உலகப்புகழ் பெற்ற பாடகிகளில் ஒருவர் 32 வயதான செலீனா கோம்ஸ். அமெரிக்காவின் டெக்ஸாஸில் பிறந்தவர் செலீனா கோம்ஸின் பாடல்களுக்கு மட்டுமல்லாமல் இவரது தோற்றத்துக்கும் ரசிகர்கள் உண்டு.
இன்ஸ்டாகிராமிலும் டிவிட்டரிலும் செலினா வெளியிடும் புகைப்படங்கள் குறைந்தபட்சம் 9 முதல் 10 மில்லியன் (1 கோடி) லைக்குகள் பெறும்.
இந்த அழகான பாடகியின் பாடல்கள் கோடிக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளிக் குவித்து வருகின்றன. இது மட்டுமில்லாமல் தொண்டு நிறுவனங்களையும் நடத்திவருகிறார்.
உடல் பிரச்னைகள்
மன அழுத்தப் பிரச்னையால் கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களை அவர் தவிர்த்து வந்தார்.
மன நலப் பிரச்னைகள் ஏற்பட்டதன் காரணமும் தனக்கு ஏற்பட்ட லூபஸ் பாதிப்பின் பக்க விளைவினால் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டதாக அவரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணம் எப்போது?
இசையமைப்பாளர் பென்னி பிளான்கோவுடனான காதல் குறித்து பேசியுள்ளார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில் இந்த நேர்காணல் வைரலாகி வருகிறது. செலினா கோம்ஸ் பேசியதாவது:
இந்த வகையில் நான் நேசிக்கப்பட்டதே இல்லை. பென்னி பிளான்கோ என்னுடைய வாழ்க்கையில் ஒளிபோல இருக்கிறார்.
தாயாக முடியாது
நான் இதுவரை சொல்லாத ஒன்றை சொல்லுகிறேன். என்னால் குழந்தையை பெற்றெடுக்க முடியாது. எனக்கு இருக்கும் அதிகமான உடல்நலம் சார்ந்த பிரச்னைகளால் இப்படியானது. இதுதான் என்னை சிலகாலமாக வருத்தமடைய செய்தது.
அம்மா ஆகுவதற்கான மாற்று வழிமுறைகள் இருக்கின்றன. அதற்காக நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தப் பயணத்தில் என்ன நடக்குமென்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், சற்று வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன்.
அவரை கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய அழுத்தம் எதுவுமில்லை. விதிகள் எதுவும் இல்லை. அவரை அவராகவே இருக்க விரும்புகிறேன். நானும் நானாகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய பெயரை நான் செலீனா கோம்ஸ் என்பதில் இருந்து மாற்ற விரும்பவில்லை என்றார்.