பிற்கும் (Space) உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தனர். விசும்பிற்கும் அப்பால் பரந்து விரிந்த வெளியை அண்டவெளிகள் (Galaxy) என்றனர். இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ (Galileo தொலைநோக்கி வாயிலாக அண்டங்களைக் கண்டறிவதற்கு முன்பாகவே தமிழர் கொண்டிருந்த வானியல் அறிவு வியப்பை ஏற்படுத்துகின்றது. பழம் பெரும் இலக்கணமான தொல்காப்பியம்,

  “நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்”   
  (தொல்:  பொரு: 90)

  என அக்கால ஐம்பூத இயல்பைக் குறிப்பிடுகின்றது.

  முதலில் விசும்புதான் இருந்தது. அங்கே சூரியக் குடும்பங்கள் தோன்றின. அவை சுழலும் போது தீ உண்டாயிற்று. அதிலிருந்து ஒளி பிறந்தது. சூரியக் குடும்பங்கள் உதிர்ந்த தீப்பிழம்புகள் கோள்கள் ஆயின. அவை சுழலும்போது காற்று ஏற்பட்டது. காற்றோடு கலந்த கோள்களில் தண்ணீர் கிடைத்தது. அக்கோள்கள் குளிர்ந்த பின் மண் உண்டாயிற்று.  (திரு. இராசகோபாலன் - இலக்கியத்தில் வானியல் பக்:17-18) புறநானூறு என்ற சங்ககால இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள இச் செய்தி இன்றைய அறிவியலாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வானியல் உண்மையாகும்.

  “மண் திரிந்த நிலனும்
  நிலனேந்திய விசும்பும்
  விசும்பு தைவரு வளியும்
  வளித்தலை இய தீயும்
  தீ முரணிய நீரும் என்றாங்கு
  ஐம்பெரும் பூதத்து இயற்கை” (புறம் 2)

  மண்ணிருந்து பார்க்கும் போது விண் நீலமாகவே தெரியும். ஆயினும் விசும்பு இருள் மயமானது என்பதைக் கண்டறிந்து சொல்கிறது மலைபடுகடாம் என்ற இலக்கியம்.

  “திருமழைத் தலைஇய இருள்நிற விசும்பின்..” (மலைபடு: 1-2)

  யுகம் என்பதனை தமிழர் அக்காலத்தே ஊழி என அழைத்தனர். ஊழிகளைத் தொடர்ந்தே வானம், காற்று, தீ, நீர், நிலம் என்பன தோன்றின என்பதை பரிபாடல் என்ற இலக்கியம் தெளிவாகக் கூறுகின்றது.

  “விசும்பில் ஊழூழ் செல்லக்
  கருவளர் வானத்திசையில் தோன்றி
  உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
  செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
  தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
  நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு” - பரிபாடல்-2

  முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றின. பூமியின் தோற்றம் பற்றிய தமிழரது இத்தெளிவான செய்தியை இன்றைய அறிவியல் உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

   

  ஞாயிறு (Sun)

  ஞாயிறை நன்கு ஆராய்ந்த அறிவியலாளர் கதிரவன் ஒரு திடப்பொருள் அல்ல என்றே கூறுகின்றனர். கதிரவனில் காணப்படும் பல தாதுப்பொருட்கள் (Minerals) ஆவி உருவில் இருக்கின்றன என்றும் அவை எரிவதாலேயே நமக்கும் வெப்பமும் ஒளியும் கிடைப்பதாகக் கூறுகின்றனர். பெரும்பாணாற்றுப்படை கதிரவனைப் “பகல் செய் மண்டிலம்” எனக் கூறகின்றது.

  கதிரவனுடைய தன்மைகளையும் பயன்களையும் நன்கு உணர்ந்த தமிழர் பழங்காலந் தொட்டே கதிரவனை வழிபட்டு வந்துள்ளனர். சிலப்பதிகாரம் என்ற ஒப்பற்ற இலக்கியத்தை ஆக்கிய இளங்கோவடிகள் தன் கடவுள் வாழ்த்தில் ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’எனக் கதிரவனுக்கே முன்னுரிமை வழங்குகின்றார்.

