
துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டதால் இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
குறிப்பாக, துணிவு திரைப்படம் நள்ளிரவில் வெளியானதால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன.
இதையும் படிக்க: துணிவு வெறும் ஆக்ஷன் படம் மட்டும்தானா..? - திரை விமர்சனம்
அதனைத் தொடர்ந்து வாரிசு அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முதல்நாள் வசூலில் துணிவு திரைப்படம் ரூ.17.5 கோடியையும் வாரிசு திரைப்படம் ரூ.17 கோடியையும் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் துணிவு ரூ.24 கோடியையும் உலகளவில் ரூ.30 கோடியையும் வசூலித்துள்ளதாகவும் வாரிசு இந்தியாவில் ரூ.26.5 கோடியையும் உலகளவில் ரூ.35 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல்.
மேலும், அமெரிக்காவில் துணிவு திரைப்படம் வெளியான ஒரே நாளில் 4 லட்சம் டாலர்கள்(3.3 கோடி) வசூலித்துள்ளதாகவும் இது மிகப்பெரிய வசூல் சாதனை என்றும் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையைப் பெற்ற சரிகம சினிமாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வலிமை ஒட்டுமொத்தமாக 1.25 லட்சம் டாலர்களே( 1.1 கோடி ) வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், ஆஸ்திரேலியா மற்றும் லண்டனில் வாரிசு திரைப்படம் அதிக வசூலைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க: குடும்பங்களை ஈர்க்கிறதா வாரிசு? திரை விமர்சனம்
இதனால், தமிழகத்தில் அஜித்தும் உலகளவில் விஜய்யும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்!