சினிமா எனும் மாயாஜாலம்

ஆதிகாலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை மக்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்த கலையை ஒரு வழியாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
சினிமா எனும் மாயாஜாலம்

ஆதிகாலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை மக்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்த கலையை ஒரு வழியாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஓவியம், எழுத்து, இசை, ஆடல் என அதன் வடிவங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும் தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக அவற்றை மக்கள் பாவித்துள்ளனர்.

தங்களது இயல்பான அதேசமயம் நெருக்கடியான வாழ்க்கையிலிருந்து விலகி சற்று இளைப்பாறுவதற்கும், தங்களது மனவோட்டத்தை மடைமாற்றுவதற்கும் கலை பிரதான கருவியாக அவர்களுக்கு பயன்பட்டு வந்திருக்கிறது.

மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் கலை பல நேரங்களில் ஒரு ஆவணமாக மாறிவிடுகிறது. ஒரு பிரச்னையை, ஆனந்தத்தை, தவிப்பை கலையின் வடிவமாக மாற்றி மக்களின் வரலாறாக பதிவு செய்யும் முறை இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது. காலத்தால் அழியாத அல்லது அழிக்கமுடியாத பொக்கிஷங்களாக அவை நம்முன் இருக்கின்றன.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் உருவான சினிமா முக்கியமான ஒரு கருவியாக இன்றைக்கு மாறியிருக்கிறது. இன்றைய காலத்தில் பல அரசியல் நிகழ்வுகளும், வரலாற்று நிகழ்வுகளும் சினிமாவில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. 

உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில் நிகழும் பல நிகழ்வுகளை இன்றைக்கும் அதே கொதிநிலையுடன் நமக்கு கடத்துவதில் சினிமா முக்கியப் பங்கை வகிக்கிறது. திரைப்படத்தின் குறிப்பிட்ட ஒரு காட்சி, ஒரு கதாபாத்திரம் ...ஏன்...ஒரு வசனம் கூட மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியைப் பெற்றிருக்கின்றன. 

உலகம் முழுவதும் சினிமா பார்ப்பதற்கு வாங்கப்படும் டிக்கெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்தான் விற்பனையாவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இன்றைக்கு நவீனமடைந்திருக்கும் சினிமா இனம், சாதி, மதம், மொழி, வர்க்கம், எல்லைக்கோடுகள் என பல எல்லைகளைத் தாண்டி பயணிக்கிறது. எங்கோ உருவான ஒரு சினிமா நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகின்  ஏதோ ஒரு இடத்தின் ஏதோ ஒரு மனிதனை சென்றடையும் ஒன்றாக மாறியிருக்கிறது. சினிமா உருவாகி இரண்டு நூற்றாண்டுகளே ஆன நிலையில் அது அடைந்திருக்கும் வளர்ச்சியும், அது ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களும் மனித சமூகத்தின் முக்கியமான நகர்வுகளுக்கு காரணமாகியிருக்கின்றன. 

வெறும் தகவல் பரிமாற்றம், கதை சொல்லல் என்கிற இலக்குகளைத் தாண்டி மனித மனங்களில் படிந்திருக்கிற கசடுகளை கரைக்கும் சக்திவாய்ந்த ஒன்றாக சினிமா மாறியிருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். “அந்தத் திரைப்படத்தைப் பார்த்த பிறகு நான் புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டேன். ஏன் எனத் தெரியவில்லை. அந்தப் படத்தைப் பார்த்த பலருக்கும் அப்படித் தோன்றியதா எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு அப்போது அதைச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது.

இன்று வரை அதை கடைபிடிக்கிறேன்” என்றார். புகைப்பிடிப்பதை நிறுத்த ஒரு சினிமாவா எனக் கேட்கலாம். யோசித்துப் பார்த்தால் ஒருவரின் நீண்ட காலப் பழக்கத்தை எப்படி ஒரு மூன்று மணிநேர சினிமாவால் புரிந்துகொண்டு அதிலிருந்து அவரை விலக்கி வைக்க முடிகிறது. அந்த வித்தைதான் சினிமாவை நோக்கி பலரையும் ஈர்க்கிறது. உலகப் புகழ்பெற்ற காட் பாதர் திரைப்படத்தின் இயக்குநர் பிரான்சிஸ் போர்டும் இதைத்தான் சொல்கிறார் “சினிமா என்பது மாயாஜாலமானது”. 

இறுகிப் போன மனங்களை கரைக்க இலக்கியத்தைப் போல சினிமாவும் கைதேர்ந்த ஒன்று. இயக்குநர் அஷிடோஸ் கெளரேக்கர் இயக்கிய ஸ்வதேஸ் எனும் திரைப்படம் நம்மில் பலருக்கும் நினைவில் இருக்கலாம். நடிகர் ஷாருக்கானின் நடிப்பை கச்சிதமாக திரையில் கடத்திய திரைப்படங்களில் ஒன்று ஸ்வதேஸ். நாசாவில் பணிபுரியும் ஷாருக்கான் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய குக்கிராமத்திற்கு வருவதாகக் காட்சி. அதுவரை நவீன வசதிகளுடன் வாழ்ந்த ஷாருக்கானுக்கு ரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் தண்ணீர் தரும் காட்சி ஒட்டுமொத்த அவரின் வாழ்க்கையின் மீதான பார்வையையுமே புரட்டிப்போடும்.

