என்னுடைய அன்றாட வாழ்க்கையின் அங்கம்

தினமணியுடனான என்னுடைய தொடர்பு, என்னுடைய பள்ளிப் பருவத்தில் தொடங்கியது. அப்போதெல்லாம், நாள்தோறும் செய்தித்தாள்களை வாசிப்பது என்பது, தங்கள் குழந்தையின் ஆளுமையை வளர்க்கும்
டாக்டர் சுதா சேஷய்யன்
டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணியுடனான என்னுடைய தொடர்பு, என்னுடைய பள்ளிப் பருவத்தில் தொடங்கியது. அப்போதெல்லாம், நாள்தோறும் செய்தித்தாள்களை வாசிப்பது என்பது, தங்கள் குழந்தையின் ஆளுமையை வளர்க்கும் என்று பெற்றோர்கள் நம்பினார்கள். அப்படித்தான் எனக்கும் தினமணி பழக்கம் தொற்றிக் கொண்டது; இன்றுவரை தொடர்கிறது.

தினமணியில் என்னை முதலில் ஈர்த்தது, செய்திகளும் பத்திகளும் கொடுக்கப்படுகிற அடர்த்தி.

இதழைத் திறந்தாலே, வரி பிசகாமல் புள்ளி வைத்து நெளி மாறாமல் இழை இழுத்த நம்மூர்க் கோலம் போன்ற கண்ணை உறுத்தாத, வாசிப்பைச் சிதைக்காத கம்பீரமான அந்த அடர்த்தி வசீகரிக்கும். அடுத்தது, தலையங்கப் பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகள். பல்வேறு விஷயங்கள் குறித்து பல்வேறு நபர்கள் எழுதுகிற கட்டுரைகள்.

பெரியவர் ஏ.என். சிவராமன் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தவையும், தினமணி வாசிப்பின் செல்வாக்குமாகச் சேர்ந்து ஏற்படுத்திய பாதிப்பு ஒன்றுண்டு சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் சிக்னல் பக்கம் போக நேர்ந்தாலே, தலை தன்னையறியாமல் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டை (அப்போதைய தினமணி அலுவலகம்) நோக்கித் திரும்பும்.

திரு ஐராவதம் மகாதேவன் காலத்தில் தினமணி அலுவலகத்திற்கே ஓரிரு முறை செல்ல நேர்ந்ததும், திரு மகாதேவன் அவர்களோடு அமர்ந்து உரையாட நேர்ந்ததும், அறிவையும் மனதையும் விசாலப்படுத்திய தருணங்கள். எங்கள் பேராசிரியர் மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம் அவர்களோடு ஐராவதம் மகாதேவன் அவர்களைச் சந்தித்த மாலைப் பொழுது ஒன்றில், எப்படியோ பேச்சு தமிழில் எழுதுகிற முறைகள் பற்றித் திரும்பியது.

"கேரளா' என்றும் "ஆந்திரா' என்றும் எழுதுவதைக் காட்டிலும், "கேரளம்' என்றும் "ஆந்திரம்' என்றும் தமிழ்முறைப்படி எழுத வேண்டும் என்பதைத் மகாதேவன் வலியுறுத்தினார். அவர் அன்று சொன்னதைப் பலமுறை எண்ணிப் பார்த்துள்ளேன். சொல்லின் நிறைவில் "ஆ.....' என்று இழுத்துக்கொண்டு நின்றால், முழுமையடையாத ஓர் உணர்வு தோன்றத்தான் செய்கிறது. "ம்..' என்று அந்தச் சொல் நிறைவடையும்போது, தமிழ் மொழியின் இனிமையும் மென்மையும் சேர்ந்து கொள்கின்றன. இப்போதும், ஆன்மிகக் கட்டுரைகள் எழுதும்பொழுது, "பிரம்மா' என்று எழுதவேண்டி வந்தால், கையும் மனமும் சண்டித்தனம் செய்கின்றன. ஐராவதம் மகாதேவன் ஓரமாக எட்டிப் பார்க்கிறார். ஆனாலும், சில சமயங்களில், வெகுஜன புரிதலுக்காக எழுதவேண்டி வருகையில், மானசீகமாக தினமணியிடமும் மகாதேவனிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்.எம்.டி. சம்பந்தம் அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த காலத்தில், தினமணியுடன் நெருக்கம் அதிகமானது. அடிக்கடி எக்ஸ்பிரஸ் எஸ்டேட் செல்வது வழக்கமானது. 2000-ஆம் ஆண்டு புதிய கார் வாங்கும் வாய்ப்பு வந்தபொழுது, அப்போது புதிதாகச் சந்தைக்கு வந்த "சிறிய கார்' மாடல்களில் ஹுண்டே நிறுவன சான்ட்ரோ காரைத் தேர்ந்தெடுத்ததும், சில மாதங்களிலேயே ஹுண்டே பட்டறை எக்ஸ்பிரஸ் எஸ்டேட் வளாகத்தில் அமைந்ததும், கார் சர்வீஸுக்கு விடுகிற சாக்கில் ஆர்.எம்.டி.எஸ்ஸோடு அரட்டை அடித்ததும் நெகிழ்வான அனுபவங்கள்.

