யார் திருடன்..? ஞானவேல் ராஜாவின் அயோக்கியத்தனம்!: கரு.பழனியப்பன்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக இயக்குநர் கரு.பழனியப்பன் அளித்த நேர்காணல் வைரலாகி வருகிறது.
யார் திருடன்..? ஞானவேல் ராஜாவின் அயோக்கியத்தனம்!: கரு.பழனியப்பன்

இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதி ராஜா  உள்பட பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

தொடர்ந்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீரிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால், இயக்குநரும் நடிகருமான சசிகுமார், ஞானவேல் ராஜாவுக்கு எதிராக புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 

“அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? 'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்..’ என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் கரு.பழனியப்பன் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனக்கு பருத்தி வீரன் படத்தில் நடந்த எதுவும் தெரியாது. ஆனால், ஞானவேல் ராஜா தன் பேட்டிகளில் திமிரான உடல்மொழியில் அமீரைத் திருடன் என்கிறார். ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநரை இப்படித்தான் பேசுவார்களா? தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு ‘பராசக்தி’ அமைந்ததுபோல் கார்த்திக்கு ‘பருத்தி வீரன்’ அமைந்தது. இப்படி ஒரு படம் எந்த அறிமுக நடிகருக்கும் கிடைக்காது. கார்த்தி 10 படத்தில் நடித்து அடையும் புகழை ஒரே படத்தில் கொண்டு சேர்த்தவர் அமீர். கார்த்தி ஒவ்வொரு மேடையிலும்  ‘என் அண்ணன் அமீர்’ என்கிறார். ஆனால், அண்ணனைத்தான் ஆள்விட்டு திருடன் எனக் கூறுகிறார்கள்.

அமீரால் சூர்யாவுக்கும் கார்த்திக்கும் ரூ.1 கோடிதான் பிரச்னை என்றால் கொடுக்க வேண்டியதுதானே? இன்று இருவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அமீரும் நன்றாகத்தான் இருக்கிறார். இப்போதும், அமீருக்கு பணம் பிரச்னை இல்லை. பருத்தி வீரனால் அவர் மரியாதை இழந்தார். அதை இவர்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா?  ஞானவேல் ராஜா, அமீரால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்கிறார். தேவையென்றால் ஒருவர் வேண்டும், இல்லையென்றால் தூக்கிப்போடுவீர்களா? ஞானவேல் பேட்டியைப் பார்த்தால் பண்ணையார்த்தனம் இன்னும் ஒழியவில்லை என்றே தோன்றுகிறது. அமீரிடம், பருத்தி வீரன் படத்தின் தயாரிப்பாளர் விலகியபின் யாரோ ஒருவர் வீட்டுப் பிள்ளைக்காக நீங்கள் ஏன் சொந்தப் பணத்தைப் போட்டு படத்தை எடுத்தீர்கள் என்றால் ‘பழக்கத்துக்காக’ என்கிறார். சசிகுமார் பணக்கார வீட்டுப் பிள்ளை. அவன் அமீரின் உதவி இயக்குநராக இருந்தவன்.

அவனும் பருத்தி வீரனுக்காக அமீரிடம் ரூ.1.5 கோடி கொடுத்திருக்கிறான். நீ ஏன் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாய் எனக் கேட்டால், அவனும் ‘பழக்கத்துக்காக’ என்கிறான். இப்படி பழக்கத்துக்காக வந்து நிற்பவன்தான் மதுரைக்காரன். ஞானவேல் ராஜா மதுரைக்காரர்களுக்கு மரியாதை தெரியாது என்கிறார். கோயம்புத்தூரில் 'அண்ணா' என்றுதான் அனைவரும் அழைக்கிறார்களாம். மரியாதை என்பது வாயில் வரக்கூடியது அல்ல நடத்தையில் வர வேண்டியது. பேசும்போதெல்லாம் அமீர் திருடன், பொய்கணக்கு எழுதினார் என்றதால் அமீர் உடன் இருப்பவர்கள் மன உளைச்சல் அடைந்திருக்க மாட்டார்களா? ஞானவேல் ராஜா  அயோக்கியத்தனம் செய்கிறார். திரையுலகில் மூத்தவரான சிவகுமார், யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவருடன் இருப்பவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com