தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ. 25 லட்சம் நிதியுதவி

தஞ்சை அரசு மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க...
தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ. 25 லட்சம் நிதியுதவி
Updated on
2 min read

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றை தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் ஒளிபரப்பியது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் விடியோவின் சில பகுதிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஜோதிகாவுக்கு எதிராகச் சமூகவலைத்தளங்களில் பலரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்தார்கள். அந்த விழாவில் ஜோதிகா பேசியதாவது:

பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. அதைப் பார்க்காமல் போகாதீர்கள், அந்தக் கோயிலைக் கண்டிப்பாகப் பார்க்கணும், அவ்வளவு அழகாக உள்ளதாகச் சொன்னார்கள். ஏற்கெனவே பார்த்துள்ளேன். அவ்வளவு அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்குப் பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்ததை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, ராட்சசி படத்தில் கூட இதைச் சொல்லியுள்ளேன். இயக்குநர் கெளதம் (ராஜ்) சொல்லியுள்ளார். கோயிலுக்காக அவ்வளவு காசு கொடுக்கிறீர்கள், அவ்வளவு செலவு செய்கிறீர்கள், பெயிண்ட் அடிக்கிறீர்கள், பராமரிக்கிறீர்கள். கோயில் உண்டியலில் அவ்வளவு காசு போடுகிறீர்கள். தயவுசெய்து அதே காசைக் கட்டடத்துக்குக் கொடுங்கள், பள்ளிகளுக்குக் கொடுங்கள், மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள் (ஜோதிகா இதைப் பேசிக்கொண்டிருக்கும்போது விழா அரங்கில் பிரபலங்களும் ரசிகர்களும் கைத்தட்டுகிறார்கள்). இது மிகவும் முக்கியம். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்தக் கோயிலுக்கு நான் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு கோயிலுக்குப் போகவில்லை. மருத்துமனைகளும் அந்தளவுக்கு முக்கியம், பள்ளிகளும் அந்தளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசினார்.

ஜோதிகா தொடர்பான சர்ச்சைக்கு நடிகர் சூர்யா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

'மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்து 'சமூக ஊடக' விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌. ஒரு விருது வழங்கும்‌ விழாவில்‌ எப்போதோ ஜோதிகா அவர்கள்‌ பேசியது, இப்போது ஊடகங்களில்‌ செய்தியாகவும்‌, சமூக ஊடகங்களில்‌ விவாதமாகவும்‌ மாறி இருக்கிறது.

'கோவில்களைப்‌ போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ உயர்வாக கருத வேண்டும்‌' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, 'சிலர்‌' குற்றமாக பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்‌ போன்ற ஆன்மீகப்‌ பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். 'மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்‌ செலுத்தும்‌ காணிக்கை' என்பது 'திருமூலர்‌' காலத்து சிந்தனை. நல்லோர்‌ சிந்தனைகளைப்‌ படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ இறைவன்‌ உறையும்‌ இடமாக கருத வேண்டும்‌ என்கிற கருத்தை, எல்லா மதத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ வரவேற்கவே செய்கின்றனர்‌. 'கொரானா தொற்று' காரணமாக இயல்பு வாழ்க்கைப்‌ பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும்‌, எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும்‌, மகிழ்ச்சியையும் அளித்தது.

அறிஞர்கள்‌, ஆன்மீகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. "மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்கியம்‌' என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌. தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர்‌ அவதூறு பரப்பும்‌ போதெல்லாம்‌, நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்கு துணை நிற்கிறார்கள்‌. முகமறியாத எத்தனையோ பேர்‌ எங்கள்‌ சார்பாக பதில்‌ அளிக்கிறார்கள்‌. ஊடகங்கள்‌ சரியான விதத்தில்‌ இச்சர்ச்சையைக்‌ கையாண்டன. 'நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்‌' என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்‌ செய்கிறார்கள்‌. எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்‌ அனைவருக்கும்‌ எங்களின்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌ என்றார்.

இந்நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தஞ்சை அரசு மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரூ. 25 லட்சம் அளித்துள்ளார். அகரம் அறக்கட்டளை மூலமாக இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com