Enable Javscript for better performance
மத அரசியல்-46: ஆசீவகம்- விநாயகர், முருகன் எப்படி ஆசீவக நெறியின் கடவுளர்?- Dinamani

சுடச்சுட

  

  மத அரசியல்-46: ஆசீவகம்- விநாயகர், முருகன் எப்படி ஆசீவக நெறியின் கடவுளர்?

  By C.P.சரவணன்  |   Published on : 12th January 2019 10:48 AM  |   அ+அ அ-   |    |  

  asee

   

  ஆசீவகர்கள் உருவ வழிபாடற்ற அறிவியல் சார்ந்த நெறியை தழுவியுள்ளனர். பகுத்தறிவின் அடிப்படையிலான ஒரு சமயத்தை நிறுவ முயன்றவருக்கு கடவுள் தேவையில்லாமல் போனார். அறிவர்கள் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாது, இந்த நாத்திகச் சிந்தனையைத் தனது சீடர்கள் பிறருக்கும் போதிக்க வேண்டும். பிற்காலத்திய நாத்திகவாதிகள் கடவுளை மறுக்கச் சொல்லிய காரணங்கள் பலவற்றையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார் என்பது மிகுந்த வியப்புக்குரிய விஷயமாகும். இத்தோடு விடவில்லை அவர்கள், கடவுளின் இருப்பை நிறுவ முன் வைக்கப்படும் வேறு சில வாதங்களையும் தகர்த்தெறிகிறார்கள்.

  யானை ஏன் ஆசீவக நெறியின் அடையாளமாக உள்ளது? 
   
  யானையின் கற்றுக்கொள்ளும் திறன், நினைவாற்றல், பொறுமை, மனவலிமை, குழுவாக இயங்கும் பண்பு போன்றவற்றை ஒரு ஆசீவகர் பெற்றால்தான் பல படிநிலைகளைக் கடந்து நிறமிலி(கழிவெண்நிலை)யை அடையமுடியும்.அதனைக் குறிக்கவே சாத்தன் கோயில்களில் வெள்ளையானைச் சிற்பங்கள் உள்ளன.

  ஆசீவக மதத்தவர்களின் சின்னமாக யானை இருந்துள்ளது. அதன்படியே, திருப்பட்டூர் அரங்கேற்ற ஐயனார் கோயிலில் சுவாமிக்கு எதிர்புறம் உள்ள வாகனமாக யானை சிலை வடிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருவெள்ளறை கோயிலின் கருவறை இரண்டு வெள்ளையானைகளின் மீதே அமைக்கப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் குடைவறை ஓவியத்திலும் யானை இடம்பெற்றுள்ளது. சமயச் சண்டைகள் நிலவிய காலத்தில், வேதங்களை எதிர்த்த ஆசீவக சமயத்தின் குறியீடான யானையை, சைவ மத குறியீடான முதலை கடிப்பது போன்ற சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் மூலம் ஆசீவக மதம் அழிக்கப்பட்டு, சைவ மற்றும் வைணவ மதங்கள் தமிழகத்தில் தழைத்தோங்கியதை காண முடிகிறது. 

   

  யானையும் நிறக்கோட்பாடும்

  யானை, தான் பிறக்கும் பொழுது கருப்பு நிறமாக இருக்கும்(முதல் நிலை). பிறகு அது வளர வளர அதன் நிறம் கருப்பு நிறத்திலிருந்து சாம்பல் (Grey) நிறத்திற்கு சிறிது சிறிதாக மாறும். யானை, தான் குட்டியாக(கருப்பு நிறம்) இருக்கும் பொழுது, தன் தாயை (சாம்பல் நிறம்) ஒழுக்கத்துடன் பணிவாகப் பின்பற்றிச் சென்று தன் சிறுவயதிலேயே தன் வாழ்விற்கான பாடங்களையும் ஆதாரங்களையும் தன் தாயிடமிருந்துக் கற்றுக்கொள்ளும் அறிவைக் கொண்டது. தாய் யானையும் தன் குட்டியானைக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தும் தவறு செய்யும் பொழுது திருத்தவும் குட்டிக்கு உதவியாகவும் பரிவுடனும் இருக்கும். அந்தக் குட்டியானை, தான் வளரும்பொழுது அது தன் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும். மேலும், தான் கற்றுக்கொண்டதைப் பிற்காலத்தில் தன் குட்டிக்கும் கற்றுக்கொடுக்கும். மேலும், ஆனை பிற உயிரினங்களிடம் பரிவுடன் இருக்கும்.

  இதே போல, ஆறு படிநிலைகளில் கீழ் நிறப்படிநிலையில் உள்ள ஆசீவகர்கள், தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ள ஆசீவகர்களுக்குச் சொல்லிக்கொடுப்பர். ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. ஆசீவகர்கள் பிற உயிரினங்களிடம் பரிவுடன் இருப்பர்.

