ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தவெகவில் இணைபவர்கள் தூய்மையானவர்கள் என்று கூறவில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருப்பது குறித்து வாசகர்கள் கருத்து...

தவெகவில் இணைபவர்கள் தூய்மையானவர்கள் என்று கூறவில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

News image

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 2:52 am IST

தவெகவில் இணைபவர்கள் தூய்மையானவர்கள் என்று கூறவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

எதார்த்தமானது

தவெகவில் இணைபவர்கள் குறித்து மாணிக்கம் தாகூர் கூறியது சரிதான். தன்னை வளர்த்தெடுத்த கட்சியை விட்டுக் கொடுத்து ஆளும் கட்சிக்குத் தாவும் நோக்கத்தில் எந்தக் கனி மறைந்திருக்கிறது என்பது நாடறிந்த விஷயம். இன்றைய அரசியல்வாதிகள் காமராஜர், அறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி உள்ளிட்டோர் போல இல்லையே. ஓடி வாருங்கள்} பதவிகளைஅள்ளித் தருகிறோம் என்று தவெக அமைச்சர்கள் அழைக்கிறார்கள். எனவே, தவெகவினரும் இன்றைய நிலைக்கு விரைவில் மாறிவிடுவார்கள். மாணிக்கம் தாகூர் சொன்ன கருத்து ஒரு எதார்த்தமான கருத்து.

பி. சுந்தரம், வெண்ணந்தூர்.

தவறல்ல...

மாணிக்கம் தாகூர் தெரிவித்திருப்பது முற்றிலும் சரியே. இன்றைய அரசியல்வாதிகளில் யாரும் கக்கனோ, காமராஜரோ, நல்லகண்ணுவோ அல்ல. தவெகவில் சேர்ந்துவிட்டால் அவர்கள் தூய்மையானவர்களாகவும் நல்லவர்களாகவும் மாறிவிட்டதாக கட்டமைக்கப்படுவதுதான் தவறு. இந்த உண்மையை மாணிக்கம் தாகூர் உரக்கக் கூறியிருப்பதை வரவேற்கலாம். தேர்தலுக்கு முன் திமுகவுடன் சேர்ந்து, தேர்தலுக்குப் பிறகு தவெகவுடன் சேர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி என காங்கிரஸ் தன் சுய லாபத்துக்காக எடுத்த முடிவும்கூட தூய்மையற்றவர்களின் முடிவு என்பதையே காட்டுகிறது.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

கொச்சைப்படுத்துவது

தற்போது தவெக ஆளும் கட்சி என்ற மோகத்தில், அதிமுகவில் குறுநில மன்னர்கள்போல இருந்தவர்கள் தவெகவில் இணைவதை தூய்மையானவர்கள் என்று ஏற்க முடியாது. இந்தக் கருத்தில் தவறேதும் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஒரு கூட்டணியின் சார்பில் மக்கள் பிரதிநிதியான பிறகு இன்னொரு கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலை எடுப்பதை தூய்மையான விஷயம் என்று கூறிவிட முடியாது. குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதைத் தடுக்கவே தவெக கூட்டணி என்று கூறுவது மட்டுமே தூய்மையான விஷயம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே, அவரின் கூற்று முன்னாள் காங்கிரஸாருக்கும் பொருந்தும்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

உண்மை நிலைமை

அரசியலில் தூய்மையும் நேர்மையும் இருக்கிறதா என்ற சந்தேகம் வலுவான நிலையில் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர் இப்படி உண்மையைக் கூறி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். பொதுநலனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சுயநலத்தை முன் நிறுத்தி அரசியல் செயல்பாடுகள் இருந்து வருவது என்பது, அரசியல் களத்தில் காலம் செய்யும் கோலம். வாக்கு செலுத்தும்போது ஜனமும், அரசியல்வாதிகளின் தூய்மையைப் பற்றி எல்லாம் பெரிதாகக் கவலைப்படுவதும் கிடையாது என்பதும் கூட தற்போதைய வருத்தத்துக்குரிய நிதர்சனமான உண்மையே.

அனன்யா, பொள்ளாச்சி.

நம்பிக்கையை உடைத்து...

