தீவிரவாதமா? பயங்கரவாதமா?

உலகமெங்கும் தீவிரவாதமும்; பயங்கரவாதமும் மனித சமுதாயத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகப் பேசப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்படும் "தாலிபான்', "அல்-காய்தா' மற்றும் இலங்கையில்
Updated on
3 min read

உலகமெங்கும் தீவிரவாதமும்; பயங்கரவாதமும் மனித சமுதாயத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகப் பேசப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்படும் "தாலிபான்', "அல்-காய்தா' மற்றும் இலங்கையில் "விடுதலைப் புலிகள்' மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது; உலக நாடுகளும் இந்த இயக்கங்களுக்குத் தடைவிதித்துள்ளன.

  2001 செப்டம்பர் 11. அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிக வளாகம் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபோது உலகமே அதிர்ந்தது. அமெரிக்காவும், உலக நாடுகளும் அச்சம் கொண்டன. இந்தப் பயங்கரவாதம் களையப்பட வேண்டும் என உலக நாடுகள் ஒருமித்த குரல் எழுப்பின.

  இப்போது எங்கும் தீவிரவாதம் என்பதும், பயங்கரவாதம் என்பதும் ஒரே பொருளில் கையாளப்படுகின்றன. ஆனால் தீவிரவாதம் வேறு; பயங்கரவாதம் வேறு. இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது நல்லது.

  தீவிரவாதிகளுக்குக் கொள்கையும் உண்டு; கோரிக்கைகளும் உண்டு; வரித்துக் கொண்ட கொள்கைக்காக வருத்திக் கொள்ளும் மனம் படைத்தவர்கள்; கொண்ட கொள்கைக்காகவே உடல், பொருள், உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்காதவர்கள்; அவர்கள் புரட்சியாளர்கள். அவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கக் கூடாது.

  அவ்வாறு சித்திரிக்கப் புகுந்தால் வாஞ்சிநாதன், பகத்சிங், நேதாஜி இவர்களையெல்லாம் "பயங்கரவாதிகள்' என்று கூற நேரிடும். அரவிந்தர், பாரதி, வ.உ.சி., இவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். "நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை எதிரிகளே தீர்மானிக்கின்றனர்' என்பது புரட்சியாளரின் பொன்மொழி.

  எதிரி அகிம்சைவாதியாக இருந்தால் நாம் உண்ணாவிரதம் இருக்கலாம். எதிரி கொடுங்கோலனாக இருந்தால் நாமும் தீவிரவாதியாக மாற்றப்படுவோம் என்பதுதான் வரலாறு. பகைவன் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு வந்தால் நாம் பூங்கொத்துகளைக் கொண்டு போக முடியுமா?

  பகத்சிங்கும், அவன் தோழர்களும் எப்போது புரட்சிப் பாதைக்கு மாறினர்? "பஞ்சாப் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் காவல்துறையால் தாக்கப்பட்டு, அதன் காரணமாக மரணமடைந்ததால் அவரைத் தாக்கியவர்களைப் பழிவாங்க முடிவு செய்தனர். லாகூர் காவல்துறைத் தலைமையகத்தில் இருந்து வெளியே வந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சாண்டர்சை பகத்சிங்கும், இராஜகுருவும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆங்கில ஆட்சியை எதிர்க்குமுகமாக நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீச்சும் நடைபெற்றது.

  1914 ஆகஸ்ட் 4 - இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கும் இடையே போர் தொடங்கியது. ஜெர்மனிக்கு ஆதரவாக இந்தியப் புரட்சியாளர்கள் செயல்பட்டனர். தமிழகப் புரட்சியாளன் செண்பகராமன் ஜெர்மனியின் உதவியோடு நீர்மூழ்கிக் கப்பலில் தமிழகக் கடலோரம் வரைவந்து வெடிகுண்டுகளை வீசிவிட்டுச் சென்றான். இது ஆங்கில ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை.