அந்தப் பழைய கட்டடம், அதன் தொடக்கத்தில் இருந்த அகன்ற மாடிப்படிகள், ஏறிச் சென்றால் நீண்ட இடைகழி, வலப்பக்கம் திரும்பினால் அந்தப் பெரிய கூடத்தில் நின்றுகொண்டு, ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் அடுத்த நாளுக்கான இதழின் அமைப்பை ஆர்.எம்.டி.எஸ். பார்வையிட்டுக் கொண்டிருப்பார். எட்டிப் பார்க்கும்பொழுதே, பா. கிருஷ்ணன், தனசேகர், ரங்கராஜன் போன்றவர்கள் "அதோ ஆசிரியர்' என்று கையைக் காட்டிவிட்டு நகர்வார்கள். நான் தயங்கித் தயங்கி உள்ளே நுழைவதைப் பார்த்தவுடன் (சில சமயங்களில் மறைந்த டாக்டர் ராஜா அவர்களும் என்னுடன் வருவார்) கையை வீசித் தன்னுடைய அறையைக் காட்டி அங்கு அமரச் சொல்வார். சில சமயங்களில், அப்படியே கூப்பிட்டு ஏதாவது விவாதிப்பார்.

ஒருமுறை, இளம் இதழியலாளர் ஒருவருக்குக் கற்றுக் கொடுத்தது, இன்னமும் நினைவிருக்கிறது. அந்த இளைஞர் ஏதோவொரு செய்தியை எழுதும்பொழுது, "பதட்டம் நிலவுகிறது' என்று எழுதிவிட்டார். "பதட்டம்' என்ற அந்தச் சொல், ஆர். எம். டி. எஸ்-ஸைப் பார்த்துப் பல்லிளித்துவிட்டது போலும்! பக்கத்தில் வந்து நின்ற அந்த இளைஞரிடம் எந்தக் கடுமையும் காட்டாமல், மென்மையாகச் சொன்னார்: "அப்பா, இதைப் பார். இப்போது நான் உன்னைக் கூப்பிட்டதும், நீ பதறித்தானே போனாய்? "பதடி' போனாயா? "பதறி' போனாயா? "வெலவெலத்துப் போன அந்த இளைஞர், மெல்ல எழுத்துக் கூட்டி, "பதறிப் போனேன்' என்று சொல்ல.... 'அதுதான். 'பதறி' – அப்படியானால், அது பதற்றம், இல்லையா? பதட்டம் என்று இருக்கமுடியாது' என்று கற்றுக் கொடுத்தார்.

வாரம் தவறினாலும், தலையங்கப் பக்கத்திற்காகக் கட்டுரை வாங்கிக் கொள்வது மட்டும் ஆர்.எம்.டி.எஸ்ஸிடம் தவறவே தவறாது. சில கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. சில பிரசுரிக்கப்படவில்லை. அதற்கும் அவரிடம் காரணம் இருந்தது: 'நீ கொடுத்ததெல்லாம் வைத்திருக்கிறேன். தக்க நேரம் வரும்பொழுது போடுவேன்.'

தினமணியின் வலிமைக்கு அவ்வப்போது வெளியாகும் மலர்கள் பெருமை சேர்க்கின்றன.

திரு மாலன் காலத்தில் வேலூரில் நடந்த நிகழ்ச்சி, திரு ஆர் எம் டி எஸ் காலத்தில் நடைபெற்ற இலக்கிய விழா என்று பலவற்றிலும் பங்கு பெறும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியுள்ளது. திரு வைத்தியநாதன் அவர்கள் ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் இக்காலத்தில், தினமணியின் வேகம் அதிகரித்துவிட்டது. இளைஞர்மணி, மகளிர்மணி, வெள்ளிமணி என்று ஒய்யாரமாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது; வண்ண ஜாலம் காட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமை தவறினாலும், தமிழ்மணியையும் கலாரசிகனையும் வாசிக்கத் தவறுவதில்லை. கலாரசிகனின் விமர்சனமும் பாராட்டும், சர்வதேச அளவில் தமிழ் ஆர்வலர்களால் உற்று நோக்கப்படுகின்றன. இதனாலேயே, என்னுடைய நூல் ஒன்று வெளியாகும்பொழுது, அந்த நூல் குறித்துக் கலாரசிகனின் பதிவு என்ன என்று நானும் எதிர்ப்பார்ப்பது வழக்கம். தினமணிப் பதிவு வெளியானவுடன், பேரறிஞர் பெருமக்கள் சிலர், குறிப்பிட்ட நூலைத் தேடிப் பிடித்து வாசிப்பதை நான் அனுபவத்தில் அறிவேன்.

இவ்வளவு என்ன? திங்கள்கிழமைதோறும் வெளியாகிற நூல் அரங்கப் பகுதியை அலசி, அதிலிருந்து தேவையான நூல்களைப் பட்டியலிட்டுக் கொண்டு, அந்த வாரமே அவற்றை வாங்குகிற பழக்கம் எனக்கும் உண்டு.

டிசம்பர் மாத இசைவிழாக் காலங்களில், சூழல் நெருக்கத்தால் போக முடியாத கச்சேரிகளை, தினமணியின் விமரிசனத்தையும் ஒளிப்படங்களையும் வைத்துக்கொண்டு எட்டிப் பார்த்த திருப்தியையும் பெறுவதுண்டு.

தினமணி என்னுடைய அன்றாட வாழ்க்கையின் அங்கம். செய்திகளை வாசிப்பது என்பது மட்டுமில்லை, உண்மையான நடப்பு என்ன என்பதையும் முறையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

தகவல், அறிவியல், தொழில்நுட்பம், சமூகம், இளைஞர் நலம், மகளிர் பங்களிப்பு, சுய முன்னேற்றம், புத்தக வாசிப்பு, மொழிச் செம்மை, ஆன்மீகம், சிறுவர் இலக்கியம், வெகு ஜனத் திருப்தி என்று இதழியலின் எந்த அங்கத்தையும் விட்டுவிடாமல், மேலும் மேலும் செம்மைப்படுத்திக் கொண்டிருப்பதில் தினமணியின் பங்கு பாராட்டுக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com