  யானையின் இந்தப் பண்புகளை(மனப்பாங்கை – Attitude) ஒரு ஆசீவகர் பெற்றால்தான் வாழ்வில் மேன்மை அடைந்து நிறமிலி எனும் தெய்வத் தன்மையை அடையமுடியுமென்பதால், ஒவ்வொரு ஆசீவகருக்கும் இப்பண்புகள் முக்கியம். அதனால், ஆனையின் தலையையும் மாந்தரின் உடலையும் சேர்த்து ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் உருவாக்கப்பட்டார். ஒவ்வொரு ஆசீவகருக்கும் விநாயகர் உருவம் ஒரு கடவுளாகவும்(உள்ளே கடப்பது) வாழ்வில் மேன்மை அடைந்து தெய்வத் தன்மையை அடைய தேவையானவற்றிற்கு ஒரு பற்றுகோலாகவும் (Inspiration)  இருக்கிறது. ஆசீவக நெறியின் நிறக் கோட்பாடும் இதிலிருந்தே தோன்றி வளர்ச்சியடைந்திருக்கலாம்.

  ஆசீவக சித்தர்கள் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள். இதற்கு முதன்மையான தேவையாக இருப்பது மூக்கும் மூச்சுக்குழாயும் தான். ஆனையின் மூச்சுக்குழாய் நீளமாக இருப்பதால் அது மூச்சுப்பயிற்சியின் முதன்மைத்துவத்தைக் குறிப்பதாகவும் உள்ளது.

   

  "வினாயகர்" தோற்றம்

  அது ஒரு தத்துவ உருவமே தவிர கடவுள் இல்லை. ஆசிவர்கர்கள் கடல்கடந்து ஆராய்ச்சிக்குச் செல்ல வணிகச் செட்டியார்கள் உதவினர். அதன்படி, ஆசீவகச் சின்னம் யானை. ஆசீவகத்துக்கு உதவிகள் புரிந்து, உறுதுணையாய் நின்றவர்கள் வணிகர்களாகியச் செட்டியார்கள். ஆகவே, செட்டியார் உடலில் யானைத் தலையைப் பொருத்தி "வினாயகர்" தோற்றம் உருவானது. 

  மேலும், ஜைன, புத்த நெறிகளிலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவக நெறியை அழிக்க முற்பட்ட சிவநெறியிலும் விநாயகர் வழிபாடு பொதுவாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவநெறி ஆசீவக நெறியை அழிக்க முற்பட்டது என்றால், பின்பு எப்படி ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் சிவநெறியில் வந்தார் என நீங்கள் கேட்கலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவகர்களை சிவநெறியினர் தங்கள் நெறிக்கு மாற்ற முயன்றனர். சில ஆசீவகர்கள் மாறினர். பலர் மாறவில்லை. அதனால், எண்ணாயிரம் (8000) ஆசீவகர்கள் கழுவேற்றம் செய்து கொல்லப்பட்டனர். இப்படி சிவநெறியில் சேர்ந்த ஆசீவகர்களால் தான் விநாயகர் வழிபாடு, பிள்ளையார் சுழி, ஊன் உண்ணாமை, உண்ணா நோன்பு,  பல அறிவியல் கோட்பாடுகள் முதலிய ஆசீவக நெறிக் கோட்பாடுகள் சிவ நெறியில் நுழைந்தன. அதனால் தான், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்ட(ஏதேனும் இயற்றப்பட்டிருந்தால்) சிவ நெறியாளர்கள் இயற்றிய நூல்களில், விநாயகர் பற்றிய குறிப்புகள் இருந்திருக்காது. 

  மேலும், பிள்ளையார்பட்டி (காரைக்குடி) கற்பக விநாயகர் கோயில் சிலை அதன் மேல் உள்ள பழங்கால எழுத்தை வைத்து கி.மு. 400ஆம் ஆண்டின் காலத்தியது எனலாம். விநாயகர் வழிபாடு இவ்வளவு பழமையானதாக இருந்தும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை(1200 ஆண்டுகள்) விநாயகர் பற்றி சிவ நெறியாளர்கள் இயற்றிய இலக்கியங்களில் ஒரு பாடல் கூட இல்லையென்றால், விநாயகர் சிவ நெறியைச் சார்ந்த கடவுள் இல்லை என்றே பொருள்.

  மேலும், ஜைன புத்த சிவ நெறிகளில் விநாயகர் வழிபாடு ஏன் செய்கிறோம் என்ற விளக்கமும் சரியாக இல்லை. ஆனால், ஆசீவக நெறியில் இருப்பதைப் போல விநாயகர் அந்நெறிகளிலும் கடவுளாகவோ அல்லது முழுமுதற் கடவுளாக இருக்கிறார். மேலும், விநாயகரைக் குறிக்கும் அனைத்து பெயர்களும் தமிழ்ச் சொற்களே.

  விநாயகர்    = வி + நாயகர் = உயர்ந்த தலைவன்
  பிள்ளையார் = புல் + ஐ + ஆர் = வியக்கத்தகு அருகம்புல் கொண்ட் ஆன்றோன்
  கணேசன்       = கணம் + ஈசன் = கூட்டத்தின் கடவுள்/மக்களின் கடவுள்
  கணபதி      = கணம் + பதி = கூட்டத்தின் தலைவன்/மக்களின் தலைவன் 

  விநாயகக் கடவுள்களுக்கு பூசை சமஸ்கிருதத்தில் செய்யும் பொழுது ‘சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்|’ என்றுக் கூறுவர். “சசிவர்ண” அப்படியென்றால், ‘நிலா மாதிரி நிற’ என்றால் ‘வெள்ளை நிற உடை அணிந்தவனே’ என்று பொருள். ஆசீவகத்தில் கடை நிலையில் உள்ளவர்கள் மட்டும் தான் வெள்ளை நிற உடை அணிவர். வெள்ளை நிறத்திற்கு அப்படி ஒரு சிறப்பு. மேற்கூறியவற்றை வைத்து, விநாயகர் ஆசீவக நெறியைச் சார்ந்த கடவுள் என்று நாம் ஆணித்தரமாகக் கூறலாம். விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது.

