எதற்கும் துணிந்தவன்: அரசியல் பேசுகிறாரா நடிகர் சூர்யா?

எதற்கும் துணிந்தவன்: அரசியல் பேசுகிறாரா நடிகர் சூர்யா?

​நடிகர் சூர்யா தனது 40-வது திரைப்படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயர் வைத்ததன் மூலம் மறைமுகமாக அரசியல் பேச வருகிறாரா என்று தோன்றுகிறது. 


நடிகர் சூர்யா தனது 40-வது திரைப்படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயர் வைத்ததன் மூலம் மறைமுகமாக அரசியல் பேச வருகிறாரா என்று தோன்றுகிறது. 

நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. படத்துக்கு 'எதற்கும் துணிந்தவன்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பெயரை வைத்ததன்மூலம் அரசியல் ரீதியிலான தனது எதிராலிகளை நடிகர் சூர்யா சீண்டுகிறாரா என்று கருதப்படுகிறது.

மத்திய அரசின் நீட் தேர்வுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருபவர் சூர்யா. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அப்போது அறிக்கை வெளியிட்ட சூர்யா, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை நீட் தேர்வு சூறையாடும் என்பதை  மீண்டும் ஒருமுறை விளக்கி, அதன் பாதிப்பின் தீவிரத்தை ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவிடம் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதோடு நிறுத்திக்கொள்ளாத சூர்யா, அதே அறிக்கையில் கல்வி மாநில உரிமையாக இருப்பதே அவசியம் என்பதைக் குறிப்பிட்டு இந்தக் கொள்கையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார்.

மத்தியிலுள்ள பாஜக அரசு அதிகாரப் பகிர்வுக்கு நேர்மாறான சித்தாந்தத்தைக் கொண்டிருக்கும் சூழலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற சூர்யாவின் குரல் நிச்சயம் ஆளும் தரப்பை அசைத்திருக்கும்.

இதன்பிறகு, 2021-ம் ஆண்டு ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு எதிராகவும் சூர்யா குரல் கொடுத்திருந்தார். 

"சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல.." என்று விமரிசித்திருந்த நடிகர் சூர்யா மசோதாவிலுள்ள பிரச்னைகளை முறையாகப் பதிவு செய்ய வலியுறுத்தியிருந்தார்.

மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கம் சூர்யாவுக்கு இல்லாதபோதிலும் தொடர்ச்சியான அவரது செயல்பாடுகள் அதற்கு எதிரானதாகவே இருக்கின்றன.

இதன் விளைவு, சூர்யா உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாக பாஜக மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்படிப்பட்ட சூழல்களுக்கு மத்தியில் எதற்கும் துணிந்தவன் என சூர்யா தனது படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார். உச்ச நடிகர்கள் படத்தின் தலைப்புகள், வசனங்கள், பாடல்கள் மூலம் திரைமறை அரசியல் பேசுவது தமிழ் சினிமாவின் மரபு.

இதன் சமீபத்திய நட்சத்திரமாக, தன்னை அச்சுறுத்த முயற்சிக்கும் கட்சிகளுக்கு படத் தலைப்பை பதிலாக வைத்துள்ளார் சூர்யா என்று அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com