லியோ: தகாத சொல்லும் ரசிகர்களின் அட்டகாசமும் - யார் பொறுப்பு?

லியோ டிரைலரை வெளியிட்ட திரையரங்கம் ரசிகர்களின் கொண்டாட்ட வெறியால் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
லியோ: தகாத சொல்லும் ரசிகர்களின் அட்டகாசமும் - யார் பொறுப்பு?

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (அக்.5) மாலை வெளியானது விஜய்யின் லியோ டிரைலர். லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகளைக் காணவே பலரும் படம் வெளியாகும் அக்.19 ஆம் தேதிக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் டிரைலர் கொண்டாட்டங்கள் ஒருபுறம் டிரெண்டிங் ஆனாலும் மறுபக்கம் எல்லை மீறிய செயலையும் ரசிகர்கள் செய்திருக்கின்றனர். சென்னையில் கோயம்பேடு பகுதியிலுள்ள பிரபலமான திரையரங்கொன்றில் லியோ திரைப்பட டிரைலரை தங்கள் திரையில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதனைக் காண மாலை 3 மணியிலிருந்தே காத்திருந்த 600க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தடுப்பரண்களைக் கடந்து ஆவேசமாக அரங்கிற்குள் நுழைந்து, தங்கள் தளபதிக்கு விசில் அடித்து ஆரவாரம் செய்து வரவேற்பைக் கொடுத்தனர். 

ஆனால், ரசிகர்கள் அரங்கைவிட்டு வெளியேறும்போதுதான் நிர்வாகத்தினர் அந்த அதிர்ச்சியைக் கண்டிருக்கின்றனர். டிரைலரைப் பார்க்கும் ஆவலில் இருக்கைகளில் ஏறி நின்று குதியாட்டம் போட்ட ரசிகர்களால் 400-க்கும் மேற்பட்ட இருக்கைகள் கடுமையாக சேதமடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் நொறுக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் இச்செயலால் கடும் இழப்பில் இருக்கும் நிர்வாகம் இதுகுறித்து வேறு எந்தத் தகவலையும் பகிரவில்லை.

பொதுவெளியில் டிரைலர் வெளியீட்டைக் காட்சிப்படுத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்தனர். ஆனால், கோயம்பேட்டுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்தத் திரையரங்கில் இவ்வளவு சிரமப்பட்டு லியோ டிரைலரை வெளியிட என்ன அவசியம் இருக்கிறது? ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒரே இடத்தைச் சூழ்வதால் உண்டாகும் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்புப் பிரச்னைகள் என எதையும் கவனத்தில் கொள்ளாமல் யூடியூப்பில் காண முடிகிற டிரைலரை ரூ. 10 வாங்கிக்கொண்டு திரையிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, ஒருமுறை ரசிகர்களின் கூட்டத்தால் இத்திரையரங்கின் முகப்புக் கண்ணாடி உடைக்கப்பட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது. கடந்தகால அனுபவங்களைக் கணக்கில் கொள்ளாமல் இந்த முறை முயன்று பார்த்ததில் கடுமையான விளைவுகளையே சந்தித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் இதே திரையரங்கத்திற்குப்  ‘பத்து தல’ படத்தைக் காண குழந்தைகளுடன் வந்த நரிக்குறவர் சமுதாயப் பெண்ணை உள்ளே விடாமல் ஊழியர்கள் தடுத்தனர். அப்பெண்ணிடம் டிக்கெட் இருந்தும் இந்த நிகழ்வு நடந்ததால் சில ரசிகர்கள் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஏன் அவர் அனுமதிக்கப்படவில்லை? என  பிரச்னை வலுவடையத் துவங்கியதும் திரையரங்க நிர்வாகம், யு / ஏ சான்றிதழ் பெற்ற படத்திற்குக் குழந்தைகளைக் கூட்டிவந்ததால்தான்  அவரை அனுமதிக்கவில்லை என அறிக்கை வெளியிட்டது.

ஆனால், அது எந்தளவுக்கு உண்மை என்பது தீண்டாமையால் பாதிக்கப்பட்ட, படாத அனைவருக்கும் தெரியும். குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே வந்து திரைப்படத்தைப் பார்க்கும்போது அவர்களின் நிறம், உடை, வெளிப்படையான பேச்சு அருகிலிருக்கும் உயர்குடி ரசிகர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதால்தானே உள்ளே விடவில்லை என பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து, திரையரங்க ஊழியர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஊழியரும் சொந்தப் பிணையில் வெளிவந்தார்.