  முருகன், சிவன், முதலிய தெய்வங்களை வணங்கும் முன்பு வணங்க வேண்டும் என நெறிகளை வகுக்கவேண்டும்?.  ஏனென்றால், விநாயகர் ஆசீவக நெறியின் கடவுள். முருகன், சிவன், முதலியவர்கள் தெய்வ நிலையை அடைந்த ஆசீவக சித்தர்கள். அதற்காக, சிவன் என்ற தெய்வம் இல்லை என்பதில்லை. அவரும் தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தர் தான். மேலும், ஆசீவக நெறியின் பிற அடையாளங்களான பிள்ளையார் சுழி,  சுழற்றியம் (ஸ்வஸ்திகா – சத்தியகம் எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து திரிந்திருக்கலாம்).

  அனைத்து கோயில்களிலும் முதலில் விநாயகரை வணங்கிய பின்பே உள்ளே செல்லும் வழக்கம் இன்று உள்ளது. இது ஆசீவகத்தின் செல்வாக்கு மறையவில்லை என்பதனை உணர்த்துகிறது. பழந்தமிழரின் குரு (சாத்தன்) வணக்கமே தற்போது பிள்ளையார் வழிபாடாக மாறியுள்ளது. 

   

  முருகன் எப்படி ஆசீவக நெறியின் தெய்வம்

  பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆசீவக நெறியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் மாற்றப்பட்டாலும் அதை முழுவதுமாக அழிக்க முடியாது. அதேபோல் தான் ஆசீவக சித்தர்களின் அடையாளங்களும். முருகன் எப்படி தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தன் என்பர். 
  விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது. முருகன், சிவன், முதலியவர்கள் தெய்வ நிலையை அடைந்த சித்தர்கள் (ஆசீவக சித்தர்கள்). இதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.  முதலில், சங்க இலக்கியங்கள் முருகன் எனும் அரசனைப் பற்றித் தரும் செய்திகளைப் பார்ப்போம்

  1.முருகன் என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழநி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். பொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது. அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. இதன் அரசன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன். மற்றும் வையாவிக்கோப்பெரும் பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும் இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசன்.

  2.முருகன் குறுஞ்சி நிலத்து(மலை) அரசன். அங்கு, வாழும் மக்கள் குறவர் (குறத்தி,  குறவன்),  பொருப்பன்,  வெற்பன்,  சிலம்பன், நாடன், கொடிச்சி, வேம்பன், கானவர்.

  3.ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள்(ஆவியர்குடி) வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. பொதினியின்(பழநியின்) இன்னொரு பெயர் திருவாவினன்குடி(திரு+ஆவினன்குடி). ஆவியர் குடியினர் “அருந்திறல் அணங்கின் ஆவியர்” எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது. இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். ‘முருகன் நற்பேர் ஆவி’ என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

  ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி (பழநி). இந்த ஆறு முகடுகளை ஆறுமுகம்(ஆறு+முகம்(முகடு-மலை)) என அழைக்கிறோம். இதை ஆண்டதால், முருகனை ஆறுமுகன் என அழைக்கிறோம். ஆனால், தமிழ் மொழித் தெரியாதவர்கள் ஆறுமுகன் என்றால் ஆறு முகங்களைக் கொண்டுள்ளவன் என தவறாகக் கருதி முருகனுக்கு ஆறு தலைகள் உள்ளது போல கதைகளைப் புனைந்து ஷண்முகன் (ஷண் - சமஸ்கிருதத்தில் ஆறு) என உருவாக்கினர். முருகன், தன் மக்களைக் காக்கும் அரசனாக இருந்துகொண்டு ஆசீவக நெறியைப் பின்பற்றியவன். பின்பு தெய்வ நிலையை அடைந்தான். முருகனை ஆசீவக சித்தன் என நாம் நிரூபிக்க வேண்டுமென்றால், முதலில் முருகன் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். 

  முருகன் யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில், படைவீடு, வேல், சேவல், மயில், காவடி, தண்டம், தலையில் மொட்டை அடிப்பது ஆகிய முருகனுக்குத் தொடர்புடைய விடயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.முதலில், முருகனின் அறுபடைவீடு என்பதை விளக்க வேண்டுமென்றால், முதலில், வீடு என்ற சொல்லின் பொருள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.

