பலிகடா ஆகும் வங்கி வாடிக்கையாளர்கள்!
வங்கிகள் வாரம் ஒரு புதிய கிளையைத் தொடங்கி வருகின்றன. அறிவியலின் அபார வளர்ச்சியால் கணினி, இணையதளம் எனத் தொடங்கி, தற்போது ஏ.டி.எம். வரை வந்துவிட்டது வங்கிகளின் வளர்ச்சி. பணம் எடுப்பதற்கு


வங்கிகள் வாரம் ஒரு புதிய கிளையைத் தொடங்கி வருகின்றன. அறிவியலின் அபார வளர்ச்சியால் கணினி, இணையதளம் எனத் தொடங்கி, தற்போது ஏ.டி.எம். வரை வந்துவிட்டது வங்கிகளின் வளர்ச்சி.
பணம் எடுப்பதற்கு மட்டுமன்றி, பணம் செலுத்தவும் ஏ.டி.எம்.களை நிறுவிவிட்டன வங்கிகள். வங்கிகளின் எண்ணிக்கையும், நவீன தொழில்நுட்பங்களும் அபார வளர்ச்சியை அடைந்திருந்தாலும், அதில் கணக்கு வைத்திருக்கும் பொதுமக்களின் பிரச்னைகள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை.
வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், வங்கி ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட ஏ.டி.எம். மையங்களால், புதிய பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர் பொதுமக்கள். இப்பிரச்னையில் பொறுப்பாகப் பதில் சொல்ல வேண்டிய வங்கி மேலாளர்களோ, பாதுகாவல் பணியில் உள்ள காவலர்களை ஏவிவிட்டு தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றனர்.
ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், மாதம் 5 முறை (10 ஆயிரத்துக்கு மிகாமல்) கட்டணமின்றி மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்கள் அவசரத் தேவைகளுக்காக அருகில் உள்ள மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களை நாடுகின்றனர்.
÷இந்த ஏ.டி.எம். இயந்திரங்கள் பணம் எடுக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயல் இழப்பதால் ஏ.டி.எம். கார்டுகள் இயந்திரத்திற்குள் சிக்கிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பணத்தை எடுக்க முடியாமல், கார்டை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர்.
÷ஏ.டி.எம். மையத்தை நிறுவியுள்ள வங்கிகளில் சென்று கேட்டால், எங்களுடைய வங்கி கார்டாக இருந்தால் மட்டுமே திரும்ப வழங்குவோம். இல்லையென்றால் அந்த கார்டை உடைத்து விடுவோம். மற்ற வங்கிகளின் கார்டுகளை திரும்ப வழங்கக்கூடாது என ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ உத்தரவு உள்ளது. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று புதிய கார்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று வங்கி மேலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகரித்து வரும் இந்த ஏ.டி.எம். பிரச்னையால் அவசரத் தேவைகளுக்காகப் பணம் எடுக்கச் செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெளியூர்களில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காகத் தலைநகரங்களுக்கு வருபவர்கள், வெளியூரில் தங்கிப் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பெரும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர். இதனால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவது, தேர்வுக் கட்டணங்களைச் செலுத்துவது போன்றவை தடைபடுகிறது.
÷÷பஸ் பிரயாணிகள் சிலர் பஸ் நிலையங்களில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் எடுக்கச்சென்று ஏ.டி.எம்.இயந்திரத்தில் கார்டு சிக்கி கதறும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
÷ஏ.டி.எம். இயந்திரங்கள் அடிக்கடி செயல் இழந்து வருவதாகவும், ஏராளமானோர் கார்டுகளை இழந்து வருவதாகவும் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களே தெரிவிக்கின்றனர்.
மேலும் பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் புதிய கார்டு பெறுவதற்கு ரூ.200 வரை கட்டணம் செலுத்தி 20 நாள்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி கார்டு சிக்கிக்கொண்ட விவரத்தை வாடிக்கையாளர்களே மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்குத் தெரிவித்து, கார்டை தடை செய்ய வேண்டும் என வங்கி மேலாளர்கள் கூறுகின்றனர்.
வேறுவழியில்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், எதிர்முனையில் பேசுபவர் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேசுகிறார். இதனால் பாமர மக்கள் மொழிப் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். புதிய கார்டு வாங்குவதற்குள் படாதபாடு பட வேண்டியுள்ளது.
÷வாடிக்கையாளர்களின் இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்க வங்கியின் அதிகார மற்றும் நிர்வாக மையங்களை மாநிலத் தலைநகரங்களுக்கு மாற்றுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
÷வங்கியில் கணக்குத் தொடங்கியவுடன் ஏ.டி.எம்.கார்டுகளை வாங்குமாறு மக்களிடம் நெருக்குதல்களை அளிக்கும் வங்கிகள், ஏ.டி.எம். பிரச்னை பூதாகரமாக வெடித்தும் கூட, அதைக் கண்டு கொண்டதாகவோ, சரிசெய்ய நடவடிக்கைகள் எடுத்ததாகவோ தெரியவில்லை என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.
வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட தகுந்த ஆதாரங்களுடன் செல்லும்போது ஏ.டி.எம். கார்டுகளை திருப்பி வழங்க வேண்டும். வெளியூர் செல்பவர்கள் வங்கிக்கணக்கு புத்தகங்களை கையில் எடுத்துச் செல்வதில்லை.
எனவே பாரத ஸ்டேட் வங்கி நிறுவியுள்ளது போன்று ஏ.டி.எம். இயந்திரங்களில் கார்டுகள் உள்ளே செல்லாதவாறு, செருகி எடுக்கும் வகையில் அமைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு விடிவு கிடைக்கும்.
தொழில்நுட்பக் கோளாறு வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் தான் என்றாலும், பாதிக்கப்படுபவர்கள் என்னவோ பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்கள்தானே!
இனியாவது இந்தப் பிரச்னையில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பக் கோளாறு என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதற்காக வாடிக்கையாளர்கள் பலிகடா ஆவதை ஏற்க முடியாதே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...