பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவரும் நிலையில், அடுத்த சீசனை மீண்டும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் எனக் கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 106 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் 100 நாள்களுக்கு 18 பிரபலங்கள் அனுப்பிவைக்கப்படுவர். இதில் அவர்களின் தனிப்பட்ட குணத்தை வெளிப்படுத்தும் வகையிலான சூழல்களை உருவாக்கி போட்டிகள் வைக்கப்படும். இதில், மக்கள் மனங்களைக் கவராத போட்டியாளர், ஒவ்வொரு வாரம் வீதம் வெளியேற்றப்படுவர்.
விஜய் தொலைக்காட்சியில் பெரும் பொருள் செலவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இதற்காக கமல் ஹாசனுக்கு ரூ.150 கோடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என கமல் ஹாசன் அறிவித்திருந்தார். இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளரானார்.
பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கத் தொடங்கினார். எனினும் வார இறுதி நாள்களில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதத்திற்காகவே அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தனர்.
எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாகவும் இயல்பாகவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் பாணி பலரைக் கவர்ந்துள்ளது.
கமல் ஹாசனின் பாணியிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்றாலும், போட்டியாளர்களிடம் பேசி, அவர்களின் மனநிலையை வெளிப்படுத்த வைப்பதில் கமல் ஹாசன் கைதேர்ந்தவர் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
மாறாக விஜய் சேதுபதி, தான் நினைப்பதை போட்டியாளர்களின் பதிலாகப் பெறுவதற்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதனை மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத் தலைவர் கோவை தங்கவேலு உறுதிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயில்வதற்காக கமல் ஹாசன் வெளிநாட்டிற்குச் சென்றதால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | திருமணத்துக்குத் தயாரான சின்ன திரை தம்பதி!