  வீடு – உயரத்தில் அமைந்துள்ள ஒரு தங்குமிடம்

  ஒப்புநோக்குக:
  வீ – உயர்வானது, பூவின் வாடும் நிலையைக் குறிக்கும்(வாடி மேலிருந்து கீழே விழும் நிலை)
  வீழ் – உயரத்திலிருந்து விழுவது
  விண் – மேல்(உயரத்தில்) இருக்கும் வானம்
  அருவி – உயரத்திலிருந்து விழும் நீர்அதாவது, மலைமேல்(உயரமான இடம்) இருக்கும் வசிக்கும்/தங்கும் இடங்களை முதலில் வீடு என்றழைத்தனர். பின்பு அச்சொல், பொதுவான தங்குமிடங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
  படை என்ற சொல்லின் விளக்கம்,
  படை – கொல்லும் தன்மை கொண்ட ஒன்று

  முருகன் மலையின் கீழிருக்கும் எதிரிகளை மலையை அரணாகக் கொண்டு போர் புரிந்து விரட்டியமையால்(சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் போல), அம்மலைகளை நாம் படைவீடு என்றழைக்கிறோம்.

  படைவீடு – உயரத்தில் இருந்து கொல்லும் தன்மையைக் கொண்டது.

  அறுபடைவீடுகளில் ஐந்து படைவீடுகள் மலை மேல் இருக்கின்றன. திருச்செந்தூர் மட்டும் விதிவிலக்கு. கோயில் மலை மேல் இல்லாமல் கடலோரம் இருக்கிறது என்றாலும், முருகன், அயலாரை போர் புரிந்து வெற்றி பெற்றதை இன்றும் சூரசம்ஹாரம் என இன்றுவரை கொண்டாடுகிறோம். படைவீடு எனும் சொல் காலப்போக்கில் பொதுவான படை இருக்கும் இடங்களைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கலாம். அதாவது, வீடு எனும் சொல் பொதுவான தங்குமிடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

  சூரசம்ஹாரம் = சூரன்+சம்ஹாரம் = முருகன் சூரபத்மனை கொன்ற நிகழ்வு
  சூரபத்மன் = சூரன்+பத்மன்
  சூரன் எனும் சொல் ஆரியர்களைக் குறிக்கும். எப்படி என்பதைக் கீழே பார்ப்போம்.
  சுரா – ஆரியர்கள் அருந்திய ஒரு வகை மதுபானம்
  சுரன்>சூரன் – ஆரியர்கள் இம்மதுவை அருந்துபவர்களை சுரன் என்றழைத்தனர்.
  அசுரன் - ஆரியர்கள் இம்மதுவை அருந்தாதவர்களை அசுரன் என்றழைத்தனர்.

  இந்த, சுரன் என்ற வடசொல்தான் சூரன் என மருவியது. அப்பொழுது, முருகன் ஆரியர்களை எதிர்த்துப் போர் புரிந்தானா என்பது ஆயத்தக்க விடயம்.முருகனின் அறுபடைவீடு என்றால், முருகன் போர் புரிந்து வென்ற இடங்களைக் குறிக்கும் என்பது தெளிவாகிறது. அடுத்து, முருகனுக்கு அடையாளங்களாக வேல், மயில், சேவல் என்பன எப்படி வந்தன என்பதைப் பார்ப்போம்.

  வேல்

  வேல் எப்படி வந்தது எனப் பார்ப்போம். வேல் எனும் தமிழ்ச்சொல்லின் பொருளைக் காண்போம்.வெல்>வேல் – வெல்லும் தன்மையைத் தன்னுள் கொண்டது வேல். வெல்லுவது வேல் எனப்பட்டது. அதாவது, போரில் வெற்றிபெறுவதற்கு உதவி செய்வது வேல் எனப்பட்டது. வெற்றியைத் தருவது வேல். ஆகையால், வேல் என்பது வெற்றி மற்றும் வீரத்தின் அடையாளம் எனவும் கூறலாம். வேல் என்ற உடனே நமக்கு முருகன் கையில் உள்ள வேலின் வடிவம் தான் நினைவுக்கு வரும். ஆனால், இதுமட்டும் வேல் அல்ல. சுமேரியாவில் பேல்(Bel) என்ற ஒரு சொல் உண்டு. அதைப் பார்த்தீர்களென்றால் சூலத்தை ஒரு கம்பின் இருபுறமும் வைத்ததைப் போல இருக்கும். இதை, ஆசீவகத்தில் ‘இருபுற முத்தலைக் கோல்’ என்பர். ஆசீவக நெறியின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. வைணவத்தில் நாமமிடும் பழக்கம் இதிலிருந்துதான் தோன்றியது(நாமத்தின் நடுவில் இருக்கும் சிவப்பு நிறம் பகைவரின் குருதியைக் குறிக்கும்). இந்த ‘இருபுற முத்தலைக் கோல்’ம் வேல் தான். வேல் எனும் செந்தமிழ்ச்சொல்தான் பேல் என சுமேரியாவில் திரிந்தது.

  இதிலிருந்து, முருக வழிபாட்டின் தொன்மையை நம்மால் அறிய முடியும். இதைப் பற்றி பிறகு விளக்கமாகப் பார்ப்போம். மயிலும் சேவலும் எப்படி முருகனின் அடையாளங்களாகினவென்றால், இவை தன் எதிரிகளுடன் தந்திரமாகச் சண்டையிடும்(Martial Arts) தன்மையைக் கொண்டவை. ஆகையால், சேவலும் மயிலும் முருகனின் போர்த்திறனைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகின.  பொதினி மலையில்(பழநி மலையில்) மேல் உள்ள முருகனுக்கு தண்டாயுதபாணி எனப் பெயர். அதாவது, கையில் தண்டம் எனும் போர்க்கருவியை(சங்ககாலப் போர்க்கருவி) வைத்திருப்பவன் எனப் பொருள்படும்.  இதிலிருந்து, முருகன் என்பவன் சங்ககால அரசன். அவன் போர் புரிவதில் வல்லவன். போர் புரிந்து பல வெற்றிகளை பெற்றுள்ளான் என்பது தெளிவாகிறது. தமிழர்களுக்கு முருகன் வீரத்தின் அடையாளமாக உள்ளவன்.