  இந்திய சுதந்திர வரலாற்றில் மிதவாதிகளும் இருந்தனர்; தீவிரவாதிகளும் இருந்தனர். இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதிகள் ஒரு பிரிவாகவும், தீவிரவாதிகள் மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டனர். அரசியல் குறிக்கோள், அதை அடைகின்ற முறை ஆகியவற்றில் இரு பிரிவினரும் வேறுபட்டு நின்றனர்.

  மிதவாதிகள், இங்கிலாந்தின் குடியேற்ற நாடாக இநதியா விளங்கி சுய ஆட்சியினை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தனர். ஆனால் தீவிரவாதிகளோ எந்த அன்னியக் கட்டுப்பாட்டிற்கும் ஆளாகாமல் இந்தியா முழுச் சுதந்திரம் பெற்று சுதந்திர நாடாகத் திகழ வேண்டும் என்று முழங்கினர்.

  மேலும் தீவிரவாதிகள் முழுச் சுதந்திரம் பெற முயன்றதோடு, அரசியல் சுதந்திரம் பெறாது சமூகச் சீர்திருத்தம், கல்விச் சீர்திருத்தம், தொழில் விரிவடைதல் முதலிய எதுவும் நடைபெற முடியாது எனவும் கருதினர். விண்ணப்பம் கொடுப்பதும், வேண்டுகோள் விடுவதும், ஆங்கிலேயரின் தயவு வேண்டி நிற்பதும் "பைத்தியக்காரச் செயல்கள்' என்றும் கருதினர்.

  அரவிந்தர் "வந்தே மாதரம்' ஏட்டில் 1907 ஏப்ரல் 11 முதல் 23 வரை சாத்வீக மறுப்புக் கட்டுரைகள் எழுதினார். "சாத்வீக மறுப்பு' என்பது "புறக்கணிப்பு' என்பதுதான் என்றும், இது ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கும், அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்கும் துணைபோகாமல் இருப்பதுதான் என்றும் அவர் விளக்கம் அளித்தார். இக்கொள்கையே பின்னாளில் காந்தியடிகளின் ஆயுதமாகப் பயன்பட்டது.

  மிதவாதிகளோ தீவிரவாதிகளோ சாத்வீக மறுப்பு எனப்படும் ஒத்துழையாமைக் கொள்கையினை ஏற்கவில்லை. ஆங்கிலேயரின் பொருள்கள், அரசுப்பணி, பட்டம், பதவி முதலியவற்றைப் புறக்கணித்தல் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று எனவும், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றைப் புறக்கணித்தல் நல்ல பயனை விளைவிக்காது எனவும், வேலைநிறுத்தங்களை அரசாங்கம் அடக்குமுறையால் ஒடுக்கும் என்றும் மிதவாதிகள் கூறினர்.

  தேசியத்தை அரசியல் கோட்பாடாகக் கருதாமல் தீவிரவாதிகள் அதனை ஒரு சமயநெறியாகவும் கருதினர். தேசத்தை வழிபடுவதன் மூலமாக இறைவனை வழிபடுவதாக அரவிந்தர் முதலிய தீவிரவாதிகள் நம்பினர். அடக்குமுறைகளைக் கண்டு அவர்கள் அச்சம் கொள்ளவில்லை. அடக்குமுறை கூட ஆண்டவனின் சோதனை என நினைத்தனர்.

  "பஞ்சாப் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், ""நமது முதலாவது தேவை நாட்டுப்பற்றை சமயநிலைக்கு உயர்த்தி அதற்கென வாழ அல்லது சாகத் துணிய வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

  1905-ம் ஆண்டில் காங்கிரஸிற்குள்ளே புரையோடிப் போயிருந்த பிளவு தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரு பிரிவுகளாகி வெளிப்படையாகத் தெரிந்தன. கோகலே மிதவாதிகளின் தலைவராகவும், திலகர் தீவிரவாதிகளின் தலைவராகவும் மதிக்கப்பட்டனர்.

  திலகர் இவ்வாறு தீவிரவாதி, மிதவாதி என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. தீவிரவாதி எனப்படுவோர் அவர்களைவிடத் தீவிரமான புதிய சக்தி எழுகின்றபோது மிதவாதிகள் ஆகிவிடுவர் என்று குறிப்பிட்டார். எனினும் இவ்வாறு பிரித்துப் பார்ப்பதே அன்றைய சூழ்நிலையில் பொருத்தமாக இருந்தது.

