நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் வெற்றிப்படமானது.
படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்தது.
சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
சர்தார் 2 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதன் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு, ஜூலை 15ஆம் நாள் இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து நடைபெறுமென தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் சர்தார் - 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில், நடிகர் கார்த்தி கலந்துகொண்டதாகவும் தகவல். நடிகர் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார், மெய்யழகன் என இரண்டு படங்கள் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. சர்தார் 2 படத்துக்குப் பிறகு கைதி 2 நடிக்க உள்ளார்.