  காவடி

  அடுத்து, காவடி என்பது முருகனுடன் எப்படித் தொடர்புடையது என்பதைப் பார்ப்போம். காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். முதலில், காவடி என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம். ‘காவடி’ என்ற சொல் ‘காவுதடி’ என்ற சொல்லின் திரிபு எனக் கூறுவர். கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. சுமை காவுபவர்கள் இலகுவாகச் சுமப்பதற்காக, ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு வைத்துச் சுமந்து செல்வர். காவுவதற்கான தடி என்னும் பொருள்பட இத் தடியைக் காவுதடி என அழைப்பர். முருகன் இந்தக் காவுதடியைப் பயன்படுத்துபவனாக இருந்திருக்க வேண்டும்.

  பழனி மலைமேல் உள்ள தண்டாயுதபாணி(முருகன்) தலையில் மொட்டை அடித்துள்ளவர். முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்திருக்க வேண்டும் என நாம் ஆய்ந்தால், ஆசீவகர், சமணர்கள் மற்றும் பௌத்த நெறியைச் சேர்ந்தவர்கள் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் என நமக்குப் புலப்படும். ஆரம்பக்காலத்தில் பழநி முருகன் கோயிலில் தலையில் மொட்டை அடிக்கும் வழக்கம் வந்தது, முருகன் ஆசீவக சித்தன் என்பதால் மட்டுமே என்பதும் புலப்படும். இதனால் தான், முருகனது பக்தர்கள் காவடி(காவுதடி) தூக்கும் வழக்கமும் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கமும் வந்திருக்கலாம். இதற்குப் பொருள், முருகனை குருவாக ஏற்று, அவனிடம் சரணடைந்து கற்றுக்கொள்ள வருகிறோம் என்பதே (ஆசீவக சித்தர்களிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களைப் போல்).

  (சமணம்(ஆசீவகம், ஜைனம்) மற்றும் பௌத்தத்தில் ஏன் மொட்டை அடிக்கிறார்கள் அதாவது முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்துள்ளார் என்பதன் அறிவியல் விளக்கம் பற்றி சிறிது ஆயவேண்டும்.) ஆசீவக நெறியில் தீர்த்தங்கரர் என்றால் தீர்வைத் தருபவர் (அ) தீர்வு தருவதைக்(தீர்த்தம்) கையில் வைத்திருப்பவர் எனப் பொருள்.

  தீர்த்தங்கரர் = தீர்த்தம் + கரர் = தீர்த்த + ங் + கரர்

  இதேச் சொல்லாடல் ஜைனத்திலும் உண்டு. இத்தீர்த்தங்கரரை அவர்கள் அருகன்(அருகன்>Arhat) எனவும் அழைப்பர். அதனாலேயே ஜைனர்களுக்கு, அருகர்/ஆருகதர் எனும் பெயரும் வந்தது. இப்பொழுது ஏன் இதைக் கூறுகிறேன் எனப் பார்க்கிறீர்களா?. அருகன் என்பது நம் முருகனின் வேறுபெயர்களுள் ஒன்று. நம் முருகனின் பெயரான அருகன் எனும் பெயர் ஜைனத்தில் அனைத்து தீர்த்தங்கரரைக் குறிக்கும் பொதுச்சொல். ஆசீவக முருகன் என்பவன் தீர்த்தங்கரர்(அருகன்) எனும் பெயரில் ஆசீவகத்திலும் ஜைனத்திலும் கந்தன்(ஸ்கந்தா/கந்தாஸ் – Skanda(Sanskrit)/Khandas(Pali)) எனும் பெயரில் பௌத்தத்திலும் உள்ளவன். இதனால் தான், கதிர்காமத்தில் உள்ள கந்தன் கோயிலை இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்தர்களும் வழிபடுகின்றனர். சீனாவிலும் பௌத்த நெறியில் Skanda(Skanda Bodhisattva/Wei Tuo) வழிபாடு உள்ளது. அங்கு, Skandaவை போதிசத்துவர்(Bodhisattva) எனக் குறிப்பிடுவர். போதிசத்துவர் என்பது ஆசீவக சித்தர்களின் வேறுபெயர்களுள் ஒன்று. இதன் பொருள் என்னவென்றால், ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் ‘போதி சத்துவர்’ எனப் பெயர் பெற்றனர். இங்கு நாம் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்தையும் போதிதர்மரையும் ஒப்புநோக்கவேண்டும்.