தவெகவில் இணைபவர்கள் தூய்மையானவர்கள் என்று கூறவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது 100 சதவீதம் உண்மை. பிற கட்சிகளில் இருந்து தவெகவுக்கு வருபவர்கள் ஏதேனும் பிரதிபலனை பெற்றுக் கொண்டோ அல்லது தங்களுக்கு வருங்காலத்தில் பதவிகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலோதான் வருகிறார்கள். அதற்காக அவர்கள் சார்ந்திருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கைகள் என அனைத்தையும் உடைத்தெறிந்தே வருகின்றனர். பின் எப்படி அவர்களைத் தூய்மையானவர்கள் என்று சொல்ல முடியும்?

ராம், ஈரோடு.

சுற்றி வளைத்து...

அரசியலில் தூய்மையானவர்களை சல்லடை போட்டுத் தேடவேண்டியிருக்கும் இந்நாளில், மறைமுகமாக உண்மையைக் கூறும் மாணிக்கம் தாகூர் பாராட்டுக்குரியவர்.தேர்தல் நடந்து முடிந்த இரண்டு மாதங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சுயநலத்துக்காக பதவிகளை ராஜிநாமா செய்கிறார்கள். இது ஒன்றே போதும்} இவர்களின் தூய்மைத்தன்மையைக் காட்டுவதற்கு. இந்நிலையில் கூட்டணி தர்மத்தைக் காப்பதற்காகவும், தங்களது தற்போதைய கூட்டணியை நியாயப்படுத்தும் விதத்திலும் தனது கருத்தை சுற்றி வளைத்துக் கூறியுள்ளார் மாணிக்கம் தாகூர்.

கே.ராமநாதன், மதுரை.

தரம் தாழ்ந்து...

தவெகவில் இணைபவர்கள் அங்கு ஏதாவது பதவி கிடைக்கும் என்ற திட்டத்துடன்தான் வந்து சேர்கிறார்கள். அரசியல் நெறிகளுக்கு எதிராக ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகி விட்டதுதான் வெளிப்பட்டிருக்கிறது. சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்தவர்கள் இப்போது வந்தடைந்த கட்சிக்கு எப்படி உண்மையாக, விசுவாசமாக இருப்பார்கள்? பதவி மோகம் அரசியல்வாதிகளைப் பாடாய்ப் படுத்துவதால் பண்பாட்டு நெறிகளெல்லாம் பாழாகிக் கொண்டிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

முதல்வரின் பொறுப்பு

ஏற்கெனவே பதவியின் மூலம் பல்வேறு சுகங்களை சுவைத்தவர்கள் எதிர்காலத்தில் எந்தப் பாதையில் நடை போடுவார்கள் என்பது கேள்விக்குறிதான். இதை தவெக எப்படி தவிர்க்கப் போகிறது என்பது புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களிடம் எழுப்பப்படும் மில்லியன் டாலர் கேள்வி. இருப்பினும் முதலமைச்சர் விஜய் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு மூலம்தான் வெற்றி பெற முடியும் என்பதால், தங்களின் ஆட்டத்தை புதிதாகக் கட்சியில் இணைந்தவர்கள் சிலகாலம் கட்டுக்குள் வைத்திருப்பார்கள் என நம்பலாம். நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றத்தை நல்மாற்றமாக ஆக்கும் பொறுப்பு முதல்வர் விஜய்க்கு உள்ளது.

பொன் மனோகரன், திருப்பங்குன்றம்.

மனம் மாறுவார்கள்

தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு பல ஆதரவுகள் இருக்கும். அதனால் தோற்றுப் போன கட்சியில் இருக்கும் சிலர் எப்படிப்பட்ட மனது உடையவர்களாக இருந்தாலும் வெற்றி பெற்ற கட்சியில் சேர்வதற்கு முயற்சி செய்வர். அதை நாம் தூய்மையானவர்கள் என்று பார்க்கக் கூடாது; இது மாணிக்கம் தாகூருக்குப் புரியவில்லை. அதனால், அவருடைய பேச்சை ஒரு விமர்சனமாக ஏற்று மறந்து விட வேண்டும். தற்போது தவெகவில் சேர்ந்திருப்பவர்கள் தூய்மையான மனது உடையவர்களாக மாற வாய்ப்புள்ளது என்பதை மாணிக்கம் தாகூர் புரிந்துகொண்டால் சரி.

