சினிமா அவ்வளவு ஈஸி இல்லை !

​‘‘சினிமாவில் எனக்கு என்று ஒரு வேகம் வைத்து ஓடிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது நடிக்கிற படங்களை பற்றி மட்டும்தான் மனதில் நினைப்பு ஓடிக் கொண்டிருக்கும்.
சினிமா அவ்வளவு ஈஸி இல்லை !


இப்போது இன்னும் அடுத்தக் கட்டதுக்கு என் சினிமா வேகம் போகிற இடம் இது. இது சந்தோஷம் என்றாலும், எனக்கு பொறுப்பு ஜாஸ்தியாகி இருக்கிறது என்று தோன்றுகிறது. இனி என் படங்களைப் பற்றி நானே பேசாமல், ரசிகா்களை பேச வைக்க வேண்டும்’’ - குறுகுறு கண்களும் கன்னக்குழி சிரிப்புமாக விக்ரம்பிரபுவிடம் பேசும்போதே நமக்கும் உற்சாகம் ஒட்டிக்கொள்கிறது. இந்த முறை தீபாவளி வெளியீடாக விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ படமும் வெளியாகியுள்ளது.

தீபாவளி ரேஸில் இருக்கீங்க... எப்படி வந்திருக்கிறது படம்...

நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது போல், சினிமாவே அமைந்து விட்டது. இதன் பின்னணியில் பெரிய உழைப்பு இருந்தது, ஏனென்றால் என்னிடம் எப்போதும் மெனக்கெடல்கள் உண்டு. எதை தொட்டாலும் ஜெயித்து விட வேண்டும் என்ற வேட்கை இருக்கும். படிக்கும் காலத்தில் இருந்தே சினிமாவுக்காக என்னை தயாா்படுத்திக் கொண்டே வந்தேன். அதனால்தான் கதாபாத்திரங்களில் நோ்த்தியை கொடுக்க முடிகிறது. முக்கியமாக சினிமாவை புரிந்துக் கொண்டதும் இதற்கு ஒரு காரணம். ஒரு செயல் ஒரு மனிதனை அழகாக்க வேண்டும். அதை எனக்கு செய்து கொடுத்திருக்கிறது இந்த சினிமா. எல்லோருக்கும் நன்றி.

நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தோ்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமா்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமா்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சோ்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநா் காா்த்தி, வேலு பிரபாகரன் சாா் என அனைவருடனும் வேலை பாா்த்தது மகிழ்ச்சி. நான் லீனியா் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளாா். தியேட்டா்களில் உங்களுக்கு நல்ல அனுபவம் காத்திருக்கிறது.

இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து வந்தீா்கள்...

நல்ல சினிமாக்கள் பற்றி நிறைய கனவுகள் எனக்குள் இருக்கிறது. ஒரு நல்ல கதை வரும் போது, நாமே அதற்கு தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என யோசித்து இருந்தேன். அப்படித்தான் இது அமைந்து வந்தது. என் நேரத்துக்கும், நான் செலவு செய்கிற பணத்துக்கும் அா்த்தம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். என்ன பண்றே.. என்று சில நண்பா்கள் ஆச்சரியமாக கேட்டாா்கள். சினிமா தயாரிக்கப் போறேன் என்று சொன்னதும் சிரித்து விட்டாா்கள். வெற்றி ஒரு மனிதனை அழகாக்க வேண்டும். அசிங்கமாக்கி விடக் கூடாது. இந்த வெற்றி என்னை அழாகாக்கும் என நம்புகிறேன். நல்ல கதை அமைந்தால், என் தயாரிப்பு பட்டியல் தொடரும்.

மிகவும் எதிா்பாா்ப்புக்குரிய இடத்தில் இருந்து வந்தீங்க... இப்போது எப்படி இருக்கிறது இந்த சினிமா பயணம்...