  ஆசீவக முருக வழிபாடு எப்படி இந்து (தற்போதைய) நெறியிலும் ஜைன பௌத்த நெறிகளிலும் வந்தது என நீங்கள் கேட்கலாம். முருக வழிபாடு எப்படி ஜைன பௌத்த நெறிகளுக்கு வந்தது என்றால், ஜைனக் கோட்பாடுகளும் பௌத்தக் கோட்பாடுகளும் ஸ்ரமணம்(அமணம்>சமணம்>ஸ்ரமணம்) எனும் சமணத்தின் திரிபிலிருந்து தோன்றியவை. அதற்கு முன் சமணம் எனும் சொல் ஆசீவகத்தை மட்டுமேக் குறிக்கும். அதாவது, ஜைனம் தோன்றுவதற்கு முன்பு சமணம் (அமணம்) என்றால் ஆசீவகம், ஆசீவகம் என்றால் சமணம்(அமணம்) என்றே பொருள். ஜைனம் தோன்றிய பின்பு சமணம் எனும் சொல் ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய இரண்டையுமே சேர்த்துக் குறிக்கும் என்பர்.

  பொதுச்சொல்லானது. ஏன் பொதுச்சொல்லாக வேண்டும்?. அதற்குக் காரணம், ஆசீவகத்திற்கும் ஜைனத்திற்க்கும் பொதுவாக உள்ள கோட்பாடுகளால் தான். ஜைனக் கோட்பாடுகள் ஆசீவகக் கோட்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். ஆனால், சிறிது வேறுபாடுகள் உண்டு. இதனால் தான், முருக வழிபாடு, ஜைனத்திலும் பௌத்தத்திலும் உள்ளது. சமணம் எனும் சொல் ஜைனம் தோன்றிய பின்பு ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என்று இருந்தால், பின்பு எப்படி சமணம் எனும் சொல் ஜைனம் எனும் சொல்லின் தமிழ்ச் சொல்லானது என நீங்கள் கேட்கலாம். இதற்கு விடை, முன்பு கூறப்பட்ட ஆசீவக நெறியின் சான்றுகளில் உள்ளது. அதாவது, இதற்குக் காரணம், ஆசீவகக் கோட்பாடுகள் மற்றும் வழிபாடுகள், ஆசீவகர்கள் நம்பிய, முன்பே முடிவு செய்யப்பட்ட விதி எனும் கொள்கையினாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகள் தங்கள் நெறியை புராணங்கள் மூலம் பரப்பியதாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகளால் ஆசீவகக் கோட்பாடுகளை இழுத்துக்கொள்ளப்பட்டதால் ஏற்ப்பட்ட குழப்பங்களாலும், ஆசீவகக் கோட்பாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்று பிற்கால வைதீக நெறியினர்களால் திரிக்கப்பட்டதாலும், பிற்காலத்தில் வைதீக இந்து நெறியின் செல்வாக்கு உயர்வாலும், மக்களிடம் வெகுவாகக் குறைந்த ஆசீவக நெறியின் செல்வாக்காலும், வழிவழியாக வந்த ஆசீவக நெறியைப் பற்றிய அறிவு குறைந்ததாலும், ஆரியர்களால் தமிழர்களின் வரலாற்று திரிப்புகளாலும் அழிப்புகளாலும், தற்காலத்தில் அப்படி ஒரு நெறியே இல்லை என்றளவிற்கு ஒரு நிலையை உருவாக்கிவிட்டது. அக்காலத்திலிருந்தே, ஜைன பௌத்த வைதீக நெறிகள் புராணங்கள் மூலம் தங்கள் நெறியை மக்களிடம் பரப்பின. ஏன், இந்நாட்களில் கூட தொலைக்காட்சிகளில் வைதீக இந்து நெறியினர், இராமாயணம் மகாபாரதம் முதலிய வைதீக இந்துக்களால் திரித்து(புனைந்து அல்ல) எழுதிய புராணங்களை திரையிடுகின்றனரே. ஏற்கனவே உள்ளவர்களிடம் மத நம்பிக்கையை வலுப்படுத்தவும் வழிவழியாக வரும் அடுத்த தலைமுறையினருக்கு தங்கள் மதத்தைப் பரப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் தான் இந்த செயல். ஆசீவக வழிபாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்ற பின் வைதீக நெறியினர்களால் புராணங்களாகத் திரிக்கப்பட்டன.

  இது மட்டுமல்ல, கீழுள்ள கோட்பாடுகள் ஆசீவக ஜைன பௌத்த இந்து நெறிகளில் பொதுவாக உள்ளதை நாம் பார்க்கலாம்.
  1.    விநாயகர் வழிபாடு
  2.    முருகன் வழிபாடு
  3.    ஓம் எனும் மந்திரச் சொல்
  4.    சுழற்றியம் (ஸ்வஸ்திகா)
  5.    ஊன் உண்ணாமை
  6.    உண்ணா நோன்பு
  7.    தலையில் மொட்டை அடிப்பது

  இன்னும் பல...

