எந்தத் தோற்றத்தில் இருந்தாலும் நம்பிக்கையுடன் போட்டியிடுங்கள்: பிக் பாஸ் வெற்றியாளர் ரித்விகா பேச்சு!

நீங்கள் எவ்வித தோற்றத்தில் இருந்தாலும் பரவாயில்லை. நம்பிக்கையுடன் ஆரோக்கியமாகப் போட்டியிடுங்கள்....
எந்தத் தோற்றத்தில் இருந்தாலும் நம்பிக்கையுடன் போட்டியிடுங்கள்: பிக் பாஸ் வெற்றியாளர் ரித்விகா பேச்சு!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாள்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவுபெற்றது.

ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு நடிகைகளும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள்.

இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக் பாஸ் 2 வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் 2 போட்டியை நடிகை ரித்விகா வென்றுள்ளார். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்குக் கோப்பையும் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாம் இடத்தை நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் மூன்றாம் இடத்தை நடிகை விஜயலட்சுமியும் பெற்றுள்ளார்கள்.

ரித்விகாவின் வெற்றி குறித்த அறிவிப்பை கமல் தெரிவித்தார். இந்தச் செய்தியைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ரித்விகா, அருகில் இருந்த கமலைக் கட்டியணைத்து அழுதார். இது பார்க்க மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.

வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபிறகு ரித்விகா மேடையில் அனைவரின் முன்னிலையிலும் பேசியதாவது:

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க்கையில் முதல்முறையாக முழுமையான வெற்றியை அடைந்துள்ளேன். முகம் தெரியாத எத்தனை பேர் நான் ஜெயிக்கவேண்டும் என வாக்களித்துள்ளீர்கள். அவர்களுக்கு என் நன்றி. என்னை மாதிரி உங்கள் வீட்டிலும், உங்கள் பணியிடங்களிலும் பெண்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவராக என்னை எண்ணி வாக்களித்துள்ளீர்கள். என்னை மாதிரியுள்ள பெண்களுக்கு நான் ஓர் ஊக்கமாக இருக்கவேண்டும் என எண்ணுகிறேன். அவர்கள் எல்லோருடைய வெற்றி இது. வாழ்க்கையோ போட்டியோ பயப்படாதீர்கள். நம்பிக்கையோடு, நீங்கள் எவ்வித தோற்றத்தில் இருந்தாலும் பரவாயில்லை. நம்பிக்கையுடன் ஆரோக்கியமாகப் போட்டியிடுங்கள். கண்டிப்பாக வெற்றி உங்களைத் தேடி வரும். இந்த பிக் பாஸ் கோப்பை, என்னுடன் இந்த அனைத்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் சமர்ப்பணம். கமல் சார் தான் என் வாழ்க்கைக்கும் ஊக்கமாக உள்ளார் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com