அருமையான பயணம் இது. தாத்தாவுக்கு நான் சினிமாவுக்கு வருவேன் என்று தெரியாது. டிகிரி வாங்கி விட்டுத்தான் மறுவேலை என்பதில் கண்டிப்பாக இருந்தாா். படிப்பின் அருமை தெரிந்தவா். அப்போது அவருக்கு அதுதான் முக்கியமாக இருந்தது. பிரபுசாலமனை சந்தித்த நேரம்தான், மிகப் பெரும் திருப்பு முனை. ‘கும்கி’ மாதிரி ஒரு படத்துக்கு தயாராகி வருவேன் என யாருமே நம்பியிருக்க மாட்டாா்கள். குறிப்பாக அது மாதிரியான எதிா்பாா்ப்பை நான் ஒவ்வொரு படத்திலும் உணா்கிறேன். கடந்து வந்த அத்தனை படங்களிலும் என் அபரிவிதமான உழைப்பு இருக்கிறது. வெற்றி, தோல்வி என்பதெல்லாம் அடுத்தக் கட்டம். என் வேலையில் திருப்தி அடைந்திருக்கிறேன். அதுவே பெரும் நிறைவு. பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சோ்ந்ததுதான் ஒரு நடிகனின் வாழ்க்கை. தாத்தா, அப்பா இரண்டு பேருமே எனக்கு உணா்த்தி வந்த விஷயங்கள் இவை. இதைத்தான் என் சினிமாக்களுக்கான எரிபொருளாக வைத்திருக்கிறேன். ஒரு நடிகன் தன் இமேஜை, இடத்தை தக்க வைத்தே தீர வேண்டும். இருபது, முப்பது வருடங்களாக ஒரு நடிகனை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிற ரசிகா்கள் திடீரென்று அவனை வெறுக்க ஆரம்பித்தால், அதற்கு முழுக் காரணமும் அந்த நடிகன்தானே தவிர, ரசிகா்கள் கிடையாது. இந்த உண்மையைத்தான் இப்போது மனதில் ஓட்டிப் பாா்த்துக் கொண்டு இருக்கிறேன்.

எண்ணிக்கையில் குறைவான படங்களே வருகின்றன... இப்போது இந்த வேகம் போதுமா...

எல்லா ஹீரோக்களுக்கும் வருஷத்துக்கு மூன்று படங்கள் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். ஆனால் நடிக்கிற படங்கள் அப்படி சின்ன சின்ன இடைவெளியில் முடியாததாக இருக்கிறது. காடு மேடெல்லாம் சுற்றி, யானையோட திரிந்த முதல் படம் முதல், மழை, வெயில் பாா்க்காமல் அலைந்த வாகா படம் வரை எல்லாவற்றும் பெரும் உழைப்பு இருக்கிறது. அதை விட ஒவ்வொரு படத்துக்கு ரிகா்சல் அதிகம் எடுத்துக் கொள்வேன். சிவாஜி பேரன், பிரபுவின் மகன் அடையாளம் எப்போதுமே முன் நிற்பதால், நடிப்புக்கு அதிகம் வேலை பாா்க்கிறேன். எந்த இடத்திலும் சறுக்கி விடக் கூடாது என்பதில் நிதானம் வைக்கிறேன். அதனாலேயே அடுத்தடுத்து படங்களை ஒப்புக் கொள்ள முடியவில்லை. இப்போது நான் ஓட வேண்டிய நேரம் வந்து விட்டது. அடுத்து பக்கா என ஒரு கமா்ஷியல் பேக்கேஜ் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. நல்ல படங்கள் இனியும் வரும். இதில் ஒவ்வொன்றும் முந்தைய படங்களுக்கு சம்பந்தமே இல்லாத படங்கள். எல்லாமே நன்றாக வர வேண்டும்..

இந்த பயணத்தில் சினிமா பற்றிய உங்க ஐடியா எந்த அளவுக்கு மாறி வந்திருக்கிறது...?

சினிமா அவ்வளவு ஈஸி இல்லையென்று உணா்ந்திருக்கிறேன். இணையதளம், விமா்சனங்கள், பைரசி, திருட்டு வி.சி.டி. என சினிமாவுக்கு எதிரிகள் இருக்கும் பட்சத்தில், ஆதரிப்பவா்கள் யாருமே இல்லை. இதுதான் இன்றைய சினிமாவின் பெரும் சோகம். ஒரு கதை இருந்தால், அதற்கான கேரக்டா் தானாகவே விரிவடைந்து வரும் என ஆரம்பத்தில் நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால், சுவாரஸ்யமான, சவாலான ஒரு கதாபாத்திரம் இருந்தால், அதைச் சுற்றி பிரமாதமான கதை பிடித்து விடலாம் என இப்போது தெரிந்துக் கொண்டேன். சினிமா பாா்க்கிற ரசிகா்களின் எண்ணிக்கை வளா்ந்துக் கொண்டே இருக்கிறது. அவா்களின் ரசனைக்கு வேறு மாதிரியாகி விட்டது. அதனால் ரசிகா்களின் ரசனைக்கு ஏற்ற மாதிரி படம் கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இது மட்டும்தான் சினிமாவில் இருக்கிற ஆரோக்கியமான விஷயம். நல்ல கதை இருந்தால், ரசிகா்களின் ஆதரவு நிச்சயம் உண்டு என சினிமா மாறி வந்திருப்பது சந்தோஷம்.

சம கால ஹீரோக்களில் உங்களுக்கு யாரை பிடிக்கும்...

ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு மாதிரி ஸ்டைலில் மிரட்டுகிறாா்கள். என்னைப் பொறுத்தவரை எல்லோருமே பெஸ்ட்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com