கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ஆடு ஜீவிதம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

சிறுகதைகள், நாவல்கள் திரைப்படமாகும்போது அதை வாசித்தவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பது சாதாரணம். ஆனால், ஒரு மாநிலமே ஒரு நாவலைத் தழுவி உருவான படத்திற்காகக் காத்திருப்பது நிச்சயம் சாதாரணமானது அல்ல.

அந்தப் பெருமையைச் சேர்த்திருப்பது நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ஆடு ஜீவிதம் திரைப்படம்தான். 1990-களில் கேரள மாநிலம் ஆழாப்புழாவைச் சேர்ந்த நஜீப் என்பவர் பிழைப்பிற்காக சௌதி செல்கிறார். ஆனால், அங்கு பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் அடிமையாக மாற்றப்பட்டு கடும் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடுகிறது. சொந்த மண்ணைவிட்டு எங்கோ குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறோமே என வேதனைப்படும் நஜீப், அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கிறார்.

ஆனால், சுற்றிலும் பரந்து கிடந்த பாலைவனத்தை உடல் நலிவுற்ற ஒருவரால் எப்படி கடக்க முடியும்? நஜீப் தப்பித்தாரா இல்லையா? என்கிற உண்மைக் கதையே ஆடு ஜீவிதம். மலையாள எழுத்தாளர் பென்யாமின் இச்சம்பத்தில் பாதிக்கப்பட்ட நஜீப் முகமது என்பவரின் கதையைக் கேட்டு எழுதிய நாவலே ஆடு ஜீவிதம். தமிழ் உள்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல் பல விருதுகளையும் பெற்றிருக்கிறது.

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!
“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆடு ஜீவிதம் நாவலை வாசித்த இயக்குநர் பிளஸ்சி, 'இதில் மிகப்பெரிய சினிமா இருக்கிறது' என இந்நாவலை சினிமாவாக்கும் முயற்சிகளில் இறங்கி, கடந்த 16 ஆண்டுகளாக திரைப்படமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

இதற்கு துணையாக நடிகர் பிருத்விராஜ் பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் துவக்கத்தில் அழகான ஆழப்புழா நிலத்தைவிட பொலிவான பேரழகனைப்போல் இருக்கும் பிருத்விராஜ், பாலைவனத்தில் உடல் எடை குறைந்து சிக்கி சிதைந்து கிடக்கும்போது ‘திக்’கென இருக்கிறது. ஒரு நாவல், ஒரு சினிமா என்பதைத்தாண்டி ஒரு நடிகனுக்குள் இருக்க வேண்டிய ‘தீ’ என்ன என்பதற்கு பிருத்விராஜ் ஒரு உதாரணம்.

சினிமாவின் மீது காதல் இல்லாத எவராலும் இக்கதாபாத்திரத்தின் அருகேகூட சென்றிருக்க முடியாது. அமலா பாலுடன் இருக்கும் ‘ஓமணே..’ பாடலில் பிருத்விராஜின் உடல்மொழியும் காதலையும் தவிர வேறொன்றும் அறியாத கண்களும் திரையில் பேசுகின்றன.

குளோசப் ஷாட்களில் பிருத்விராஜின் கன்னங்களும் இமை மடிப்புகளும் நடுங்கும்போது பிருத்விராஜ் ஒரு நடிகராக வென்றுவிட்டார். முக்கியமாக, ஒரு காட்சியில் அவருக்கு கொடுக்கப்பட்ட ரொட்டித் துண்டை ஆடு உண்பது போல தாடைகளை அசைத்து உண்ணும் காட்சியில் இருந்த தொடர்ச்சி அபாரம். ஆடுகளை ஓட்டிச் செல்லும் இடையராக மாறுவதிலிருந்து இறுதிக்காட்சி வரை அக்கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார். தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பு. மனைவியாக சைனு கதாபாத்திரத்தில் நடித்த அமலா பாலும் ஈர்க்கிறார்.

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!
ஆடு ஜீவிதம் முதல்நாள் வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஹாலிவுட் நடிகர் ஜிம்மி லூயிஸ் உள்பட துணைக் கதாபாத்திரங்கள் சரியான தேர்வு. ஆடு ஜீவிதம் திரைப்படத்தை சர்வதேச தரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மானும் ஒளிப்பதிவாளர் சுனில்.கேஎஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டியின் இசைக் கோர்வைகள் அதிகம் பேசப்படும். வசனங்கள் இல்லாத இடங்களில் ஏ. ஆர். ரஹ்மானின் ஆக்கிரமிப்பு திரையை நிறைக்கிறது. ரஹ்மானுக்கும் முக்கிய திரைப்படமாக ஆடு ஜீவிதம் இருக்கும். விஎஃப்எக்ஸ் காட்சிகளும் தரம்.

நாவலில் இடம்பெற்ற சில முக்கிய சம்பவங்கள் திரைப்படத்தில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக நஜீப் சௌதி வந்ததும் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவிக்கு என்ன குழந்தை பிறந்திருக்கும் என்பதை நினைத்து வருந்துவது, அவனுக்கு மகனா மகளா யார் பிறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் தவிப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்படவில்லை. அதேபோல் நாவலில் இடம்பெற்ற அந்த வலியைக் கடத்த முடியாதது பலவீனம்.

ஒரு சோகத்தை அறிய எதற்கு இத்தனை ஆண்டுகள்? என்கிற கேள்விக்கு இடம் கொடுக்காமல் ‘நம்பிக்கை’ எந்த எல்லைக்கும் செல்லக்கூடியது என்பதை ஆடு ஜீவிதத்தில் உணர்த்தியிருக்கிறார்கள். நாவலில், “நாம் நினைத்த மாதிரி ஒருநாள் வாழ்க்கை மாறும்” என்ற வரி இருக்கும். அது நஜீப்பிலிருந்து பிளஸ்சி வரை என்பதை நினைக்க நினைக்க திகைப்பாகவே இருக்கிறது.

நாம் வாழாத வாழ்க்கைகள் எல்லாம் கற்பனைகள்தான். ஆனால், உண்மை, கற்பனைக்கும் அப்பாற்பட்டது இல்லையா? இந்த ஆடு ஜீவிதத்தில் அதை உணரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com