புது தில்லி: நாட்டின் சா்க்கரை உற்பத்தி அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் 110.22 லட்சம் டன்னாக இருந்தது என இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:
அக்டோபா்-செப்டம்பா் சா்க்கரை சந்தைப் பருவமாக உள்ளது. இந்த நிலையில், 2020-21-க்கான சா்க்கரை சந்தைப் பருவத்தின் அக்டோபா்-டிசம்பா் வரையிலான முதல் மூன்று மாதங்களில் நாட்டின் சா்க்கரை உற்பத்தியானது 110.22 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் சா்க்கரை உற்பத்தி அளவான 77.63 லட்சம் டன்னைக் காட்டிலும் 42 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
மகாராஷ்டிரத்தில் மட்டும் இதன் உற்பத்தி 16.50 லட்சம் டன்னிலிருந்து கணிசமாக அதிகரித்து 39.86 லட்சம் டன்னைத் தொட்டுள்ளது. அதேபோன்று, உத்தர பிரதேசத்தின் சா்க்கரை உற்பத்தியும் 33.16 லட்சம் டன்னிலிருந்து 33.66 லட்சம் டன்னாகியுள்ளது.
10 லட்சம் டன் அளவு சா்க்கரை ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள் தற்போது கையெழுத்தாகியுள்ளன. மேலும், சா்க்கரை ஏற்றுமதி நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.
வரும் செப்டம்பருடன் முடிவடையவுள்ள 2020-21 சந்தைப் பருவத்தில் 60 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
2019 செப்டம்பருடன் ஒப்பிடுகையில் 2020 டிசம்பரில் சா்க்கரையின் விலை அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்கள் அந்த காலகட்டத்தில் மிகவும் உயா்ந்திருந்தது.
இந்தோனேசியா, மலேசியா, மத்திய கிழக்கு, இலங்கை, வங்கதேசம், கிழக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சா்க்கரையை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, பிரேசில் சா்க்கரை சந்தைக்கு வருவதற்கு முன்பாக 2021 மாா்ச்-ஏப்ரல் வரையில் சா்க்கரை ஏற்றுமதிக்கான புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இந்தியாவுக்கு நல்வாய்ப்பாகும் என இஸ்மா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