  வெண்மை என்பது தனி நிறம் அல்ல, அது ஏழு நிறங்கள் முறைப்படி சேர்ந்த கலவை என அறிவியலாளர் கூறுகின்றனர். கதிரவனில் VIBGYOR என்கின்ற ஏழு வண்ணங்கள் உண்டு என்பதை அறிவியல் ஏற்றுக்கொண்டுள்ளது. இதை சங்கப் புலவரான கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்ற இலக்கியத்தில் கதிரவன் ஏழு வண்ணக் குதிரைகள் பூட்டிய தேரில் கதிரவன் உலா வருகின்றான் என்கிறார்.

  “எல்லை செல்ல ஏழுர்பு இறைஞ்சிப்
  பல்கதிர் மண்டிலம் கல்சேர்வு மறைய” (குறிஞ்சிப் பாட்டு)

  இரவுப் பொழுதில் துருவ மீனைக் கொண்டு திசையறிந்த தமிழர் பகலில் நான்கு திசைகளையும் கதிரவன் துணை கொண்டு அறிந்தனர். சித்திரைத் திங்கள் பத்தாம் நாளுக்குப் பின் கதிரவன் தமிழகப் பரப்புக்கு மேல் தலை உச்சியில் இருப்பதைக் கண்டறிந்தனர். அன்றைய நாளில் இரண்டு கோல்களை நட்டு, அக் கோள்களின் நிழல் தரையில் விழும் நிலையைக் குறித்துத் திசைகளைக் கணக்கிட்டனர் என்பதை நெடுநல்வாடை என்ற இலக்கியம்,

  “விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்
  இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
  ஒரு திறம் சாரா அரைநாள் அமையத்து
  நூலறி புலவர் நுண்ணிதன் கயிறிட்டு”   (நெடுநல்வாடை)

  எனக் கூறுகிறது.

  கதிரவனை மையமாகக் கொண்டே பிற கோள்கள் சுற்றி வருகின்றன என்ற வானவியற் கூற்றைக் கி.பி 1543 இல் கண்டறிந்து வெளியிட்டவர் கொப்பர்னிக்கஸ் என்ற வானவியல் அறிஞராவர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கதிரவனை முதலாகக் கொண்டே பிற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதைக் கண்டறிந்தனர் என்பதை நீலகண்ட சாஸ்திரி என்பார்,

  “என்றூழ் உறவரு மிருசுடர் நேமி
  ஒன்றிய சுடர்நிலை யுள்படுவோரும்” (பரி. 19:46-47)

  என்ற பரிபாடல் வரிகளை ஆதாரம் காட்டிக் கூறியுள்ளார். (தமிழர் மரபுச் செல்வங்கள் பக்: 119)
  “சுடர் சக்கரத்தைப் பொருந்திய ஞாயிறு முதலான கோள்களது நிலைமையை வரைந்த ஓவியங்களால் அறிவோரும்” எனப் பொருள் தருகின்றன இவ்வரிகள். 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட சூரிய மையக் கொள்கை சங்கத்தமிழரால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது.

  “வாள்நிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
  இளங்கதிர் ஞாயிறு”      (சிறுபாண் - 242 243)

  ‘ஒளி மிக்க வானில் கோள்மீன்களால் சூழப்பட்ட இளம் கதிர்களைக் கொண்ட கதிரவன்’ என்பது இவ் வரிகளின் பொருளாகும். கதிரவனின் மையப் பகுதியில் வெப்பம் கனன்று கொண்டிருப்பதை நற்றிணை ‘அகங்கனலி’ எனக் கூறுகின்றது. கதிரவனில் இருந்து வெளியேறும் தீ நாக்குகளை ‘நெடுஞ்சுடர்க் கதிர்’ எனக் குறிப்பிடுகின்றது.

   

  கோள்கள் (Planets) 

  உலகம் தட்டையா ? உருண்டையா ?

  விசும்பு அண்டம் (Outer Space) எங்கும் பரவிக் கிடக்கும் கோள்களைப் பற்றிப் பழந்தமிழர் நன்கு தெரிந்துகொண்டிருந்தனர். கோள் என்பது கோளம் (Globe) என்ற உருண்டை வடிலான பொருளைக் குறிக்கும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். பூமி உட்படக் கோள்கள் யாவும் உருண்டையானது எனத் தமிழர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். கோள் என்பதற்கு வளைதல் என்ற பொருளும் உண்டு. விசும்பு வெளியில் இவை வளைந்து சுழன்று வருவதால் கோள் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பர். 

  பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்புவரை, உலகம் தட்டையானது என்றே நம்பி வந்தனர். பதினைந்தாம் நூற்றாண்டில்தான் போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் காபர்நிகஸ் (Nicolaus Copernicus) என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என முறையாகக் கணித்து கூறினார். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோ, உலகம் உருண்டையானது என்பதனைத் தம் தொலைநோக்கியால் கண்டுபிடித்துச் சொன்ன பிறகுதான் மக்கள் ஏற்றுக்கொண்டனர். மேலை நாட்டினர் கண்டறிந்ததற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லியது திருக்குறள்,

  சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை

  விசும்பில் ஒளிரும் பொருட்களை மீன் என்றே அழைத்தனர். தாமே ஒளிவிடக் கூடியவற்றை நாண்மீன் எனக் குறிப்பிட்டனர். கதிரவனின் ஒளி கொண்டு ஒளிர்வனவற்றைக் கோள்மீன் எனக் குறிப்பிட்டனர். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பன ஞாயிறின் ஒளி கொண்டு ஒளிரும் கோள்களாகும்.

  அகன்ற மன்றத்தில் ஆட்டுக்கிடாய்களும் சிவலைப் பறவைகளும் விளையாடும் காட்சி நீலவானில் நாண்மீன்களும் கோள்மீன்களும் கலந்திருப்பதைப் போல் இருந்தது எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.
  நீநிற விசும்பின் வலனேர்பு திரிதரு

  நாண்மீன் விராய கோணமீன் போல
  மலர்தலை மன்றத்து......   (பட்டி. 67-77)

  கதிரவக் குடும்பத்தில் ஒன்பது கோள்மீன்கள், அவற்றின் துணைக் கோள்கள், குறுங்கோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் என்பன உள்ளதாக விண்ணியல் அறிஞர் கூறுவர். இக்கோள்களைப் பரிபாடற் பாடலொன்று பட்டியலிடுகின்றது.

  “தீவளி விசும்பு நிலம் நீர் ஐந்தும்
  ஞாயிறும் திங்களும் மறனும் ஐவரும்” (பரி. 3: 4-5)

  இப்பாடல் தீ, காற்று, விண், நிலம், நீர் என்ற ஐம்பூதங்களோடும்  ஞாயிறு திங்கள் என்ற முதன்மைக் கோள்களோடும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஐந்து கோள்களையும் குறிப்பிடுகின்றது. கோள்களைப் பற்றிய தெளிவான செய்திகள் சிலவற்றைப் பரிபாடல் தருகின்றது.

  “விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
  எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
  தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
  உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
  வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

  புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
  அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
  இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
  வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
  மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

  பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
  மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
  எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
  புரை கெழு சையம் பொழி மழை தாழ,
  நெரிதரூஉம் வையைப் புனல்.   (பரிபாடல் 11: 1-15)

  இப்பாடலின் பொருளை முழுமையாக விளங்கிக் கொள்வது சிறப்பானது.

   

  திங்கள் (Moon)

  மதி, நிலா என தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட்ட துணைக் கோள் திங்களாகும். இதனை இப்போது சந்திரன் என்ற வடமொழிச் சொல்லால் அழைத்து வருகின்றோம்.திங்களானது கதிரவனோடு சேர்வதுவும், பிரிந்து எதிர்ப்பக்கமாகச் சேர்வதுவும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும். இதனை,

  “மாசு விசும்பின் வெண்டிங்கள்
  மூவைந்தான் முறை முற்ற”  (புறம் 400)

  என்பதால் அறியலாம். திங்கள் வளர்கையில் 15 நிலைகளை உடையது. அது போல் தேய்கையிலும் பதினைந்து நிலைகளை உடையது. எட்டாம் நாள் பிறை நிலவு ‘எண்ணாட்டிங்கள்’ (புறம் 118) எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. முழுநிலாவை உவவுமதி என அழைத்துள்ளனர். முழுமதி நாளில் கதிரவனும் திங்களும் எதிரெதிராக இருக்கும். இதனை,

  “உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
  இருசுடர் தம்முள் நோக்கி யொருசுடர்

  புண்கண் மாலை மறைந்தாங்கு”  (புறம் 65) என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகின்றது.