நந்தினி கிருஷ்ணன், சென்னை.

நேர்மைக்கு முன்னுரிமை

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள கருத்து அரசியல் பொறுப்புணர்வின் கோணத்தில் அணுகப்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியிலும் உள்ள அனைவரையும் முழுமையாக நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று பொதுப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. ஒருவரின் நேர்மை, சட்டபூர்வ நடத்தை மற்றும் பொதுநலச் செயல்பாடுகளே அவரை மதிப்பிடும் அளவுகோலாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும்போது அப்படிப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதுதான் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை உயரும்.

பிரகாஷ் ரா, வத்ராயிருப்பு.

சான்றாகாது

அரசியல் கட்சியில் இணைவது மட்டுமே ஒருவரின் நற்பெயருக்கும் நேர்மைக்கும் சான்றாகாது. அதைப் போலவே, ஒரு கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்குச் செல்வதும் அவர்களின் முழுமையான குணாதிசயத்தை நிர்ணயிக்காது. ஒரு அரசியல்வாதியின் மதிப்பை தீர்மானிப்பது, அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதல்ல; பொதுமக்களுக்காக அவர் ஆற்றும் சேவை, அவரின் செயல்பாடுகள், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பே முக்கியமான அளவுகோல்களாகும். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுத்துச் செல்வதே காலத்தின் தேவையாகும்.

ஈழ் க. குமார், அரக்கோணம்.

பழைய கலாசாரம்

ஒரு புதிய அரசியல் இயக்கத்தில் இணையும் அனைவரும் முழுமையாகக் குற்றமற்றவர்கள் என்று யாரும் கூற முடியாது. ஆனால், அதையே காரணமாகக் கொண்டு உறுப்பினர் சேர்க்கையில் தரம், ஒழுக்கம் மற்றும் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் ஏற்கத்தக்கதல்ல. மக்கள் அரசியல் மாற்றத்தில் எதிர்பார்ப்பது பழைய அரசியல் கலாசாரத்தை அல்ல; நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தையே விரும்புகின்றனர். எனவே, எந்தக் கட்சியாக இருந்தாலும், மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டுமெனில் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் கடுமையான அளவுகோல்களைப் பின்பற்ற வேண்டும்.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

கொள்கைக்கு எதிரானது

வெற்றிக் காற்று வீசும் திசையில் ஆட்சியில் பங்கு, பதவி, அதிகாரம் என்று வரும்போது வெவ்வேறு கட்சிகள் இணைவது எதார்த்தமான முடிவாகவே மக்கள் அவற்றை எடுத்துக் கொள்கின்றனர். மாணிக்கம் தாகூரின் இந்த விமர்சனம் தவெகவின் அடிப்படைக் கொள்கையான தூய சக்தி என்பதற்கு நேர் எதிரானது. தூய சக்தி, தீய சக்தி என்பதெல்லாம் போலி வசனங்கள், தேர்தல் நாடகத்துக்காக எழுதப்பட்டவையோ என்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அதன் கொள்கை பின்னடைவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இப்போது இது தவெக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் போட்ட "சேம் சைட் கோல்'.

இரா.இரவிக்குமார், சென்னை.

அரசியல் என்பது...

மாணிக்கம் தாகூர் கூறிய கருத்தை மறுப்பதற்கில்லை. மக்கள் பிரதிநிதிகளின் தேர்வு என்பது அவர் மக்களுக்கு எப்படி சேவை ஆற்றியுள்ளார் என்பதை அடிப்படையாக வைத்தே இருக்கும். அந்த சேவையில் ஒன்றுதான், அவர் தான் சார்ந்த கட்சிக்கு எந்த அளவில் விசுவாசமாக இருக்கிறார் என்பது. அதில் நேர்மை தவறும்போது மக்களின் நன்மதிப்பை அவர் இழக்க வேண்டி வரும். அரசியல் என்பது மக்கள் சேவை என்பதைத் தாண்டி பதவியைக் கைப்பற்றுவது என்றாகிவிட்டது. இதே நிலைதான் அவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ள கட்சிக்கும் நேரும் என்பதை காலம் நிரூபிக்கும்.

செந்தில் முருகன், காரைக்குடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.