சிபிஐ மீது அனைவருடைய கவனமும் உள்ளது: எய்ம்ஸ் அறிக்கை பற்றி சுசாந்த் சிங் சகோதரி

சுசாந்த் சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால்தான் உயிரிழந்தாா்...
சிபிஐ மீது அனைவருடைய கவனமும் உள்ளது: எய்ம்ஸ் அறிக்கை பற்றி சுசாந்த் சிங் சகோதரி

நடிகா் சுசாந்த் சிங், மும்பை புகா் பகுதியான பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என சந்தேகம் எழுந்தது. நடிகையும் தோழியுமான ரியா சக்ரவா்த்தி தற்கொலைக்கு தூண்டியதால்தான் சுசாந்த் சிங் உயிரிழந்தாா் என்று அவரது தந்தை கே.கே.சிங், பிகாா் காவல் துறையில் புகாா் கொடுத்தாா்.

இதையடுத்து, சுசாந்த் சிங் மரண வழக்கை, சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. அதில், சிபிஐக்கு உதவிட தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா் சுதீா் குப்தா தலைமையில் 6 போ் கொண்ட தடயவியல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை சிபிஐயிடம் தாக்கல் சனிக்கிழமை தாக்கல் செய்தது.

அதில், ‘சுசாந்த் சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால்தான் உயிரிழந்தாா். தூக்கிட்டுக் கொண்டதால், கழுத்து இறுக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளது. இதுதவிர, யாருடனும் சண்டை போட்டு போராடியதற்கான காயமோ, கீறலோ உடலில் இல்லை. அவரது உடலில் இருந்து விஷம் அல்லது மருந்து பொருளும் கண்டறியப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை, சுசாந்த் சிங் வழக்குரைஞா் விகாஸ் சிங்கை அதிருப்தியடையச் செய்துள்ளது. இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சுசாந்த் சிங்கின் உடல் கூறாய்வு, மும்பையில் உள்ள கூப்பா் மருத்துவமனையில் அரைகுறையாக நடத்தப்பட்டது. அதன் அறிக்கையில், சுசாந்த் சிங் இறந்த நேரம்கூட குறிப்பிடப்படவில்லை. எந்த அடிப்படையில் இறுதி அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவக் குழு அளித்தது எனத் தெரியவில்லை. எனவே, புதிய தடயவியல் குழுவை அமைத்து, மீண்டும் ஆய்வு நடத்துமாறு சிபிஐயிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றாா்.

இந்நிலையில் சுசாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங், இன்ஸ்டகிராமில் கூறியதாவது:

சோதனையான காலக்கட்டத்தில் மனவலிமையுடன் இருக்கவேண்டும். என் குடும்பத்தினரும் உறவினர்களும் கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன். உண்மை வெளியே வரவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யவேண்டும். சிபிஐ மீது அனைவருடைய கவனமும் தற்போது உள்ளது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com