   

  செவ்வாய் (Mars)

  பூமியில் இருந்து நோக்கும் போது செந்நிறம் உடையதாகத் தோன்றும் கோள் செவ்வாய் ஆகும். செந்நிறமாய் இருந்த கோளை செவ்வாய் என்றனர். செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு என்பதையும் நம்மவர் என்றைக்கோ கண்டுபிடித்துச் சொல்லிவிட்டனர். மேலும் இக்கோளினை செம்மீன், அழல் எனப் புறநானூறும், பதிற்றுப்பத்தும் குறிப்பிடுகின்றன. பரிபாடல் இதனைப் படிமகன் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது. அக்காலத்திலேயே இதைக் கண்டறிந்து பொருத்தமுறச் செவ்வாய் எனப் பெயரிட்டுள்ளனர். கடலின் மேல் தோன்றுகின்ற சிறிய திடலின் மேல் ஏற்றப்பட்ட சிறு விளக்குப் போல் செவ்வாய் தோன்றுகின்றது என்பதை

  முந்நீர் நாப்பன் திமிற்சுடர் போல
  செம்மீன் இமைக்கும் மாவிசும்பின்” (புறம். 60: 1-2)

  புலவரான மருத்துவன் தாமோதரனார் கூறுகின்றார்.

   

  வெள்ளி (Venus)

  பழந்தமிழர் வானவியலில் பெரிதும் பேசப்பட்ட மற்றுமொரு கோள் வெள்ளி ஆகும். இக்கோள் வெண்மை நிறமுடையது, ஆகையால் வெள்ளி எனப் பெயர் பெற்றது என்பர். பெரும்பாலும் வெள்ளியென்றே அழைக்கப்பட்டு வந்ததாயினும் வெண்மீன், வைகுறுமீன், வெள்ளிமீன் போன்ற பெயர்களிலும் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம்.இது வெண்மை நிறமுடையதால் வெள்ளி எனப்பட்டது. இது காலையிலோ மாலையிலோ தோன்றும். காலையில் தோன்றுவதை விடிவெள்ளி என்பர். வெள்ளியை மழைக்கோள் என்றும் அழைப்பர். வெள்ளி தெற்கு நோக்கி நகர்ந்தால் மழை பொழியும் என நம்பினர்.

  “வெள்ளி தென்புலத்துறைய விளைவயல்
  பள்ளம் வாடிய பயனில் காலை”  (புறம். 339)

   

  சனி (Saturn)

  கோள்களில் தொலைவில் இருப்பதுவும் கரிய நிறமுடையதுவும் சனி ஆகும். கருநிறம் பொருந்தியதாகக் கருதப்பட்டதனால் இது காரிக்கோள்  மற்றும் மைம்மீன் என்றனர். காரி என்பதே இதன் தூய தமிழ்ப் பெயராகும். பின்னாளில் வடமொழிப் பெயரான சனி செல்வாக்குப் பெற்றுவிட்டது. சனியானது புகைக்கின்ற போதும் ( அதாவது ஓரைகளான இடபம், சிங்கம், மீனம் என்பவற்றில் சனி நுழைகின்ற போதும்) தூமம் என்ற வால் வெள்ளி தோன்றுகின்ற போதும் தென்திசை நோக்கி வெள்ளி ஓடினாலும் பெரும் தீங்கு விளையும் என பழந்தமிழர் நம்பினர்.

