காலம் கடந்து கசிந்த உண்மைகள்... கரிஷ்மா கபூர் VS  அபிஷேக் பச்சன் நிச்சயதார்த்த முறிவின் பின்னணி!

அபிஷேக், கரிஷ்மா நிச்சயதார்த்த முறிவுக்கான காரணம் அவர்கள் இருவருமோ அல்லது அமிதாப் தம்பதியோ இல்லை. கரிஷ்மாவின் தாயாரான பபிதா தான் முழு காரணம் என்கின்றன வட இந்திய மீடியாக்கள்.
காலம் கடந்து கசிந்த உண்மைகள்... கரிஷ்மா கபூர் VS  அபிஷேக் பச்சன் நிச்சயதார்த்த முறிவின் பின்னணி!
Published on
Updated on
3 min read

15 வருடங்களுக்கு முன்பு பாலிவுட் பிக் பி அமிதாப்பின் 60 வது பிறந்த நாளன்று அவரது மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூருக்கும் திருமண நிச்சயம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மாப்பிள்ளை வீடு, மணப்பெண் வீடு இரண்டுமே பாலிவுட்டில் பெரிய கைகள் என்பதால் அரண்மனைத் திருவிழாவாக அரங்கேறியிருக்க வேண்டிய திருமணம் அது. அவர்களுக்குள் இந்த திருமண அறிவிப்புக்கு முன்பே மற்றுமொரு திருமண பந்தம் இருந்தது. அமிதாப்பின் மகளும், அபிஷேக்கின் சகோதரியுமான ஸ்வேதா பச்சனைத் திருமணம் செய்து கொண்டிருந்த நபர், வேறு யாருமல்ல, பாலிவுட்டின் மெகா நடிகர் குடும்பத்தின் மூலவரான ராஜ்கபூரின் பேரன் நிகில் நந்தா தான். நிகில், ஸ்வேதா திருமணத்தில் தான் அபிஷேக், கரிஷ்மா காதல் முகிழ்த்ததாக அப்போது மீடியாக்கள் கிசுகிசுத்தன. அன்றிலிருந்து சுமார் ஐந்தாண்டுகள் இருவரும் பெற்ரோர் கூடி, உறவுகள் கூடி நிச்சயிக்கா விட்டாலும் கூட மணவாழ்வில் நிச்சயமாக இணையப் போகும் ஜோடிகள் என்ற நம்பிக்கையில் இணைந்தே சுற்றிக் கொண்டிருந்தனர். ஐந்தாண்டுகால புரிந்துணர்வுக்குப் பின் ஒருவழியாக சரி... இனி திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் ஒருமனதாக முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்பட்டது தான் கபூர் குடும்பமும், பச்சன் குடும்பமும் இணையவிருந்த அந்த பிரமாண்ட திருமண நிச்சயதார்த்தம்.

இடையில் என்ன ஆயிற்றோ? தெரியவில்லை. திடீரென கரிஷ்மாவும், அபிஷேக்கும் தங்களது திருமண நிச்சயதார்த்தம் முறிவடைந்தது என அறிவித்து விட்டு சில ஆண்டுகளில் இருவருமே ஒருவர் பின் ஒருவராக வேறு, வேறு இணைகளைத் தேடிக் கொண்டனர். நகமும், சதையுமாக ஒட்டிக் கொண்டு திரிந்த இந்த ஜோடியின் திருமண நிச்சயதார்த்த முறிவுக்கு யார் காரணமாக இருக்கக் கூடும்? இரு வீட்டுப் பெரியவர்களும் இணைந்து ஒரு சந்தோஷமான தருணத்தில் அறிவிக்கப்பட்டது தானே இவர்களது திருமண நிச்சயதார்த்தம்? யார் மேல் தவறு? இந்த முறிவுக்குக் காரணமானவர்கள் யாராக இருக்கக் கூடும்? எனும் வதந்திகளும், அனுமானங்களும் பாலிவுட் முதல் கோலிவுட் வரை ரெக்கை கட்டிப் பறந்து ஒரு வழியாக விடை காண முடியாமலே அவிந்து போயின.

அது தான் வதந்திகள் அவிந்து போயினவே? அப்படியே விட்டு விட வேண்டியது தானே? அதை ஏன் திரும்பத் தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று சிலர் கேட்கலாம். விஷயம் இல்லாமலில்லை. தங்களது திருமண நிச்சய முறிவுக்குப் பின்னர் கரிஷ்மாவும், அபிஷேக்கும் எந்த விழாக்களிலும் இணைந்து கலந்து கொண்டதில்லை. எதிரும், புதிருமாக சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால், பல வருடங்கள் கழித்து வெகு சமீபத்தில் அவர்களுக்கு அப்படி ஒரு சந்தர்பம் அமைந்து விட்டது.

பிரபல பாலிவுட் நடிகர் மோஹித் மார்வாவின் திருமணத்தில் இருவரும் இணைந்து பங்கேற்றுக் கொண்டு புகைப்படத்துக்கு போஸ் அளிக்க வேண்டிய சந்தர்ப்பம் அமைந்து விட்டது. எனவே பாலிவுட் மீடியாக்கள் இவர்களின் முறிந்து போன உறவுக்கான காரணங்களை மீண்டும் தூசி தட்டத் தொடங்கியிருக்கின்றன. அப்படி தூசி தட்டி அவர்கள் கண்டறிந்த உண்மை இது தான்.