தற்போது நடந்த நிகழ்வில் ஐ.டி. உள்பட பல துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என பொதுப் பார்வையில் நாகரிகமானவர்களாகக் கருதப்படுபவர்கள், தங்கள் சொத்தைச் சேதப்படுத்துவதுபோல் இருக்கைகளை உடைத்து நொறுக்கியதையும் அதே நாகரிகத்தைக் கணக்கில் கொண்டு நரிக்குறவர் பெண்ணை உள்ளேவிடாமல் தடுத்ததையும் இந்தத் திரையரங்க நிர்வாகம் நினைத்துப் பார்க்குமோ என்னவோ தெரியவில்லை.

இருக்கைகள் உடைக்கப்பட்ட பின் வெளியே வந்த ரசிகர் ஒருவர், கூட்டத்தில் சிக்கியதால் இருவர் மயக்கம் அடைந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாகத் துறையில் இருக்கும் திரையரங்க நிர்வாகம் ரசிகர்களுக்கு ஏதாவது என்ன செய்யும்?

திரையரங்கம் இருக்கும் பகுதி முதன்மையான சாலை என்பதால் எப்போதும் வாகன நெரிசல் இருந்துகொண்டே இருக்கும். இதுவொரு பக்கம் என்றால் இருக்கைகளை உடைத்து தங்கள் நடிகரின் பலத்தைக் காட்டியதைப் பெருமையாகப் பேசும் ரசிகர்களை என்னவென்று சொல்வது? கொண்டாட்டத்திற்கும் சூறையாடலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வெறியாட்டம் ஆடியிருப்பதாகத்தான் புகைப்படங்கள் காட்டுகின்றன.

இந்தத் திரையரங்கம், ரசிகர்கள் இவர்களுடன் லியோ டிரைலரில் காட்சிப்படுத்தப்பட்ட விஷயங்களையும் இணைக்க வேண்டியிருக்கிறது. தீய பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளாதீர்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் விஜய், போதைப்பொருள்களை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களைத் தேர்ந்தெடுத்து புகைப்பிடிப்பது, மது அருந்துவது என தேவைக்கு அதிகமான காட்சிகளில் ஏன் நடிக்கிறார் என்பது புரியவில்லை.

இதே லியோ படத்தின் முதல் பாடலான, ‘நா ரெடி’ பாடலில் பாடல் முழுவதும் சிகரெட்டுடன் வலம் வந்த விஜய்க்கு இது சிறுவர்களிடையே குறைந்தபட்ச தாக்கத்தையாவது ஏற்படுத்தாதா என்கிற கேள்விகூட எழவில்லையா?  அந்தக் காணொலியில் சிகரெட்டை அவர் வாயிலிருந்து எடுக்கவைக்க எத்தனை அமைப்புகள், பொதுப் பார்வையாளர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது?

அதைவிட லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து தைரியமான முயற்சிகளைச் செய்கிறேன் என்கிற பெயரில் டிரைலரில் கடுமையான கெட்ட வார்த்தை ஒன்றை விஜய் வாயால் சொல்ல வைத்திருக்கிறார். பெண்களை மிக மோசமாக சித்திரிக்கும் அந்த வார்த்தை விரைவில் சென்சார் செய்யப்பட்டாலும் அதற்குள் கோடிகளைக் கடந்த பார்வைகளில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலரும் பார்த்துவிடுவார்களே என்கிற அச்சம், கூச்சம், அசிங்கம், அருவருப்பு, தார்மிக உணர்வு என எதுவொன்றும் சம்பந்தப்பட்ட ஒருவருக்குக்கூடவா இல்லாமல் போய்விட்டது? சினிமாவைப் பார்த்துதான் மக்கள் கெடுகிறார்களா? என்கிற புத்திசாலித்தனமான கேள்விகளைக் குறித்து யோசிக்காமல் எது சரி.. எது தவறு.. எனத் தெரியாத வயதினரும் நம் உருவாக்கங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

நட்சத்திர நடிகர்கள் பொதுச்சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைக்கு வந்த பின்பு கதைக்குத் தேவையென்றாலும் கூட தவிர்க்க வேண்டிய சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிற பொறுப்பை விஜய் போன்ற நடிகர்கள் உணர்வார்களா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com