  “மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
  தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
  வயல்அகம் நிறையப், புதற்பூ மலர
  மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்...” (புறம் 117)

  எனத் தொடர்கின்ற இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் கபிலர் ஆவர். சனி சில (இடபம், சிம்மம், மீனம்) ஓரை(இராசி)களில் நுழையும் போதும், வால் வெள்ளி தோன்றினாலும், வெள்ளி தெற்கு நோக்கிச் சென்றாலும் உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. பெருந்தீங்கு விளைவிக்கவல்ல நிலைகளில் கோள்கள் இருந்தாலும் பாரியின் பறம்பு செழிப்புக் குன்றாத நாடு. ஆயினும் பாரியை இழந்ததால் பறம்பு வளம் குன்றியது என இப்பாடலில் கபிலர் குறிப்பிடுகின்றார்.இதையே சிலப்பதிகாரம்,

  “கரியவன் புகையினும் தூமம் தோன்றினும்
   விரிகதிர் வெள்ளி தென்புலம் பாடரினும்” சிலம்பு (10-102-10) எனக் கூறுகின்றது.

   

  புதன் (Mercury)

  புதிதாக கண்டறிந்தத கோள் புதன் என அழைக்கப்பட்டது. ஞாயிறுக்கு மிக அருகில் இருந்ததால் ”உடன்” என்று அழைக்கப்பட்டு, புதன் என்றானது. இதே பரிபாடல் புதன் கோளைப் புந்தி என்ற பெயரிட்டு அழைக்கிறது. புதன் கோளுக்கு அறிவன் என்ற பெயரும் உண்டு.

   

  வியாழன் (Jupiter)

  "வியா" என்றால் பெரிய என்ற பொருள். வியாழனை ”ஆண்டளப்பான்” என்றும் ”ஆசான்” என்றும்  தமிழ் வள்ளுவர்கள் வடித்தனர். வியாழக் கணிதம் எனும் தனிக்கணக்கு  கணியத்தில் உள்ளது. வியாழன் பெயர்ச்சியை (குரு பெயர்ச்சி) வைத்தே இன்றுவரை கணியம் சொல்லி வருகின்றனர்.

   

  பொழுது

  நம் முன்னோர் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களைக் குறிப்பதாகும். அதாவது 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களைக் குறிப்பதாகும். நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம். அவ்வாறெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24-6 1440 ஆகும். ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர்.

  இவ்வாறான இந்தக் காலப்பகுப்பு வானியல் பற்றிய அறிவின்றி வகுக்க முடியததாகும்.

  அறிவியற்துறை பெருவளர்ச்சி கண்டிருக்கும் இக்காலத்தில் வானவியற் பற்றிய ஆராய்வுகளுக்குப் பல்வேறு தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. தொழில் நுட்பக் கருவிகள் எதுவும் இல்லாத அக்காலத்தில் விசும்பில் சுழன்றுகொண்டிருக்கும் கோள்களின் வகையறிந்து, அவற்றின் இயக்கங்களை அறிதியிட்டு, அவை உயிர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை முன்னோர் கணித்திருக்கின்றனர்.  ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வானியல் பற்றிய ஆராய்வுகளுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரது வானியற் சிந்தனைகள் வெளிப்பட்டிருந்தன.

  தமிழரது வானியற் கருத்துகள் எதுவும் மாணவரது பாடநூல்களில் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இவை பெரும்பாலும் ஐரோப்பியரது வானியல் ஆய்வுகளை மையப்பபடுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. வானியற்துறை மட்டுமல்ல, தமிழர்  சிறந்து விளங்கிய துறைகள் பலவும் தமிழ் மாணவரது அறிவியல், வாழ்வியற் கல்வியில் இடம்பெறாதிருப்பது வேதனைக்குரியதே. இலக்கியக் கல்வியிலும், அரிதாகச் சிலர் ஆய்வுகளில் ஈடுபடும் பொழுதுகளிலும் மட்டுமே இத்துறைகள் பேசப்படுகின்றன.

   

  வான்வழிப்பயணம் (Space Travel)

  பழந்தமிழ் இலக்கியங்களில் வான்வழிப் பயணங்கள் பற்றி கூறுகின்றன. வலவன் ஏவா வானூர்தி (புறம் 27 : 8) என்னும் புறப்பாடல் வரி, சங்க காலத்திலேயே ஓட்டுநர் இல்லா வானூர்தி இருந்தது என்னும் வியக்கத்தக்க செய்தியைத் தருகிறது.


  Reference
  பழந்தமிழர் வானியலும் வடிவியலும்_ஆதி.சங்கரன் 

   

  தொடரும்...

  C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai