ஒரு துறவியாகிவிட வேண்டும், காற்றைத் தவிர இன்னொன்றில்லாத பெருவெளியில் தனித்துத் திரியவேண்டும் என்று முன்னொரு காலத்தில் கனாக் கண்டதுண்டு. அது வாழ்வின் குரூரங்களிலிருந்து தப்பித்துச் செல்ல அன்று எனக்குத் தோன்றிய வழி. ஒரு பொறியாளன் ஆவது போல, டாக்டராவது போல, வழக்கறிஞராவது போலத் துறவியாவது என்பதும் ஓர் இயலாகவே எனக்குள் பதிந்திருந்தது. எங்கெங்கோ அலைந்து பல சன்னியாசிகளை, சித்தர்களை, காவி அணிந்த வெறும் பிச்சைக்காரர்களைச் சந்தித்து என்னென்னவோ பேசியிருக்கிறேன். சில்லறை சித்து ஆட்டங்களைக் கண்டு, வியப்புற்று வாயடைத்து நின்றிருக்கிறேன். ராமகிருஷ்ண மடத்துத் துறவியொருவர் முக்கால் மணி நேரம் பற்பல வேதாந்த விஷயங்களைப் பேசி, இதில் உனக்குப் புரிந்த ஏதாவது ஒரு வரியைச் சொல் என்றபோது, ஒரு சொல்கூடப் புரியாத என் மொண்ணைத்தனத்தை எண்ணி இரவெல்லாம் கதறி அழுதிருக்கிறேன். சானடோரியம் மலை உச்சிக்குச் சென்று தியானம் செய்ய அமர்ந்து கொள்ளி எறும்புக் கடிபட்டு உடம்பெல்லாம் வீங்கி அவதியுற்றிருக்கிறேன். வாழ்வினின்று தப்பி ஓடுவதல்ல; பெருங்காதலுடன் ஒட்டுமொத்த மானுட சமூகத்தையும் அள்ளி அரவணைக்கும் பக்குவமே துறவு என்பது புரிந்த காலத்தில் எனக்கொரு மகள் பிறந்திருந்தாள். இதே புரிதல் தலைகீழாக நிகழ்வதன் விளைவாகவே இன்றைய பட்டுக்காவி சன்னியாசிகள் பிறக்கிறார்கள் என்பதும் புரிந்தது.