அபிஷேக், கரிஷ்மா நிச்சயதார்த்த முறிவுக்கான காரணம் அவர்கள் இருவருமோ அல்லது அமிதாப் தம்பதியோ இல்லை. கரிஷ்மாவின் தாயாரான பபிதா தான் முழு காரணம் என்கின்றன வட இந்திய மீடியாக்கள். ஏனெனில் கரிஷ்மாவின் தாயார் பபிதாவும் பாலிவுட்டில் புகழேணியின் உச்சத்தில் இருந்த ஒரு முன்னாள் நடிகையே! அவரது கணவரும், ராஜ்கபூரின் இளைய மகனுமான ரந்தீர் கபூருடனான தனது மணமுறிவுக்குப் பிறகு... பவிதா தனது இருமகள்களான கரிஷ்மா மற்றும் கரீனாவை சிங்கிள் மதராக தனது ஒற்றைப் பின்புலத்தில் வளர்த்து ஆளாக்கினார். இது மொத்த பாலிவுட்டுக்குமே தெரிந்த உண்மை. கணவரை விட்டுப் பிரிந்த பிறகு தனது மகள்களை வளர்க்க பபிதா பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே அவருக்கு பொருளாதார கஷ்ட, நஷ்டத்தின் தாக்கங்கள் மற்றும் இழப்புகளைப் பற்றி நன்றாகவே தெரியும். அப்படியிருக்க, இவர்களது திருமண நிச்சயதார்த்த அறிவிப்பு நிகழ்ந்ததையொட்டி அபிதாப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக மிகப்பெரிய நஷ்டத்தில் சிக்கி கடனில் மாட்டிக் கொண்டு மீள வழியின்றி தவிக்கவே அப்படி ஒரு சிக்கலான குடும்பத்துக்கு தனது மகளை மணம் முடித்து அனுப்ப பபிதா விரும்பவில்லை. அதோடு மணமகனான அபிஷேக்குக்கும் அப்போது திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. ஆனால் கரிஷ்மா அப்போது டாப் ஹீரோயின்களில் ஒருவர். அபிஷேக்குக்கான திரை வாய்ப்புகளும், வெற்றிகளும் இனிமேல் தான் தொடங்கப்பட வேண்டும் என்ற நிலையில் சொந்த தயாரிப்புக் கம்பெனியும் திவாலாகும் நிலையில் தனது தந்தையைப் போல அபிஷேக் பிரகாசிப்பாரா? மாட்டாரா? என்பதில் பபிதாவுக்கு சந்தேகங்கள் இருந்தன. அவர் அபிஷேக்கின் நடிப்புத் திறன் பற்றி பெரிதாக எந்த நம்பிக்கையும் கொண்டிருந்தாரில்லை. எனவே மூழ்குகிற கப்பலில் போய் தன் மகளை சிக்க வைக்க வேண்டுமா? என்று யோசித்து உடனடியாக நிச்சயதார்த்த முறிவைப் பற்றி யோசிக்கத் தலைப்பட்டார் என்கின்றன வட இந்திய மீடியாக்கள்.

இன்னொரு சாரர், பபிதா, திருமணத்திற்கு முன்பே அமிதாப்பின் சொத்துக்களில் கணிசமானவற்றை அபிஷேக்கின் பெயரில் மாற்றித் தரச்சொல்லி வற்புறுத்தியதாகவும் அதற்கு அமிதாப் தம்பதியினர் ஒப்புக் கொள்ளாத காரணத்தால் நிச்சயதார்த்தம் முறிந்து போனதாகவும் கூறுகின்றனர். எது எப்படியோ இவர்களது பந்தம் முறிந்ததில் பொருளாதாரம் மிக முக்கிய பங்காற்றி இருப்பது அப்பட்டமான உண்மை. பபிதா, தன் மகள் பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கக் கூடாது எனத் தீர்மானித்து உறவு முறிவுக்கு காரணமாகி விட்டார் என்கிறார்கள்.

எது எப்படியோ? காலங்கள் பல கடந்து விட்டன. இப்போது இருவருமே வேறு, வேறு இணைகளுடன் வெற்றிகரமான திருமண பந்தத்தில் இணைந்து அவரவர் குழந்தைகளுடன் இல்லற வாழ்வை இனிதாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்த இரண்டு பேருக்கும் மட்டுமல்ல இரு குடும்பங்களுக்குமே ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் எதிர்கொள்வதில் எந்தப் பிரச்னைகளும் இல்லையாம். இதோ சமீபத்தில் தாங்கள் கலந்து கொண்ட மோஹித் மார்வா திருமண விழாவில் கூட கரிஷ்மாவும்,  அமிதாப்பின் மகள் ஸ்வேதாவும் ஒரே புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார்கள். அபிஷேக்குக்கு, கரிஷ்மா கலந்து கொள்ளும் திருமணத்தில் தானும் கலந்து கொண்டு நண்பர்களுடன் இணைந்து பேசிக் களிக்கவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் பெரிதாகப் பிரச்னைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுக்குள் எல்லாம் இயல்பாகி விட்டது என்று கூறுகின்றன பாலிவுட் செய்திகள்!

ஒருவழியாக இரு குடும்பங்களின் பனிப்போர் மறைந்து உறவு இயல்பாகி பகை பறந்து சுபமஸ்துவானது பாலிவுட் ரசிகர்களுக்குச் சந்தோசமளித்திருக்கலாம்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com