

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் விடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில் தான் யாரையும் கஷ்டப்படுத்த அப்படி சொல்லவில்லை என்றுகூறிய ஏ.ஆர். ரஹ்மான் பல விஷயங்களைப் பேசிய பிறகு, பேச்சின் முடிவில் ஜெய்ஹிந்த், ஜெய் ஹோ என்றும் கூறினார்.
ஹிந்தி சினிமாவில் பெருகும் மோசமான ஆதிக்கம்
பிபிசி ஏசியன் நெட் ஒர்க்கில் அளித்த நேர்காணலில் சமீப காலமாக ஹிந்தி திரையுலகில் வகுப்பு வாத அடிப்படையிலான ஆதிக்கம் மிகுந்து வருவதாகக் கூறினார்.
மேலும் அதில், ”சாவா திரைப்படம் பிரிவினையை தூண்டும் விதமாக இருக்கிறது. ஆனால், அதன் உள்ளடக்கம் தைரியத்தைக் காட்டுவதாக இருப்பதால் அந்தப் படத்துக்கு இசையமைத்தேன்” எனக் கூறினார்.
இது வட மாநிலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத்தும் இவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா எனது வீடு
அருமையான நண்பர்களே இசை என்பது எப்போதும் என்னுடைய தொடர்பு மொழியாகவும் இந்தியாவின் கலாசாரத்தைக் கொண்டாடவும் கௌரவிக்கும் விதமாகவும் இருக்கிறது.
இந்தியா எனது முன்மாதிரி, எனது ஆசிரியர், எனது வீடு. சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாகப் புரிந்துக்கொள்ள நேரிடும் என்பதைப் புரிந்து கொள்கிறேன்.
ஆனால், என்னுடைய குறிக்கோள் எல்லாம் எப்போதும் இசை வழியாக கலாசாரத்தை உயர்த்துவதும் கொண்டாடுவதுமே ஆகும்.
எப்போதுமே பிறர் வருந்த வேண்டுமென நினைக்க மாட்டேன். என்னுடைய நேர்மை உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன்.
ஜெய்ஜிந்த், ஜெய் ஹோ
இந்தியனாக இருக்க பெருமையாகக் கருதுகிறேன். ஏனெனில், பல கலாசாரங்களை உள்ளடக்கிய குரலை கொண்டாடவும் கருத்து சுதந்திரத்திற்கும் இந்தியாவில் எப்போதும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
பிரதமர் முன்னிலையில் வேவ்ஸ் கூட்டமைப்பில் நாகா இசைக்கலைஞர்களுடன் ரோஹி - இ - நூர், ஸ்டிரிங் கலைக்குழு, சன்சைன் குழு, சீக்ரெட் மவுன்டெயின் குழுவுடனும் இணைந்து நிகழ்ச்சி நடத்தினோம்.
இந்தியாவின் முதல் பலவிதமான கலாசாரத்தில் இருந்த இசைக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சி அது. அத்துடன் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ராமாயணா திரைப்படத்துக்கு இசையமைக்கிறேன்.
ஒவ்வொரு பயணமும் என் குறிக்கோளை வலுப்படுத்துகிறது. ஜெய்ஜிந்த், ஜெய் ஹோ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.