  சமணம்(ஆசீவகம், ஜைனம்), பௌத்தம், தற்போதைய வைதீக இந்து நெறிகள் அனைத்திற்கும் இடையே இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கின்றதென்றால்,தற்செயலாக இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. முருகன் ஆனைமலையை ஆண்ட அரசன் எனப் பார்த்தோம். முருகனின் அறுபடைவீடுகளில் மலைமேல் உள்ள ஐந்து படைவீடுகள் அனைத்திலும் சமண குகைகள் உள்ளன என்பது இங்கு நோக்கத்தக்கது. சமணர் என்றால் இங்கு ஜைனரா ஆசீவகரா என நாம் பார்க்கவேண்டும். ஜைன நெறியினருக்கும் ஆசீவக நெறியினருக்கும் உள்ள வேறுபாடுகளுள் ஒன்று, ஜைன நெறியினர் மலை மேல் தங்கமாட்டார். அவர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் தங்குபவர்கள். ஆனால், ஆசீவகர்கள் மலைமேல் கற்படுக்கைகள் அமைத்துத் தங்குபவர். இதன்மூலம், இக்குகைகள் ஆசீவக சித்தர்கள் தங்கிய இடங்கள் எனத் தெளிவாகிறது.

  ஐயா 

  இதன்மூலம், முருகன் ஆசீவக நெறியின் தெய்வ நிலையை அடைந்த சித்தன் எனத் தெரிகிறது. மேலும், முருகனை சித்தன், ஐயன் (எடுத்துக்காட்டு: முருகையன், வேலையன், சுப்பையன்), ஐயா என ஆசீவக சித்தர்களைக் குறிப்பிடும் சொற்களை வைத்து அழைப்பதும் இங்கு நோக்கத்தக்கது.

  "டிரேகன்" (DRAGON) பற்றிய உண்மை வரலாறு அறிவோம்!

  கீழை நாடுகளில் அறியப்படும் "ட்ரேகன்" என்பது முருகனையேக் குறிக்கிறது எனும் ஆய்வுக்கட்டுரை. "ட்ரேகன்" என்பது கிழக்கு நாடுகளில் நல்ல சக்தியாகவும், மேற்கு நாடுகளில் தீய சக்தியாகவும் கருதப்படுகிறது. நல்ல சக்தியாக விளங்கும் கிழக்கு நாடுகளின் "ட்ரேகன்" பற்றி முதலில் காண்போம். சிவன், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு சித்தர் மற்றும் புராதனக் கடவுள். உலகத்தின் அனைத்து மனித குலங்களிலும் நிறைந்து இருப்பவர் சிவனே! 

  கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அடுத்த சித்தர் மற்றும் புராதன கடவுள் முருகன். லெமூரியாக் கண்டம் எனப்படும் குமரிக் கண்டம் கடலில் மூழ்கியபோது வாழ்ந்தவர். சிவனைப் போலவே உலகின் அனைத்து நாகரிகங்களிலும் நிறைந்திருப்பவர். குமரிக் கண்டம் கடலில் மூழ்கியபோது மக்களைக் காப்பாற்றியவர். குமரிக் கண்டத்தில் வாழ்ந்த அவர், கடல் அழிவுக்குப்பின் இலங்கைப் பகுதிக்குள் தன் மக்களுடன் குடியேறினார். 

  "கும்பலாய் மரித்த கண்டம்" என்பதிலிருந்து உருவானதே "குமரன்" என்ற முருகனுக்கான இன்னொரு பெயர். 

  கடலில் மூழ்கி மக்கள் இறந்ததை ஈடுகட்ட, அவர் மக்கள் இனப்பெருக்கத்தை ஊக்கப்படுத்தினார். அதனால், இனப்பெருக்கத்திற்கான கடவுளானார். 

  முருகன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்; முதன்முதலாய் உலகத்துக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுத்தவர். விவசாய விளைபொருள்கள் திருடர்களால் களவாடப் படுவதைத் தடுக்க போர்க்கலைகளை முதலில் உருவாக்கியவர். ஆதலினால், அவர் "போர்க்கடவுள்" எனவும் அழைக்கப்பட்டார். போர்க்கலைகளை உருவாக்கிய முருகன் மயில், சேவல், ஆடு ஆகியவற்றுடன் அடையாளம் காணப்பட்டார். குண்டலினி யோகக் கலையை மேம்படுத்தியவர் என்றமுறையில் பாம்பு அடையாளப்படுத்தப்பட்டது. விவசாயம் கண்டுபிடிக்கப்படுவதற்குமுன், அவர் மாடு மேய்ப்பவராகவும், மேய்ச்சல் சமூகத்தின் அரசராகவும் விளங்கினார். 

  விவசாயம் மழை சார்ந்ததாகையால், அவர் பருவ நிலை சார்ந்த ஒரு காலண்டரை உருவாக்கினார். 

  சிவனின் முதலாம் தமிழ்ச் சங்கத்தையடுத்து, அவர் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார். "கவாடபுரம்" அவரது தலை நகரமாக விளங்கியது. கவாடம் என்றால் முத்து. 

  முருகன் "முத்து"டன் சம்பந்தப்பட்டவர் என்பதால் அவர் முத்துக்குமரன், முத்தரசன், முத்துசாமி என்றெல்லாம் அழைக்கப்பட்டார். 

  விவசாயம் செய்வதற்காக பனைமரங்கள் நிறைந்த காட்டை எரித்து விளை நிலங்களை முருகன் உருவாக்கியதால் இலங்கை மலைக்குறவர்கள் அதனை எதிர்த்தார்கள். அதன்பொருட்டு நடந்த போரில் முருகன் வென்றதைக்குறித்தே பங்குனி மாதம் பௌர்ணமி நாளன்று "பங்குனி உத்திரம்" கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம் என்றால் வீரத்துடன் வெற்றிபெறுதல் (Valiantly Subduing) என்று பொருள். 

