நல்லி குப்புசாமி செட்டியார்
நல்லி குப்புசாமி செட்டியார்

பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்!

எனது தினசரி வாசிப்பில் முக்கிய இடம் பெறுவது தினமணி நாளிதழ். உள்ளூரில் இருந்தால் காலையில் முதலில் கையில் எடுப்பதும் தினமணிதான். அதிகாலை விமானத்தில் செல்லும்போது,
Published on

எனது தினசரி வாசிப்பில் முக்கிய இடம் பெறுவது தினமணி நாளிதழ். உள்ளூரில் இருந்தால் காலையில் முதலில் கையில் எடுப்பதும் தினமணிதான். அதிகாலை விமானத்தில் செல்லும்போது, செல்லும் வழியிலேயே ஏதாவது ஒரு பேப்பர் கடையில் தினமணி வாங்கிக் கொள்வேன். ஏனென்றால் அதைப் படித்தால்தான் படித்ததுபோல் இருக்கிறது.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோது என் வீட்டுக்கு வரும் பத்திரிகைகளில் தினமணியும் ஒன்று. சிறுவனாக இருந்தபோது எப்போதாவது ஒருமுறை புரட்டிப் பார்ப்பேன். அந்த வயதில் தலையங்கம், நடுப்பக்க கட்டுரை என்பதெல்லாம் புரியாது. 16 வயதில் என் குடும்பத்தொழிலான ஜவுளிதுறையில் நுழைந்த போது என் பொது அறிவை அதிகப்படுத்திக் கொள்ள தினமும் தினமணியை வாசிக்க ஆரம்பித்தேன். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது.
 என் நடுவயதில் எனக்கு பிடித்தமாக இருந்தது, "கணக்கன்' என்ற புனை பெயரில் அப்போதைய ஆசிரியர் ஏ.என்.சிவராமன் எழுதி வந்த கட்டுரைகள். அவரது தலையங்கமும், நடுப்பக்க கட்டுரைகளுமே நான் இளைஞனாக இருந்தபோது எனக்கு பொது அறிவு ஊட்டியவை.

அதன் பின்னர் ஐராவதம் மஹாதேவன், கஸ்தூரி ரங்கன் போன்றவர்களும் அதே பாணியைத் தொடர்ந்து அறிவூட்டும் கட்டுரைகளை எழுதி வந்தனர்.

இவர்கள் வழியைப் பின்பற்றி ஆசிரியர் பணி செய்து வரும் கே.வைத்தியநாதன், அதேபோல் பல பொது விஷயங்களை எளிமையான நடையில் எழுதுகிறார். "கலாரசிகன்' என்ற பெயரில் தான் படித்துத் தெரிந்து கொண்ட, பார்த்து பழகித் தெரிந்து கொண்ட அனுபவங்களை சரளமான நடையில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இவரது காலத்தில் இலக்கியம் தொடர்பான நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்திகளாக இடம்பெறுகின்றன.

தினமணி நாளிதழின் எல்லா ஆசிரியர்களும் சிறந்த வாசகர்கள் என்பதனால், வாசகர்களுக்கு எதைத் தருவது? எப்படித் தருவது? என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. தினமணியின் தலையங்கங்களைப் போலவே கார்ட்டூன்களும், புத்தக மதிப்புரையும், தமிழ் மொழி இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் படித்து, பாதுகாத்து வைக்க வேண்டிய பகுதிகள்.

ஒவ்வொரு வருடமும் சங்கீத சீசனின் கச்சேரிகள், நாடகங்கள் பற்றி விமர்சனக் கட்டுரைகள் நிறைய வெளிவருகின்றன. இவையெல்லாம் தினமணி சமீபகாலமாக செய்து வரும் புதுமைகள். ஆசிரியர் கே.வைத்தியநாதன் வாசகர்கள் தொடர்பான பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதனால் வாசகர் - ஆசிரியர் உறவு மேம்பட்டிருக்கிறது.

அரசியல் களத்தைப் பொருத்தவரை தினமணி தொடக்கத்தில் இருந்தே நடுநிலை வகித்து வருவது பாராட்டத்தக்கது. அதனால்தான் தினமணியின் தலையங்கங்களுக்கு எல்லாத் தரப்பிலும் வரவேற்பு இருக்கிறது.

25 வருடங்களுக்கு முன்பு தினமணியின் நடுப்பக்க கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவையாகவே இருந்தன, இப்போது அப்படி அல்ல. பல புதிய கட்டுரையாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு கட்டுரைகள் என்பதே அபூர்வம் என்றாகி விட்டது. அந்தளவுக்கு சிந்தனையாளர்களை, கட்டுரையாளர்களை தினமணி வளர்த்துவிட்டிருக்கிறது என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

பத்திரிகை உலகில் தினமணி தொடர்ந்து முதலிடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் நிர்வாகக்குழுவுக்கும், ஆசிரியர் குழுவுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com