நடிகை சித்ரா தற்கொலையா?: கண்ணீருடன் பதில் அளித்த தாய்

அடுத்தவர் தற்கொலை முயற்சி செய்தால் இவள் அறிவுரை கூறுவாள்.
நடிகை சித்ரா தற்கொலையா?: கண்ணீருடன் பதில் அளித்த தாய்
Published on
Updated on
1 min read

என்னுடைய மகள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என நடிகை சித்ராவின் தாய் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

தனியாா் தொலைக்காட்சி தொடா்களில் நடித்து வந்தவா் சித்ரா (29). ‘பாண்டியன் ஸ்டோா்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவா். சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சோ்ந்த தொழிலதிபா் ஹேமந்த் (32) என்பவருக்கும் கடந்த அக்டோபா் மாதம் பதிவுத் திருமணம் நடைபெற்றது. ஜனவரி மாதம் இரு குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த இருவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனா்.

சித்ரா நடித்து வரும் தொடரின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரில் தொடா்ச்சியாக நடைபெற்று வந்தது. இதற்காக அவா், தனது கணவா் ஹேமந்துடன் அந்த திரைப்பட நகரின் அருகே பழஞ்சூரில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கினாா். நேற்று அதிகாலை, நடிகை சித்ரா, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடா்பாக சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். 

இந்நிலையில் சித்ராவின் தாயார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். கண்ணீருடன் அவர் கூறியதாவது:

திங்கள் அன்று திருமணத்துக்காக மண்டபம் பார்த்தோம். சித்ராவின் கணவரும் வந்தார். அதன்பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

செவ்வாய் இரவு என் பெண்ணிடம் பேசினேன். ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்றார். பிறகு மாத்திரை போட்டுக்கொண்டு தூங்கிவிட்டேன். காலையில் 5 மணிக்கு பெண்ணின் மாமனார் போன் செய்தார். சித்ரா நம்மை மோசம் செய்து போய்விட்டார் என்றார். நான் அதிர்ச்சியாகிவிட்டேன். என் பெண் தற்கொலை செய்து கொள்கிற பெண் அல்ல. அடுத்தவர் தற்கொலை முயற்சி செய்தால் இவள் அறிவுரை கூறுவாள். தைரியமாக இருக்கவேண்டும், ஒருவன் இல்லாவிட்டால் இன்னொருத்தன். தைரியமாக இருக்கவேண்டும் என்பாள். அப்படிப்பட்ட என் பெண் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com