  மேலும், முருகன் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு சப்த கன்னிகள் என்ற ஆசீவகக்கோட்பாடை உருவாக்கினார். அதில் ஒரு கன்னி விவசாயத்தைக் குறிக்கும் பச்சையம்மா. பச்சையம்மாவை வெள்ளி கிரகத்துடனும் உருவகப்படுத்தினர். போரின் வெற்றி விவசாயத்தின் வெற்றியானதால் விவசாயத்தைக் குறித்த வள்ளியை (வெள்ளி) முருகன் மணந்ததாக கூறப்பட்டது. முருகன் விளை நிலம் வேண்டி பனைமரக்காட்டை எரிக்க தீமூட்டியதால் அவர் "அக்னிதேவன்" எனவும் அழைக்கப்பட்டார். 

  குமரிக் கண்டம் கடலில் மூழ்கிய காலத்தைச் சேர்ந்தவர் முருகன் என்பதால் அவர் மனிதகுலம் அனைத்தும் அறிந்தவராக இருக்கிறார். ஆனால், வேறு, வேறு பெயர்களில், முறைகளில் அவர் அறியப்படுகிறார். 

  உதாரணமாக, யாசிதியர் அவரை "தவுசி மேலக்" என்றும் மயிலாகவும் வழிபடுகின்றனர். எகிப்தியர்கள் அவரை "ஆமுன்" என்றழைத்தனர்; ரேம் என்று வழிபடுகின்றனர். பிளிஸ்டியன்கள் அவரை மீன்கடவுள் என்றும் டாகன் என்றும் மனித மீனாகவும் வழிபடுகின்றனர். பாபிலோனியன்கள் அவரை "மர்துக்" என்றும் சுமேரியர்கள் "தம்முஸ்" என்றும் கானனைன்கள் "பால்காடு" என்றும் அழைகின்றனர். 

  இஸ்லாமியர்கள் முருகனை "அல்கிதிர்" என்று வழிபடுகின்றனர். ஆப்கானிஸ்தானின் "கந்தகார்" நகரத்தின் பெயரும் முருகனான கந்தனைக் குறித்தே பெயரே! இப்போது டிரேகன் உருவானவிதம் காண்போம். முருகனின் குண்டலினி யோகக் கலையைக் குறித்த பாம்புடன், மயிலின் இருகால்கள், சேவலின் இரு கால்கள், ஆட்டின் இரு கொம்புகள் அனைத்தையும் இணைத்தால் கிடைப்பது, "ட்ரேகன்". முருகன் அக்னி தேவன் என்பதால் ட்ரேகன் நெருப்பைக் கொட்டுகிறது. முருகனின் தலை நகரம் கவாடபுரம் என்கின்ற முத்து நகரம் ஆனதால் சீன ட்ரேகன் முத்துடன் காணப்படுகிறது. முருகன் பெரும் அரசன் என்பதால், சீன அரசர்களின் அடையாளமாக ட்ரேகன் காணப்படுகிறது. 

  முருகன் தோற்றுவித்த விவசாயத்தால் மக்கள் செழிப்புற்று விளங்கியதால் ட்ரேகனை செல்வச்செழிப்புடனும், முருகன் மழைக்காலம் அறிந்து விவசாயம் செய்த மழைக்கடவுள் என்பதால் ட்ரேகனை மழையுடனும், அடைப்படைக் காலண்டரை உருவாக்கியவர் என்பதால் சீன வருடப்பிறப்பன்று ட்ரேகனுடன் நடனமாடியும் உருவகப்படுத்தி முருகனை நினைவு கூறுகின்றனர். 

  ஆதியில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் சீனர்கள் என்பதால் அவர்கள் தங்களை முருகன் வழித்தோன்றல்கள் என்பதைக்குறிக்கும் "ட்ரேகனின் வழிவந்தவர்கள்" எனக் குறிப்பிடுகின்றனர். 

  ட்ரேகன் சொல்லாய்வு

  முருகன் வாழ்ந்த காலத்தில் மக்கள் மலைகளில் வசித்ததால் மலை அரசர்களே மிகுதியாக இருந்தனர். குமரிக்கண்டம் கடலில் மூழ்கிக்கொண்டிருந்தபோது மக்களைக் காப்பாற்றி இலங்கையில் குடிபுகுந்தபோது அவர்களுக்கு மலையில் குடியேற இடமில்லாமல் மலைக்குறவர்கள் நிரம்பியிருந்ததால் தரையில் தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. உலகின் முதல் தரை அரசனாக முருகன் விளங்கினான். 

  தரை+கோன்
  த்ர+கோன்
  ட்ரே+கோன்
  ட்ரேகன்
  இப்படியாக முருகனே "ட்ரேகன்" என அழைக்கப்பட்டான். ட்ரேகன் என்பது தரை அரசனான முருகனையே குறிக்கிறது. 

  (ஆசீவகம் பற்றிய மேலும் அறிய, புத்தகமாக விரைவில்)

  References:
  முனைவர். பாண்டியன், தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை ஆய்வுகள்

   

  தொடரும்...

  C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai