
டோரதி திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்: நடிகர் சனந்த்
நடிகர் சனந்த் டோரதி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்...

நடிகர் சனந்த்
நடிகர் சனந்த் டோரதி திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் உருவான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக உருவானது. கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மேலும், இப்படம் உலக அளவில் ரூ. 10 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தில் சுப்புவாக நடித்த சனந்த், “இது எனக்கு கனவு நனவான தருணம். ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் பயணித்த காலத்திலிருந்தே, வாழ்நாள் முழுவதும் நினைவுகூரக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து அந்தக் கதாபாத்திரத்தைத் திரும்பிப் பார்த்து மகிழ வேண்டும் என்று விரும்பினேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தை நான் முழுமையாக நம்பினேன். அந்த நம்பிக்கையே தற்போது எனக்கு கிடைக்கும் பாராட்டுகள்.
கார்த்திக் சுப்புராஜ் சார் கதையைச் சொன்னபோதே, அந்தக் கதாபாத்திரத்துடன் நான் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப்போனேன். கதையைக் கேட்ட அந்த நொடியில் இருந்தே ‘டோரதி’ என்னுள் பிறந்துவிட்டாள். கார்த்திக் சுப்புராஜ் சாரின் பார்வை மிகவும் தெளிவாக இருந்தது. வழக்கமான சினிமா பாணியிலான உடல்மொழி அல்லது செயற்கையான பாவனைகள் மூலம் இந்தக் கதாபாத்திரத்தை வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. மாறாக, அதன் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கவே விரும்பினார். மற்ற கதாபாத்திரங்களும் வலுவாக இருந்ததால் எனது கதாபாத்திரமும் மேலும் வலுவானது. ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் இந்தப் படத்தின் தூண். அவை படத்தில் எனது கதாபாத்திரத்தின் இருப்பையும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருந்தன.

‘டோரதி’ திரைப்படம் எனக்கு ஆத்மார்த்தமான அனுபவம். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது என் வாழ்நாளின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்று. குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அம்மாக்கள், சகோதரிகள் என பெண்கள் எனது கதாபாத்திரத்தையும் நடிப்பையும் பாராட்டுவதைப் பார்க்கும்போது அந்த உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை” என்றார்.
மேலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரத்தின் மாற்றம் குறித்து பேசிய சனந்த், “படத்தின் இறுதிப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் எனது கதாபாத்திரம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும். அந்தத் தருணத்தை வெளிப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய சவால். அதுவரை சுப்பு கதாபாத்திரம் பற்றி நான் உருவாக்கி வைத்திருந்த அனைத்தையும் முழுமையாக விட்டுவிட்டு, ஒரு புதிய உணர்வுப்பூர்வமான நிலைக்குள் என்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டியிருந்தது. அந்தக் காட்சி கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ, மேலோட்டமானதாகவோ தோன்றாத வகையில் கார்த்திக் சுப்புராஜ் சார் அந்த மாற்றத்தை உணர்வுப்பூர்வமாகவும் நுட்பமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். திரு சாரின் கேமரா அந்தக் காட்சியில் இடம்பெற்ற உணர்வுகளின் நுணுக்கங்களை அற்புதமாகப் பதிவு செய்தது. அதே நேரத்தில், இசைஞானி இளையராஜா சாரின் இசை அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்தது. காட்சி, ஒளிப்பதிவு மற்றும் இசை என மூன்றும் அற்புதமாக ஒன்றிணைந்த இடம் அது. அந்த காட்சி எப்போதும் என் நினைவில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Sananth has spoken about the reception the movie Dorothy received.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