  1905-க்குப் பிறகு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்தான் தீவிரவாதிகளின் இயக்கம். இவ்வாறு உலகம் முழுவதும் அடிமைப்பட்ட நாடுகளின் விடுதலைக்காக புரட்சியாளர்கள் தலையெடுத்துள்ளனர். இந்த இயக்கம் சரியா முறையா என்ற கேள்விக்கு உடனடியாகப் பதில் கூறுவது எளிதானதல்ல.

  மாத்யூ அர்னால்டு ஒரு கவிதையில் கூறுகிறான்: ""அரசியல் கொலைகளைச் செய்தவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் "வெற்றி வீரர்கள்' என்றும், பிடிபட்டு உயிர்துறப்பார்களாயின் "தியாகிகள்' என்றும் முத்திரை குத்தப்பட்டனர். ஆனால் ஒருபோதும் "குற்றவாளிகள்' என்று கருதப்படவில்லை.''

  இத்தாலிய விடுதலைச் சிற்பியான மாஜினி எண்ணிய குறிக்கோளினைத் தேசத்தின் பொருட்டு நிறைவேற்றச் சதியையும், கொலையையும் மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு உள்ளதை புரட்சியாளர்கள் தாரகமந்திரமாகக் கொண்டனர். இந்தியப் புரட்சியாளர்களும் வன்முறையில் அடக்குபவர்களைச் சட்டவழியில் பணிய வைக்க முடியாதபோது, வன்முறையே ஆயுதமாகிறது என்றனர்.

  அயர்லாந்து புரட்சியாளர்கள் ஐரோப்பாவில் ஏற்கப்பட்டதுபோல இந்தியப் புரட்சியாளர்களின் நடவடிக்கைகளும் ஐரோப்பியர் பலரால் ஏற்கப்பட்டது. ஆனால் இந்தியர்களைப் பொருத்தவரை அரசியல் தீவிரவாதம் இந்தியப் பண்பாட்டிற்கு ஏற்புடையதல்ல என்றே எதிர்த்தனர்.

  காந்தியடிகளும் இதனை ஏற்கவில்லை. கொள்கை நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. அதை அடையும் வழிமுறையும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். இந்திய தேசிய காங்கிரஸில் காந்தியடிகளுக்கு உடன்பாடு இல்லாதபோதும் பகத்சிங் முதலிய தீவிரவாதிகளைப் பாராட்டும் தீர்மானம் அவர் முன்னிலையிலேயே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பகத்சிங்கைக் காப்பாற்ற முயலவில்லை என்று மக்கள் அவருக்குக் கருப்புக் கொடி காட்டினர் என்பது மக்களின் மனப்போக்கைக் காட்டுகிறது.

  1857-ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போர் எனப்படும் சிப்பாய்கள் புரட்சியை "சிப்பாய்க் கலகம்' என ஆங்கிலேய அரசு வர்ணித்தது. அதுவும் ஆயுதம் தாங்கிய போராட்டம்தான். இப்புரட்சியால் இந்திய அரசியல் களத்தில் ஏற்பட்ட விளைவுகளை மறக்க முடியுமா?

  ஆட்சியாளர்கள் எப்போதும் மக்களின் அமைதியான வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பதில்லை. ""வன்முறைக்கு அல்லாது அவர்கள் எப்போது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்திருக்கிறார்கள்?'' என்று மிதவாதியான அன்னிபெசன்ட் அம்மையாரே கேட்டார்.

  எனவே தீவிரவாதம் சரியா, தவறா என்ற கேள்விக்கு அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்பவே பதில் கூற முடியும். அரசியல் என்பது நீதிநெறிக்கு உட்பட்டதாக இருந்தால் அகிம்சையே போதுமானது; தீவிரவாதம் தேவையற்றதாகிவிடும். இருட்டைப் போக்குவதற்கு ஆர்ப்பாட்டமும், போராட்டமும் தேவையில்லாதது; ஒரு சிறிய விளக்கேற்றி வைத்தாலே போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com