இன்னும் சொல்லப்போனால் அக்காட்சியைப் பார்க்கும் நமக்கும் கூட அதே உணர்வை ஏற்படுத்தும். முதன்முறையாக ஒரு குவளை நீரை இந்தியாவின் நிலையைப் பிரதிபலிக்கும் ரயில்நிலையத்தில் சின்னஞ்சிறுவனின் கைகளில் இருந்து வாங்கிப் பருகும் ஷாருக்கான் அச்சிறுவனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார். ரயில் மெல்ல நகரத் தொடங்கும். அதோடு ஷாருக்கானின் கண்களில் ஈரம் படியும். எப்படிப்பட்டவரையும் நொடியில் கரைத்துப் போடும் காட்சி அது. சினிமாவால் மட்டும் சாத்தியமாகும் மாயாஜாலங்களுக்கு ஸ்வதேஸ் திரைப்படத்தின் இந்தக் காட்சி அற்புதமான எடுத்துக்காட்டு. 

நூறு பக்கங்கள் சொல்லத் துடிக்கிற விஷயங்களை சினிமா எப்படி ஒரு காட்சியின் மூலம் உளப்பூர்வமாக ரசிகருக்குக் கடத்துகிறது? சமீபத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படத்திலும் கலைக்கும், மனித மனதுக்குமான மெல்லிய தொடர்பை காட்சிகளில் விவரித்திருப்பார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். காவல் அதிகாரியாகத் துடிக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

அவர் காவல் பணியில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு கதவைத் தட்டும். அதைப் பயன்படுத்திக் கொண்டு சினிமா இயக்குநர் எனும் பொய்யைச் சொல்லி ரெளடியாக இருக்கும் லாரன்ஸை அடைவார் எஸ்.ஜே.சூர்யா. இயக்குநர் என்ன செய்வார் என அறிவதற்காக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று ஸ்டார்ட்...கேமரா..ஆக்‌ஷன்...சொல்வதில் தொடங்கும் அவரது மாற்றம் மெல்ல மெல்ல விரிந்து சினிமா எனும் ஆயுதத்தை உடன் கொண்டு செல்கிறேன் எனப் பேசும் அளவிற்கு உருமாறும். இறுதியில் நான் ஒரு கலைஞன்...எனக்கு சாவே கிடையாது..என அவர் வசனம் முடியும். உண்மையில் கலைக்கு மட்டுமல்ல...கலைஞனுக்கும் இறப்பு என்பது கிடையாது. மறக்கப்படுபவைதான் இறந்துபோகின்றன. கலைஞனும் அப்படித்தான். கலையும் அப்படித்தான். 

கலையை நீ தேர்ந்தெடுக்கவில்லை. கலைதான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறது எனத் தொடங்கும் அத்திரைப்படம் ஆயுதத்தைத் தூக்கியவனையும், அவனைக் கொலை செய்யத் துடிப்பவனையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. உண்மையின் பக்கம் அவர்களை கரை சேர்க்கிறது. 

இவ்வித காட்சிகள் பார்வையாளருக்கு கடத்தும் செய்திகள் அற்புதமானவை. ஒலியுடன் தோன்றும் அசையும் பிம்பங்கள் ஒரு உயிருள்ள மனிதருக்குள் அதுவரை நம்பியிருந்த எண்ணத்தைப் புரட்டிப் போடுகிறது. அவனின் ஆசைகளையும், வஞ்சகங்களையும், குரூரத்தையும் வேறோடு வெட்டி வீசுகிறது.

வணிக கணக்குகளுக்குள் போடப்படும் எந்த சினிமாவும் இந்த வரையறையில் அடங்குவதில்லை. அவை புல்லாங்குழல் வாசித்து எலிகளை மலையில் இருந்து கொல்லும் வித்தைக்காரனுக்கு ஒப்பானவை.

உலகம் போற்றிய அறிஞரும், சமூக மாற்றத்திற்காகப் போராடியவருமான ஹெலன் கெல்லரின் வாசகங்களுடன் இந்தக் கட்டுரை நிறைவுறுவது பொருத்தமாக இருக்கும். 

“மூன்று நாள்கள் எனக்கு பார்வை கிடைத்தால் முதல்நாள் என்னுடன் இருந்த அற்புதமான மனிதர்களையும், இரண்டாவது நாள் அழகான இயற்கை காட்சிகளையும், மூன்றாவது நாள் அற்புதமான திரைப்படங்களையும் பார்த்து மகிழ்வேன்” 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com